Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அறிவியல் யுகத்துக்கு அறச் சிந்தனைகள் பொருந்துமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி பதில்

முன்பெல்லாம், குழந்தைப்பேறு துவங்கி வாழ்வின் அனைத்து  முக்கியமான வைபவங்களிலும் அறத்தின் அறிவுரைகளும், வழிகாட்டலும் முக்கிய இடம் பெற்றிருந்தன. ஆனால், தற்போது அறப் பின்னணி அறவே அற்றுப்போய்விட்டது!

அறத்தின் வழியிலும், வேத வழிகாட்டலின் துணையுடனும் செயல்பட நினைப்பவர்களை, 'பழைமைவாதிகள்’ என்று புறந்தள்ளும் நிலையே மேலோங்கியிருக்கிறது. இதுகுறித்து தங்களின் விளக்கம் என்ன?

- வி.எம்.கிருஷ்ணானந்த், சென்னை-77  

மருத்துவம் முதலாக பல துறைகளிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மக்களின் நடைமுறைகளிலும் பிரதிபலிக்கிறது.

இயற்கை தந்த பெண்ணினத்தின் மாதவிடாய் திரைமறைவில் செயல்பட்டு, வெளியுலகத்துக்குத் தெரியாமல் இருந்த காலம் ஒன்று இருந்தது. சராசரியாக 13 வயதில் தோன்றும் அந்த நிகழ்வு, இப்போது 8, 9 வயதுகளிலேயே தென்பட ஆரம்பித்திருக்கிறது. 50-ல் மறையவேண்டியது 40-லேயே ஆரம்பமாகிறது!

இரண்டு வருட இடைவெளி எனும்படி அடிக்கடி மக்கள்பேற்றை சந்தித்தும், சந்தடி இல்லாமல் முழு சுகாதாரத்துடன் வாழ்ந்தார்கள்  அன்றைய குடிமக்கள். சத்தானவர்களாகவும் வளைய வந்தார்கள். அன்றைக்கு வீட்டிலேயே நடந்தேறிய பிரசவ நிகழ்வு, பின்னர் மருத்துவமனைக்கு இடம்பெயர்ந்தது. அது, மருத்துவத்தில் தனிப் பிரிவாகவே விஸ்வரூபம் எடுத்தது. மாதவிடாய் தொடர்பான பிணிகளும் பெருகிவிட்டன. அன்றைக்கு கந்தல் துணியில் சுத்தம் பெற்று வந்தார்கள். விஞ்ஞானம் புதுத்துணியை அறிமுகம் செய்து பொருளாதாரச் சுமையை திணித்திருக்கிறார்கள்.

எனில், இதுபோன்ற விஷயங்களில் நவீன மருத்துவம் சரியான முறையில் பங்களிக்கவில்லை என்கிறீர்களா?

மகப்பேறு என்பது, குடும்ப மூதாட்டியின் கண் பார்வையில், சுலபமாக சிக்கல் இல்லாமல் நிகழ்ந்த காலம் இருந்தது. அதையும் மருத்துவம் தனது விரிவாக்கத்துக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. காட்டில் மருத்துவர்கள் இல்லை. ஆனாலும், விலங்கினங் களின் இனப்பெருக்கம் தடையில்லாமல் நடைபெறுகிறது. மாதவிடாய்க் கோளாறு மழலையைத் தடுப்பதும் உண்டு. தாம்பத்தியத்தின் சுவையை தரம் தாழ்த்துவதும் உண்டு. மாதவிடாய், தாம்பத்தியம், மழலை ஆகியவை இயற்கையின் பரிசு. மருத்துவத்துக்கு பங்கு இல்லை. ஆனால், மருத்துவம் அவற்றை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருக்கிறது; பல காரணங்களைச் சுட்டிக்காட்டி, இனம் தெரியாத பயத்தை ஏற்கவைத்து, மருத்துவத்திடம் சரணடைய வைத்திருக்கிறது.

