Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நித்தமும் துணைக்கு வருவாள் நெல்லுக்கடை மாரியம்மன்!

அம்பிகையைக் கொண்டாடுவோம்!

நெல் வாணிபம் செய்யும் பெரியநாயகத்தம்மாளை அந்த ஊரில் எல்லோருக்கும் தெரியும். தொழிலில் நேர்மையும், அனைவரிடமும் கருணையும் கொண்டு பழகும் அவளை எல்லோருக்கும் பிடிக்கும். ஒருநாள்... மஞ்சள் நிறச் சேலை அணிந்த பெண்ணொருத்தி, 'எனக்கு நெல்லு வேணும்; கொஞ்சம் அளந்து கொடுங்களேன்'' என்று கேட்டாள்.

அந்தப் பெண்ணின் கனிவும் சிரிப்பும் பெரியநாயகத்தம்மாளை என்னவோ செய்தது! கடைக்குள் சென்று, மூட்டையில் இருந்து நெல்லை அளந்து கூடையில் போட்டு எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் ஆடிப்போனாள். அந்தப் பெண்ணைக் காணோம். அந்த நெல்லை அவளிடம் கொடுக்கும்போது, அவள் முகத்தை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டது நடக்காமல் போய்விட்டதே என்று வருந்தினாள் பெரியநாயகத்தம்மாள்.

அன்றிரவு... பெரியநாயகத்தம்மாளின் கனவில் தோன்றிய அந்தப் பெண்மணி, ''நான் மகமாயி! உன் வீட்டுக்கு அருகில் உள்ள வேம்பின் நிழலில் புற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்குக் கோயில் கட்டு. உன்னையும் இந்த ஊரையும் காப்பது என் பொறுப்பு!'' என்று சொல்லி மறைந்தாள்.

அதைக் கேட்டுச் சிலிர்த்துப் போனாள் பெரியநாயகத்தம்மாள். விடிந்தும் விடியாததுமாக எழுந்து குளித்துவிட்டு, அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் இருந்த புற்றுக்கு மஞ்சள்- குங்குமம் இட்டு, வழிபட்டு வந்தாள். அதே நேரம், பெரியநாயகத்தம்மாளின் கனவில் அம்மன் வந்ததும், புற்றில் அம்மன் குடிகொண்டிருப்பதும் தெரியவரவே, ஊர்மக்கள் அனைவரும் வந்து வணங்கிச் சென்றார்கள்.  

அதன்பிறகு, அங்கே அந்த இடத்தில் அம்மனின் திருவுருவத்தை செப்புத் திருமேனியாக வைத்து, ஸ்ரீமாரியம்மன் எனும் திருநாமம் சூட்டி வழிபடத் துவங்கினார்கள்; சிறிய அளவில் கோயிலும் அமைக்கப்பட்டது; அதையடுத்து அந்த ஊர் செழித்து வளர்ந்தது என்கிறது ஸ்தல வரலாறு. அந்த ஊர்... நாகப்பட்டினம்.

நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கில் சுமார் அரை கி.மீ. பயணித்தால், மாரியம்மன் கோயிலை அடையலாம். நெல்லுக்கடைகள் இருந்த இடத்தில் கோயில்கொண்ட அம்மன் என்பதால், நெல்லுக்கடை மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறாள். நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து 15 நிமிட நடைப்பயண தூரத்தில் அமைந்துள்ளது நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்.

கிழக்கு நோக்கிய அற்புதமான ஆலயம். கருவறையில், கருணை பொங்கும் ஸ்ரீமகா மாரியம்மன் கிழக்குப் பார்த்தபடி அழகுறக் காட்சி தருகிறாள். வீராசனத்தில் அமர்ந்தபடி, நான்கு திருக்கரங்களிலும் டமருகம், பாசம், கத்தி, கபாலம் ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தரும் தேவியைத் தரிசித்தால் நம் மொத்தக் கவலைகளும் காணாமல் போய்விடும் என்பது ஐதீகம்! இவளுக்கு எதிரில் சிறிய உருவிலான அம்மன் விக்கிரகமும் உள்ளது.

வருடத்துக்கு ஒருமுறை, பெரிய அம்மனுக்கு தைலக்காப்பு சார்த்தப்படுகிறது. சின்ன அம்மனின் விக்கிரகத் திருமேனிக்கு தினந்தோறும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. இரண்டு அம்மன்களைத் தவிர ஸ்ரீநடராஜர், ஸ்ரீஎல்லையம்மன், ஸ்ரீகாத்தவராயன், ஸ்ரீபெரியாச்சி அம்மன், ஸ்ரீபூரணை- புஷ்கலை சமேத ஸ்ரீஅய்யனார், ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசெல்லப் பிள்ளையார், ஸ்ரீகப்பல் பிள்ளையார், ஸ்ரீதுர்கை என தனிச்சந்நிதிகளில் அருள்புரிகின்றனர்.

ஸ்ரீஎல்லையம்மனும் மாரியம்மனைப் போலவே தனி விமானத்துடன் கூடிய கருவறையில், நான்கு திருக் கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி, ஐந்து தலை நாகம் படம் எடுத்துக் குடை பிடிக்க, வீராசனத்தில் அமர்ந்தபடி திருக் காட்சி தருகிறாள். இவளுக்கு எதிரில், மகுடம் தரித்த நிலையில், அம்மனின் சிரசு காட்சி தருகிறது. 'நெல்லுக் கடை மாரியம்மனுக்கு நேர்ந்துகொண்டால், விரைவில் நினைத்தது நடக்கும்; கேட்டது கிடைக்கும்; நித்தமும் நம் வாழ்வில் துணைக்கு வருவாள்’ என்கிறார்கள் பக்தர்கள்.

ஸ்ரீவிநாயக சதுர்த்தி, ஸ்ரீகந்த சஷ்டி, மார்கழி திருவாதிரை, சித்திரைப் பெருவிழா என விழாக்களுக்குக் குறைவில்லாத இந்தத் தலத்தில், ஆடி மாத வைபவங்களும் விசேஷம்! ஆடி செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், விசேஷ பூஜைகள் என விமரிசையாக நடைபெறுகின்றன. சித்திரைப் பெருந்திருவிழாவில் செடல் உத்ஸவம், காவடி, தேரோட்டம் என அமர்க்களப்படுமாம் ஆலயம். அந்த நாளில், ஸ்ரீகாத்தவராய சுவாமியையும் ஸ்ரீமாரியம்மனையும் மனதாரப் பிரார்த்தித்து, குழந்தைகளை செடல் சுற்ற அனுப்பி வைப்பார்கள். செடல் சுற்றி வந்த குழந்தைகளை எந்தக் காத்துக் கருப்பும் அண்டாது; நோய்கள் தாக்காது என்பது நம்பிக்கை!

மாவிளக்கு ஏற்றுதல், வேப்பிலைக் காவடி, சிலைகள் வாங்கி வைத்தல், இளநீர்க் காவடி எடுத்தல், பால்குடம் ஏந்தி வந்து தரிசித்தல் என, ஆடி மாதம் வந்தாலே பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்த எங்கிருந்தெல்லாமோ வருகின்றனர். நெல்லுக்கடை மாரியம்மனிடம் நெல்மணிகளையும் விதை நெல்லையும் வைத்துப் பிரார்த்திக்கின்றனர் விவசாயிகள். இதனால் விளைச்சல் செழிக்கும்; லாபம் கொழிக்கும் என்பது நாகைப் பகுதி விவசாயிகளின் நம்பிக்கை!

- மா.நந்தினி,
படங்கள்: இ.ராஜவிபீஷிகா