Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோகினி அவதாரம் நிகழ்ந்த திருத்தலம்! - ஆலய தரிசனம்!

 
   
துரை- மேலூர் சாலையில் உள்ள ஒத்தக்கடையிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தலம் திருமோகூர். வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றான திருமோகூர் மகிமைகளை, சுவாரஸ்யமாக விவரிக்கின்றன புராணக் கதைகள்!

முதலில், பிருமாண்ட புராணம் கூறும் கதை!

நாராயணமூர்த்தி தன் உந்திக் கமலத்திலிருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது அவரின் செவியில் இருந்து தோன்றிய மது- கைடபர் எனும்

அசுரர்கள், பிரம்மனின் அருகில் இருந்த வேதங்களைத் திருடிச் சென்று பாதாள லோகத்தில் மறைத்து வைத்தனர்.

இதையடுத்து மச்சாவதாரம் எடுத்த பெருமாள், வேதங்களை மீட்டு வந்தார். இதனால் கோபமுற்ற அசுரர்கள், பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து எழும்பும் தாமரைத் தண்டினைப் பிடித்து ஆட்டி, பிரம்மனுக்கு துன்பம் தந்தனர். இதைக் கண்டு ஆவேசம் அடைந்த பெருமாள், அசுரர்களைத் தூக்கி தன் தொடையில் அடித்து முறித்து, கடலில் தூக்கி எறிந்தார்.

தனது துன்பத்தை நீக்கி, வேதங்களை மீட்ட திருமாலுக்கு நன்றி செலுத்தும் விதமாக... பிரம்மன் பூலோகம் வந்து தீர்த்தம் அமைத்து திருமாலை வழிபட்டான். அதுவே திருமோகூர் தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம் ஆகும். இதை க்ஷீராப்தி புஷ்கரணி (திருப் பாற்கடல்) என்றும் கூறுவர்.

மோகனூர் தலத்துக்கு, 'மோகன சோத்திரம்' என்றொரு பெயரும் உண்டு. காரணம்?

கிருத யுகம்! துர்வாசரை மதிக்காததால், சாபத்துக்கு ஆளான இந்திரனின் செல்வங்கள் பாற்கடலில் மறைந்தன. தேவர்களது வலிமை குறைந்தது; அசுரர்களது வலிமை அதிகரித்தது.

கூடி ஆலோசித்த தேவர்கள், இறவா வரம் பெறுவதற்காக... பாற்கடலைக் கடைந்து அமுதம் பெறுவது என்று முடிவு செய்தனர். அசுரர்களும் இந்தப் பணியில் இணைந்து கொண்டனர். மந்தார மலை மத்தானது; வாசுகிப் பாம்பு கயிறானது. பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். முதலில், 'காளகூடம்' எனும் நஞ்சு வெளிப்பட்டது. அதன் வெம்மையைத் தாங்க முடியாத தேவர்கள் சிதறி ஓடினர். உடனே, சிவபெருமான் நஞ்சை உண்டு, தன் கண்டத்தில் இருத்தினார்.

பாற்கடல் மீண்டு கடையப்பட்டது. இதையடுத்து, உச்சை ச்ரவஸ் என்ற குதிரை, ஐராவதம் (வெள்ளை யானை), கேட்பதைக் கொடுக்கும் கற்பக மரம் ஆகியனவும் சந்திரன், அகலிகை, திருமகள் ஆகியோரும் வெளிப்பட்ட னர். கௌஸ்துப மணியும் தோன்றியது.

முடிவில் அமுதம் வெளிப்பட்டது. அதைப் பெறுவதில், தேவ- அசுரர் களுக்கு இடையே சண்டை ஏற்பட் டது. தேவர்கள், தங்களுக்கு உதவு மாறு பெருமாளை வேண்டினர்.