ஆனால், சிந்தனையாளர்கள் பலரும் இதை மருத்துவத்துறையின் வளர்ச்சியாகத்தானே பார்க்கிறார்கள்?

அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும். உணவு வழியாக ஊட்டச்சத்து இயற்கையாகவே சேர்ந்துவிடும். அதற்கு மாற்றாக ஊட்டச்சத்து மாத்திரையை அறிமுகம் செய்து, சுகாதாரத்தை நிலைப்படுத்தியதை, மருத்துவ வளர்ச்சியாகப் பார்க்கிறார்கள்.

இயற்கை மகப்பேறு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. நாம் விரும்பிய வேளையில் மழலையை எடுத்துத் தந்து விடுவார்கள். குறைப் பிரசவம் ஆனாலும் செயற்கை முறையில் காப்பாற்றித் தருவார்கள். தாய்ப்பால் ஒரு பொருட்டல்ல. அதற்கு மாற்றாக மழலைக்கு உகந்த பால் உணவு அங்காடியில் கிடைக்கும். வயிற்றைக் கீறி குழந்தையை எடுப்பது என்பதை, 'தாயின் சுகாதாரத்தைப் பாதிக்காதது’ என்பார்கள். 'மலடி’ என்ற சொல் இனி இருக்காது. செயற்கை முறையில் குழந்தைச் செல்வத்தை அளிப்பார்கள்!

ஆக, பலன் உண்டு என்றாலும் பாதிப்பு பன்மடங்கு என்று எடுத்துக் கொள்ளலாமா?

இறக்கை முளைத்து விண்வெளியில் உலாவும்வரை தாய்ப்பறவை குஞ்சுக்கு பாதுகாப்பு அளிக்கும். கிட்டத்தட்ட ஒரு வருஷ காலம் கன்றுக்குப் பால் கொடுக்கும் பசு. நாயும் பூனையும்கூட குட்டிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் சுணக்கம் காட்டாது.

மனிதனோ, தன் குழந்தையின் பாதுகாப்பை மூன்றரை வயதில் திரும்பப் பெற்றுவிடுகிறான்; கல்விக்கூடத்தின் பாதுகாப்பில், பராமரிப்பில், வழிகாட்டுதலில் வளர்கிறது குழந்தை. மனிதப் பண்புகள் எதுவும் அந்தக் குழந்தையின் மனத்தில் பதிய வாய்ப்பு இருக்காது. இன்றைய கல்விக்கூடங்களில் வியாபார நோக்கு கலந் திருக்க வாய்ப்பு உண்டு. அங்கே, குழந்தையின் மன வளர்ச்சியிலோ, சுகாதாரத்திலோ நாட்டம் இருக்காது. பெற்றோர் வேலைக்குச் சென்றுவிடுவதாலும், குழந்தைகள் பராமரிப்பில் கவனக்குறைவு ஏற்பட்டுவிடும்

.

இப்படியான நிலை, அந்தக் குழந்தைகள் இளமையை எட்டும்போது, பொறுப்பில்லாதத் தன்மையை அவர்களின் இயல்பாக்கிவிடுகிறது. அன்பு, பாசம், அடக்கம், சகிப்புத்தன்மை ஆகிய எதுவும் அவர்களுக்குப் பரிச்சயம் இல்லாததாக மாறிவிடும். அவர்கள்  சமுதாயத்தில் இணையும் வேளையில் புது உலகை நோக்குவார்கள். அவர்களில் பலரும், முயற்சியில் தோல்வியுற்று வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு, தரம் தாழ்ந்த குடிமகனாக மாறுவதும் உண்டு. அவன் தரமான குடிமகனாக வளர்வதற்கு, அவனுக்கு அறக் கல்வி அளிக்க வேண்டும். இன்றைய இளைஞர்களின் தகாத போக்குக்கு, அறக்கல்வி மறைந்ததுதான் காரணம் என்றால், பொய்யாகாது.

அறக் கல்வியின் அவசியம் என்ன?

