Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவை பூம்புகாரில் நவராத்திரி கொலு கண்காட்சி! (படங்களுடன்)

கோவை  பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையையொட்டி கொலு கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது.
 

நவராத்திரி என்பது முப்பெருந்தேவியர்களான துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களைப் போற்றிக் கொண்டாடும் நவராத்திரி விழா, தொன்று தொட்டே தமிழகத்தில் நவராத்திரி தினங்களில் கொலு வைத்து கொண்டாடப்படுகிறது.

மண் மற்றும் மரத்தாலான நவராத்திரி பொம்மைகளை 9 படிகளில் முதல் படியில் ஒரறிவு உயிர் பொருள்களான புல், செடி, கொடிகளும், இரண்டாவது படியில் ஈரறிவு உயிர்ப் பொருள்களான நத்தை, சங்குகளும், மூன்றாவது படியில் மூன்றறிவு உயிர்ப்பொருட்களான கரையான், எறும்புகளும், நான்காவது படியில் நான்கறிவு உயிர்ப்பொருட்களான நண்டு, வண்டுகளும், ஐந்தாது படியில் நான்கு கால் விலங்குகள், பறவைகளும், ஆறாவது படியில் ஆறறிவு மனிதர்களும்,  ஏழாவது படியில் மகரிஷிகளும், எட்டாவது படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்களும், ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் அவர் தம் தேவியர் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் படி அமைப்பர்.
 

இவ்வாறு மனிதன் இயற்கையுடன் இணைந்து குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேற வேண்டும் என்ற தத்துவப்படி கொலு பொம்மை அமைக்கப்படும். நவீன கால கலைப் பொருட்கள் எத்தனை வந்தாலும் கைவினைஞர்களின் கைவண்ணக்கலை பொருட்களே கொலுவிற்கு சிறப்பு.
 

கோவை பெரிய கடைவீதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையொட்டி கொலு கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது. இக்கண்காட்சியில் பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள் கொண்ட பள்ளி பொம்மைகள், மரபாச்சி பொம்மைகள், மர  மற்றும் மண் காகிதகூழ், பளிங்குகளினால் ஆன பொம்மைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, காய்கறிகள் போலே உள்ள கத்திரிக்காய், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, அவரை, வாழைப்பழ பொம்மைகள், பல்தொழில் செய்யும் தொழிலாளர், விவசாய பூமி, பள்ளி வகுப்பறை பொம்மைகள் அனைவரையும் கவர்ந்துவிட்டது. அக்டோபர் நான்கு வரை நடக்கும் இக்கண்காட்சியில் 10 ரூபாய்  முதல் 10,000  ரூபாய் வரை விலையில் பொம்மைகள் கிடைக்கிறது. அனைத்து பொம்மைகளுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
 

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட உருவங்களை சக்தியாக நினைத்து நவராத்திரியில் வழிபட்டால் எல்லா நலமும், வளமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இது ஒருபக்கம் இருக்க கைவினை தொழிலையே வாழ்வாதரமாக கொண்டுள்ள கைவினைக் கலைஞர்களை ஊக்குவித்த திருப்தியும் இதனால் கிடைக்கும்.

இரா.ஆனந்தி

படங்கள்:
மு.குகன்