அவர், அழகிய மோகினியாக வடிவெடுத்து வந்தார். மோகினியின் அழகில் அசுரர்கள் மயங்கி விழ, தேவர்களுக்கு அமுதம் அளித்தார் பெருமாள். 'பெண்ணழகில் சலனப்பட்டால், இறை இன்பம் எனும் அமுதம் கிடைக்காது; இறைவனைத் தொழுது நின்றவருக்கே அமுதம் கிடைக்கும்!' என்பதை உணர்த்தவே மோகினி அவதாரம் எடுத்தார் பெருமாள். அவர், தேவர்களுக்கு அமிர்தம் வழங்கிய இடம்- திருமோகூர். எனவே, இந்தத் தலம் மோகன சோத்திரம் எனப்பட் டது. பிறகு மோகினியூர், மோகியூர் என்றெல்லாம் அழைக்கப் பெற்று... இறுதியில், திருமோகூர் என்ற பெயர் நிலைத்து விட்டது.

'திருப்பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிர்தத்தின் துளி, இங்கு விழுந்தது. அந்த இடத்தில் திருக்குளம் ஒன்றை தேவர்கள் உருவாக்கினர். அதுவே, திருப்பாற்கடல் (க்ஷீராப்தி தீர்த்தம்)' என்கிறது மத்ஸ்ய புராணம். இதற்கேற்ப... இங்கு பள்ளிகொண்ட கோலத்திலும் காட்சி தருகிறார் பெருமாள்.

இந்தத் தலத்துடன் தொடர்புடைய- துவாபரயுகத்தில் நிகழ்ந்த கதை ஒன்றும் உண்டு

பெருமாளின் அருள் வேண்டி புலஸ்தியர் எனும் முனிவர், இந்தத் தலத்தில் தவம் செய்தார். இதன் பலனாக தன் முன் தோன்றிய பெருமாளிடம், ''ஸ்வாமி, தங்களின் மோகினி கோலத்தைக் காட்டியருள வேண்டும்!'' என்று வேண்டி னார். அவ்வாறே அருள் புரிந்த பெருமாள், குழந்தை இல்லாத புலஸ்தி யருக்கு குழந்தை வரமும் தந்தார் (இதை யடுத்து புலஸ்தியருக்கு விஸ்ரவர் எனும் மகன் பிறந்தான்). இதன் பிறகு, முனிவர்களும் தேவர்களும் வேண்டிக் கொள்ள... இங்கேயே குடி கொண்டார் பெருமாள்.

இனி, ஆலய தரிசனம்!

தாமரைத் தடாகங்கள், பச்சைப் பசேல் வயல்கள் என்று எழில் சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டுள் ளார் ஸ்ரீகாளமேகப் பெருமாள். 'இது, தேவ சிற்பியான விஸ்வகர்மா எழுப்பிய கோயில்!' என்கின்றன புராணங்கள். வானளாவிய கோபுரம், வண்ணமிகு விமானங்கள், அழகிய மண்டபங்கள் மற்றும் பிராகாரங்களுடன் திகழ்கிறது இந்த ஆலயம்.

கோயிலுக்குள் நுழைந்ததும், வடக்கில்- கம்பத்தடி மண்டபம். இதன் கீழ் புறத்தில் உள்ள தூண்கள் பெரிய யாளியின் உருவங்களைக் கொண் டுள்ளன. தவிர, மருது சகோதரர்களின் சிற்பங் களையும் காணலாம்.

கருட மண்டபத்தின் (முன் மண்டபம்) தென் புறத்தூண் ஒன்றில், மன்மதன். நேர் எதிரில் உள்ள மற்றொரு தூணில் மன்மதனை நோக்கியபடி, அன்னப் பறவையில் அமர்ந்திருக்கும் ரதிதேவியைத் தரிசிக்கலாம். தவிர மண்டபத் தூண் களில்... ஸ்ரீராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோரையும் காணலாம். இந்த மண்டபத்தின் நடுவே பெருமாளை வணங்கியபடி நிற்கிறார் ஸ்ரீகருடன்.

கருட மண்டபத்தையடுத்து மகா மண்டபம். அதைத் தொடர்ந்து அர்த்த மண்டபம். அழகிய விமானத்துடன் கூடிய கருவறை. விமானம், இரண்டு தளங்களைக் கொண்டு காட்சி தருகிறது.