மகாத்மா காந்தியும், நேருவும், படேலும் அறக்கல்வியுடன் இணைந்து வளர்ந்தவர்கள். காந்தி இறக்கும் தறுவாயிலும், 'ராமா’ என்று இறைவனை நினைத்து மறைந்தார். ஆன்மிக அறிவு பெற்ற  ராதாகிருஷ்ணன், இந்தியாவின் முதல் குடிமகன் எனும் நிலைக்கு உயர்ந்தார். இவர்களைப் போன்றோர், பாரத மக்களை ஒரு குடும்பமாக பாவித்து, அத்தனைப் பேருக்கும் சுதந்திரம் அளித்து  மகிழ்ந்தவர்கள். அவர்களுடைய அத்தனை சாதனைகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்திருந்தது அறக்கல்வி.

வரும் தலைமுறையினரும் அறக்கல்வியின் பின்னணியில் வளர இடமளிக்க வேண்டும். அப்போது மனிதப் பண்பு வளர்ந்து சமுதாயம் சொர்க்கமாக மாறிவிடும். இன்று காணப்படும் கொந்தளிப்பு- சலசலப்புக்கு, மனிதப் பண்பின் தேய்மானமே காரணம். குடும்ப உறவுகள் மறைந்துவிட்டன. சுயநலம் மேலோங்குகிறது. அதைச் சட்டத்தால் தடுக்க முடியாது. அறக்கல்வியே அதற்கு மருந்து. அதேபோல், பெண்ணினத்தின் பெருமை மங்குவதிலும் அறக் கல்வியின் இழப்புக்கு பங்குண்டு.

நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்க முடியாது!

காலமாற்றம் அறக்கோட்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். பண்டைய அறநூல் களில் மாறுபட்ட கருத்துக்கள் நிறைந்திருப்பது அதற்குச் சான்று. உலகளாவிய நிலையில் புது தலைமுறையினரிடம் சிந்தனை மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதையட்டியே சட்டங்களும் அரங்கேறும்.

இன்றைய புதிய சிந்தனைக்கு ஏற்ற கருத்துக்கள் பழைய அறநூல்களில் இல்லை என்கிறீர்களா?

பழங்கால சமுதாய அமைப்பு இன்று இல்லை எனலாம். அந்தக் காலத்து அறநூல்களின் பரிந்துரைகள் இன்றைய சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டாது. கலப்புத் திருமணம், விதவை மறுமணம், விவாகரத்தின் விரிவாக்கம், குலத்தொழிலின் மறைவு, பண்டைய கலைகளிடத்து பாராமுகம் ஆகிய அத்தனையையும் சமுதாயம் ஏற்றுக்கொண்டு, விஞ்ஞான விளக்கங்களை வரவேற்று, புதிய சமுதாயத்தைப் பெருமையுடன் ஏற்று மகிழ்கிறது.

சமயமும் சம்பிரதாயங்களும் ஏட்டில் இருக்கின்றன. நடைமுறையில் லோகாயத வாழ்க்கையே தென்படுகிறது. ஆக, பண்டைய அறக்கோட்பாடுகளை ஏற்கும் நிலையில், இன்றைய மனித மனம் இல்லை. பல நாடுகளில் அறம் கைகொடுக்கவில்லை. எல்லோரும் விரும்புவது லோகாயத வாழ்க்கையையே. அதற்கு, அறம் தேவையில்லை. சில நாளேடுகள் அறத்தைப் புதுப்பித்து வெளியிட்டாலும் இலக்கு வேறாகத்தான் இருக்கும்.

ஆனால் இன்றைக்கும் கோயில்களில் ஆன்மிகச் சொற்பொழிவுகளும், உபந்நியாசங்களும் நடைபெறுகின்றனவே! இங்கெல்லாம் சொல்லப்படுவது அறக் கருத்துக்கள்தானே?

