Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவை வெள்ளை முனியப்ப சுவாமிகள் கோவில் ஆடித் திருவிழா!

கோவை அருகேயுள்ள வெள்ளை முனியப்ப சுவாமிகள் கோயிலில் ஆடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

ஆடிப்பெருக்கு என்றால் கிராமத்து கோயில்கள் களைகட்டும். கிராமங்களில் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழா என்றால், அதற்கு தனி சிறப்பும், குதூகலமாகவும் இருக்கும். ஆனால், இப்போது நகரங்களிலும் ஆடி திருவிழாக்கள், கிராமத்துக்கோயில் திருவிழாக்களுக்கு இணையாகவும், அதைவிட கொண்டாட்டமாகவும் நடந்துக்கொண்டு இருக்கின்றன என்பதற்கு சான்றாய், புலியகுளம் வெள்ளை முனியப்பன் திருக்கோயில் ஆடித்திருவிழாவில் காண முடிந்தது.

கோவை மாவட்டம், புலியகுளம், பெரியார் நகரில் அருள்மிகு வெள்ளை முனியப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலை பற்றி மேற்கொண்டு அறிய திருப்பணிக்குழு தலைமையான விசாலாட்சியிடம் பேசினோம். "சுதந்திர காலத்தில் அதாவது 1938ஆம் ஆண்டு, நிலத்தில் இருந்து சுயம்புவாக முனியப்பசுவாமி 2 அடிக்கு தோன்றினார். அன்றிலிருந்து வருடாவருடம் சுயம்பு முனியப்ப சுவாமிகள் வளர்வதாக எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அதற்கு பிறகு, இப்பகுதி மக்களான எங்களின் முன்னோர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு நிதி திரட்டி, முதலில் சிறிய அளவில் கோவில் கட்டினர். முனியப்பசுவாமிகள் வெள்ளை மேனிக்கொண்டு எங்களை அருள்புரிவதால், வெள்ளை முனியப்பன் என்று பெயர். பின்பு, எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில்  இக்கோவிலின் சிறப்பு அறிந்து, கோவிலை விஸ்தரிக்க அரசு நிலம் தரப்பட்டது. பின்னர், ஐந்து வருடங்களுக்கு முன்னர், கோவிலை சீரமைப்பு செய்து புதுப்பித்தோம். சில வருடங்கள் இடைவெளியில் பொதுமக்கள் அனைவரும் இணைந்து நிதி திரட்டி, கோவிலை சீரமைத்து வருகிறோம். தற்போது இந்து அறநிலையத்துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

கோவிலில் இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றி, தலைமை குருக்களிடம் கேட்டோம். "இங்கு வெள்ளை முனியப்பசுவாமி மட்டுமன்றி, வெள்ளை விநாயக பெருமான், ஏழு கன்னிமார்கள், துர்க்கையம்மன், காவல் தெய்வம் அய்யனார் தரிசனமும் கிடைக்கிறது. ஒவ்வொரு மாதமும் 8 விதமான பூஜைகளை முனியப்ப சுவாமிகளுக்கு செய்து வருகிறோம். ஆடி மாதம், முனியப்பசுவாமிகளுக்கு விசேஷமான மாதமானதால், அனைத்து வித சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். அதுமட்டுமன்றி, நவராத்திரிகளில் துர்க்கை அம்மனுக்கு கோலகலமாக நவராத்திரி திருவிழா நடைபெறும்" என்றார்.

ஆடித் திருவிழாவையொட்டி, கோவில் வாசல் முதல் சுவாமி கருவறை வரை, அழகாகவும், வித்தியாசமாகவும் அலங்காரத்தில் வெள்ளை முனியப்பன், வெள்ளை விநாயகர், ஏழு கன்னிமார்களும் துர்க்கையம்மனும் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். திருவிழாவில், சிறப்புக்குரிய அம்மன் திருக்கல்யாணம், கரகம், உச்சி பூஜை, மஹாதீபாரதனை, அய்யன் திருவீதி உலா, மற்றும் மஞ்சள் நீர் பூஜை என விழா களைக்கட்டியது. பத்து நாட்களாக நடைபெற்ற திருவிழாவில், உற்சாகமாகவும், சந்தோஷத்துடனும் பக்தர்கள் சுவாமியை வழிப்பட்டனர்.

அ.சியாமளா கௌரி (மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்: மு.குகன் (மாணவப் பத்திரிகையாளர்)