கருவறையில், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீகாளமேகப் பெருமாள். அருகில் ஸ்ரீதேவி- பூமிதேவி. ஸ்ரீகாளமேக பெருமாளை, 11 திருப்பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார் நம்மாழ்வார். உயிர்த்தோழனை 'ஆப்தன்' என்றழைப்பது போல, இந்தப் பெருமாளை அழைத்து போற்றுகிறார் நம்மாழ்வார்! மூலவர், ஸ்ரீகாளமேகமாய்க் காட்சி தர... உற்சவர், ஐந்து படைக்கலங்களுடன் காட்சி தருகிறார். தனிச் சந்நிதியில், கருணையே வடிவாகக் காட்சித் தருகிறார் ஸ்ரீமோகனவல்லித் தாயார்.

தாயார் சந்நிதியின் பின்புறம் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதி. முன்புறம் ஸ்ரீசக்கரத்தாழ்வார்; பின்புறம் நரசிங்கப் பெருமாள். மூலவர் கருவறைக்குத் தெற்கில் ஸ்ரீஆண்டாள் சந்நிதி அமைந்துள்ளது. இந்த சந்நிதிக்குக் கிழக்கில், முதல் பிராகாரத்தின்

வடகிழக்கு மூலையில் நவநீதகிருஷ்ணன் சந்நிதி. இந்த பிராகார திருமதிலின் வடக்கே பரமபத வாசல் உள்ளது. ஆடி வீதி எனப்படும் 2-ஆம் பிராகாரத்தில்- தென் கிழக்கு மூலையில், நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மண்டபம். இதை யட்டி, வடக்கு நோக்கிய ஸ்ரீஅனுமன் சந்நிதி.

இதே பிராகாரத்தில், வடகிழக்குப் பகுதியில் பள்ளிகொண்ட பெருமாள் சந்நிதி. இவர், பிரார்த்தனா சயனத்தில் காட்சியளிக்கிறார். இவர் அருகே ஸ்ரீதேவி-பூதேவி இருவரும், 'பள்ளி யறையில் எழுந்தருள வேண்டும்' என்ற பிரார்த்தனையுடன் கரம் கூப்பிய நிலையில் காட்சி தருகின்றனர். எனவே, இந்தப் பெருமாளின் சயனம், 'பிரார்த்தனா சயனம்' எனப் படுகிறது. இங்கு, பெருமாள் மட்டுமே திருவீதி உலா வருகிறார்; தாயார், படிதாண்டா பத்தினி! ஸ்தல விருட்சம் வில்வ மரம். சிலேடைக் கவிஞர் காளமேகம் தனிப் பாடல் ஒன்றில், திருமோகூர் காளமேகத்தின் மகிமைகள் குறித்துப் பாடியிருக்கிறார்.

இங்கு நடைபெறும் உற்சவங்களில் குறிப்பிடத் தக்கது கஜேந்திர மோட்ச உற்சவம். மாசி மாதம் பௌர்ணமி நாளில் கள்ளர் திருக்கோலம் தாங்கிப் புறப்படுகிறார் பெருமாள். 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்னல் ஹெரான் என்ற வெள்ளை யர், திருமோகூர் உற்சவமூர்த்தியைக் கவர்ந்து சென்று அழகர்கோவிலில் முகாமிட்டிருந்தான். அப்போது, கள்ளர் குலத்தைச் சேர்ந்த வீர மறவர்கள், அவனிடமிருந்து உற்சவரை மீட்டு வந்து திருமோகூரில் வைத்தனர். அந்த அன்பர்களுக்கு நன்றி செலுத்தும் விதம், தானும் கள்ளர் திருக்கோலம் தாங்கிப் புறப் படுகிறார் பெருமாள்!

காலையில் புறப்படும் பெருமாள், பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய பிறகு, மாலை வேளையில் சுமார் 500 மணிக்கு, ஒத்தக்கடை அருகே உள்ள ஆனைமலை ஸ்ரீயோகநரசிம்மர் கோயிலுக்குச் செல்கிறார். அன்று இரவு, மோகினி அவதாரத்துடன் எண்ணெய்க் காப்பு சாற்றித் திருமஞ்சனம் நடைபெறும். பிறகு, அந்தக் கோயிலுக்கு எதிரில் உள்ள குளத்தில் கஜேந்திர மோட்ச வைபவம் நடைபெறும். அப்போது, கருட வாகனத்தில் எழுந்தருள்வார் பெருமாள். மறு நாள் திருமோகூரை அடைவார்.

- இரா. வினோதினி
படங்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி