Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிள்ளையார்பட்டி கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

காரைக்குடி அருகில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், விநாயக சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
 

தமிழகத்தில் விநாயகப் பெருமானுக்கு என திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் முதலான சில தலங்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில், காரைக்குடியில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது பிள்ளையார்பட்டி திருத்தலம். இங்கு வருடந்தோறும் விநாயக சதுர்த்தி விழாவானது, வெகு விமரிசையாக நடைபெறும். இந்த வருடம் வருகிற 29.8.14 அன்று விநாயக சதுர்த்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி பிள்ளையார்பட்டியில் பத்துநாள் விழா அமர்க்களப்படும்.

இந்த விழாவானது, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9.15 முதல் 10.15 மணிக்குள், யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடந்தேறின. ஹோம பூஜைக்குப் பிறகு கொடியேற்றத்துடன் துவங்கியது விநாயக சதுர்த்தி விழா.
 

கோயில் டிரஸ்டிகள் முன்னிலையில் நடந்த விழாவில், ஆலயத்தின் தலைமை குருக்களான பிச்சை குருக்கள், சிறப்பு பூஜைகளைச் செய்தார். அப்போது, கோயில் சிவாச்சார்யர்களும் வேதபாடசாலையில் பயில்வோரும் வந்து, வேதங்கள் முழங்கினார்கள்.

இதையடுத்து, விநாயகப் பெருமானும் சண்டிகேஸ்வரரும் சப்பரத்தில் சர்வ அலங்காரத்துடன் திருவீதியுலா வந்தனர். 8ஆம் நாள் விழாவின் போது, சந்தனக் காப்பு அலங்காரத்தில் கண் குளிரக் காட்சி தருவார் கற்பக விநாயகர். வருடத்தில் இந்த ஒருநாள் மட்டுமே, இங்கு பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து தேரோட்டமும் நடைபெறும். அப்போது இரண்டு தேர்களை இயக்குவார்கள். ஒரு தேரை ஆண்களும் மற்றொரு தேரினை பெண்களுமாக வடம்பிடித்து இழுத்து வருவார்கள்.

10ஆம் நாளன்று, பிரமாண்டமான கொழுக்கட்டை நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.  பத்தாம் நாள், விநாயக சதுர்த்தி விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பக விநாயகரைத் தரிசிப்பார்கள்.

படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்