ஆன்மிகச் சொற்பொழிவும், புராண விரிவுரைகளும், பக்திப் பேருரைகளும் பண்பையும் அறத்தையும் மனத்தில் பதிய வைக்கும் திறமை குன்றியதாகவும் தென்படுவது உண்டு. இன்னும் சொல்லப் போனால், பேருரைகள் தொழிலாகத் தென்படுகிறதே தவிர, தொண்டாக மாறவில்லை. லோகாயத வாழ்க்கையை எட்டிப் பிடிப்பதற்காக ஆன்மிக வாழ்க்கையை ஏற்றவர்களும் உண்டு. நம் நாட்டு அறத்தை வெளிநாட்டவர்களுக்கு விளக்கிக் கூறுவதும் உண்டு. பாகுபாடின்றி, பொது விநியோகப் பட்டியலில் அறம் புகுந்துவிட்டது. அரங்கம் நிரம்பி வழியும். அந்த வேளையில், அறக்கோட்பாடுகள் மனத்தில் மின்னல் போல் பளிச்சிட்டு மறைந்துவிடும். நிரந்தரமாக மனத்தில் பதியாது.

ஜோதிடமும், பரிகாரமும், வழிபாடும் அன்றாடம் தேவைகளைப் பெறப் பயன்படுகின்றன. ஆன்மிக வழியில் அதாவது அறவழியில் லோகாயத வாழ்க்கை பெற முயற்சிப்பவர்களும் உண்டு. இங்கெல் லாம் இலக்கு மாறுபட்டுச் செயல்படுகிறது. மற்ற நாடுகளில் எல்லாம் அறம் தொடாத வாழ்க்கையில், தேவையைப் பெற்று வாழ்க்கை மகிழ்ச்சியாக சுவைக்கப்படுகிறது. ஆக, அறப் பின்னணி என்பது பயனளிக்காதபோது, அதை வலுக்கட்டாயமாகத் திணிப்பது தவறு.

நீர், நிலம், ஆகாயத்தில் வளைய வரும் கோள்கள் ஆகியவற்றின் ரகசியங்களை அறிவதில் வெற்றிகண்ட மனிதனின் சிந்தனை, உள்ளங்கை நெல்லிக்கனியாக உலகத்தைக் கையில் அடக்கும் தகுதியை

எட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை. இப்படியிருக்க, மனத்துக்கு அறப் பின்னணி வேண்டும் என்பது சிறுபிள்ளைத்தனம்.

ங்களின் சிந்தனை மக்களுக்குப் பிடித்தமாக இருப்பதால், அவர்களது பாராட்டு வேண்டுமானால் கிடைக்கலாம். அதற்காக நீங்கள் சொல்லும் கருத்து உண்மையாகி விடாது. மக்களுக்கு இதத்தை அளிக்கும் சிந்தனையே சிரஞ்ஜீவியாக இருக்கும்.

லோகாயத வாழ்வைச் சுவைக்கவும் தெளி வான மனம் வேண்டும். மனிதனின் இலக்கு என்பது நிம்மதியான வாழ்வு. பதற்றமான- நிலையில்லாத மனமானது செழிப்பை எட்டி னாலும், நிம்மதியைப் பெறாது. அதைப் பெறுவதற்கு அறமும், ஆன்மிகமும் அவன் மனத்துடன் இணைய வேண்டும். செழிப்பான பொருளாதாரமும், தங்குதடை இல்லாத செல்வாக்கும் மட்டுமே மன அமைதியை ஈட்டித் தராது.

எனில், பூரணத்துவமான மன அமைதிக்கு என்னதான் வழி..?

மனத்தின் செயல்பாடுதான் உலக செயல்பாட்டை வரையறுக்கும். வெளியுலகத்துக்கு நாம் சொல்லும் அறிவுரைகள் அத்தனையும், நம் மனம் தீர்மானம் செய்த தகவல்தான். நம் உள்ளுக்குள் ஓர் அரசாங்கமே நடக்கிறது. அதுவே, வெளி அரசாங்கத்துக்கு விதையாகிறது.

