Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘பதி விளக்கு’ பூஜை... எலுமிச்சை பிரசாதம்!

அம்மன் அருள் பெருகட்டும்!

சென்னை, அடையாறு- தெற்கு இந்திரா நகரில் கோயில் கொண்டு, எல்லோருக்கும் எல்லாமும் அருளும் கற்பக விருட்சமாய் அருள்பாலிக்கிறாள் ஸ்ரீதேவி முத்துமாரியம்மன். கி.பி.1967-ல் இந்தப் பகுதியில் வசித்த மூதாட்டிகள் சிலரின் முயற்சியால், சிறிய ஓலைக்கொட்டகையில் குடியேறினாளாம் அம்மன். பிற்காலத்தில்தான் கோயில் வளர்ச்சியடைந்தது என்கிறார்கள்.

அம்மன் விக்கிரகம் இங்கு வருவதற்கு முன்பாக, இந்த இடத்தில் ஸ்ரீராஜகணபதி எனும் பிள்ளையார் விக்கிரகம்தான் இருந்தது. இந்த ஊரின் ஆரம்பமே அவர்தான் என்கிறார்கள் பக்தர்கள். ஆடிமாதம் அம்மனை வழிபடுவதில் அதீத விருப்பம் கொண்ட வர்கள் இந்தப் பகுதி மக்கள். எனினும், அப்போது சுற்று வட்டாரப் பகுதிகளில் அம்மன் கோயில்களே கிடையாது. அதன் விளைவாகவே அம்மன் விக்கிர கத்தை இங்கே கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார்களாம். இன்றைக்கும் கோயிலில் பின்னிப் பிணைந்து காட்சி தரும் அரசு- வேம்பு விருட்சங்களின் கீழ் ஸ்ரீராஜகணபதியைத் தரிசிக்கலாம்.

கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஓலைக்கொட்டகை யிலேயே குடியிருந்தாளாம் முத்துமாரியம்மன். பிற்காலத்தில் அடுத்தடுத்துப் பொறுப்புக்கு வந்த கோயில் நிர்வாகிகளின் முயற்சியால், ஆலயம் கம்பீரமாக வளர்ந்து நின்றது. முதல் கும்பாபிஷேகம் 23.6.88-ல் நடைபெற்றது என்கிறார்கள் பக்தர்கள்.

ஆடித் திருவிழா இங்கே அமர்க்களமாக நடந்தேறும். ஆடி மாதம் துவங்குவதற்கு முன்னதாக வரும் திங்கட் கிழமையில், அதிகாலை வேளையில் பந்தக்கால் நட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெறும். பிறகு, ஆடி முதல் வெள்ளியன்று கணபதி ஹோமம் வளர்த்து பூஜைகள் முடிந்ததும், காப்புக் கட்டி சுப தருணத்தில் 'பதி விளக்கு’ ஏற்றுகிறார்கள். இது, இந்தக் கோயிலின் சிறப்பம்சம்.

விளக்கு ஒன்றில் தீபம் ஏற்றி, அதைச் சிம்ம வாகனத்தில் வைத்து அம்மனிடம் உத்தரவு பெறுவார்கள். 'இந்தத் தலத்தில் உனக்குத் திருவிழா நடத்தப் போகிறோம். நடத்தலாமா? கூழு ஊத்துவதற்கு உன் அனுமதி வேண்டும்...’ என, பிரகாசமாக எரியும் அந்த விளக்கு ஜோதியின் மூலம் அம்மனிடம் அனுமதி கேட்கிறார்கள்.

அம்மன் உத்தரவு கிடைத்ததும், பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும். அன்றைய தினமே ஊர் எல்லையில் உள்ள பெரிய பாளையத்து அம்மன் கோயிலில் இருந்து கும்பம் வைத்து, சக்தி கிரகம் எடுத்து வருவார்கள். மறுநாள், சனிக்கிழமை அபிஷேக- ஆராதனைகளைத் தொடர்ந்து, அம்மனின் வரலாற்றை கோயில் பூசாரிகள் கதையாகச் சொல்வார்கள். ஞாயிறன்று கூழ் வார்க்கும் வைபவம். அதைத் தொடர்ந்து அம்மனின் திருவீதியுலா நடைபெறுகிறது.

ஆடி- வெள்ளிகளில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தரும் அம்மனைத் தரிசிக்கக் கண்ணிரண்டு போதாது! ஆடி மாதம் 4-வது வெள்ளியும், தை மாதம் 4-வது வெள்ளியும் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

விழா துவக்கத்தில் பதி பூஜையில் எலுமிச்சைப் பழம் சமர்ப்பிப்பார்கள். பிறகு, ஞாயிறன்று கும்பம் கலைக்கும் தருணத்தில், குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு அந்தப் பழங்கள் பிரசாதமாகத் தரப்படும். அதை வாங்கிச் செல்லும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேபோன்று, கல்யாணம் தடைப்படும் அன்பர்களுக்கு இங்கே மஞ்சள் கயிறு கட்டுகிறார்கள். இதனால் வெகு சீக்கிரமே கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

ஆடிப்பூரமும் இங்கே விசேஷம்! அன்று சுமங்கலிகளுக்கு திருமாங்கல்யக் கயிறு, வளையல், குங்குமம், சீப்பு, கண்ணாடி என ஐந்து வகை பிரசாதங்கள் தரப்படுகின்றன. சித்ரா பௌர்ணமி- பாற்குட வைபவம், நவராத்திரி விழா, மார்கழி மாத பூஜை, விநாயகர் சதுர்த்தி ஆகியனவும் இங்கே கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

துர்கைக்கும் சப்த கன்னிமார்களுக்கும் இங்கு தனிச் சந்நிதி உள்ளது. வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும், ராகு காலத்திலும் இங்கு வந்து துர்கையை வழிபடுவதுடன், ஆலயத்தை வலம் வந்து ஸ்ரீமுத்துமாரியம்மனையும் மனமுருகிப் பிரார்த்திக்க, வாழ்வில் மகத்தான திருப்பங்கள் நிகழும்.

  கட்டுரை, படங்கள்: செ.கிரிசாந்