உலக நிகழ்வுகள், சட்டங்கள், சம்பிரதாயங்கள் ஆகிய அத்தனையும், மனம், புத்தி, சித்தம், அஹங்காரங் களின் பிரதிபலிப்பு. வெளித் தோற்றத்தில் மகிழ்ச்சியை எட்டிய இன்றைய உலகம், பயந்து நடுங்கிக்கொண்டுதான் வாழ்கிறது. தீவிரவாதிகள் எப்போது, எங்கே, எப்படி தாக்குவார்கள் என்ற சிந்தனையில் ஆழ்ந்து தவிக்கிறது. பணம், படைபலம், செல்வாக்கு, செயல்திறன் எல்லாம் இருந்தும், ஒரு நொடிகூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. லோகாயதம் சுகபோகங்களை அள்ளித் தந்திருக்கிறது. ஆனால், மனம் அதை சுவைக்கும் நிலையில் இல்லை; இனிப்பை ஆவலோடு எதிர்பார்க்கும் சர்க்கரை வியாதிக்காரன் போன்று!

படிப்பும், பட்டமும், பணமும், பெருமையும், புகழும், பெயரும் மன அமைதிக்குப் பயன்பட வேண்டும். அதனுடன் அறப் பின்னணி இணைந்தால், எளிதில் மன அமைதி பெற்று இன்பத்தைச் சுவைக்கலாம்.

எனில், அறம் சார்ந்த செயல்பாடுகள் மனிதகுலத்தை உயர்த்திவிடுமா?

அறம் இல்லாமல் ஓர் அடியும் அசைய முடி யாது. நிரந்தர சித்தாந்தம் காலத்தால் மாசு படாது. தவறான வழியில் பயணிக்கும் மக்களைத் திருத்த அறத்தால் மட்டுமே இயலும்; சட்டதிட்டங்கள் பயன்படாது. உலகம் தோன்றிய நாளில் அரசனும் இல்லை, அமைச்சரும் இல்லை, சட்டமும் இயற்றப்படவில்லை. அறம் ஆட்சி புரிந்தது. அறப் பின்னணியானது அவர்களை தன்னிச்சையாகச் செயல்படவைத்தது. பின்னர், பலசாலியானவன் பலமில்லாதவனை ஆட்கொள்ள ஆரம்பித்தான். பலம் இல்லாத வனை மீட்க தலைவன் ஒருவன் தேவைப் பட்டான். சின்ன மீனை பெரிய மீன் விழுங்கிவிடும். அதுபோன்று, ஒரு சாராரது வாழ்க்கை நாசமாவதைத் தடுக்க, ஒரு தலைவன் தேவைப் பட்டான்; அவனே பின்னர் அரசனாக மாறினான் என்று சாணக்கியன் கூறுவார். ஆனால் இன்றைக்கு, 'அறமே அரசாட்சி செய்யும் தகுதி பெற்றது’ என்பதை மறந்து, எளியோரை வலியோர் தாக்குவதைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கும் சூழல் தென் படுகிறது. சூழலுக்கு உகந்த சட்டம் வேண்டும் என்கிற குரல்களும் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. அறப் பின்னணியை ஏற்றால், இழிவான அத்தனை ஆரவாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். அப்படியான ராம ராஜ்ஜியத் துக்கு அறப் பின்னணி அவசியம்.

தங்களின் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

தென்படும் உயிரினங்கள் அத்தனையும் இயற்கையின் செல்வம். அவை நிம்மதியாக வாழ அறப் பின்னணி அவசியம். மனித மனம், தனது வாழ்க்கையை மட்டுமே முன்னிறுத்தி, தனக்குச் சாதகமான சட்டங்களையே இயற்றி மகிழ நினைக்கிறது. ஆனால், அறப் பின்னணி இல்லாது போனதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதற்குத் தீர்வு காண மனித சிந்தனை வழிகாட்டாது. அறச் சிந்தனையே வழிகாட்டும். இதை அறியும் திறன் மனித மனத்துக்கு வரவேண்டும்.