Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேதங்கள், புராணங்களுக்கு வெவ்வேறு விளக்கங்கள் அவசியமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

வேதங்கள், இதிகாச- புராணங்கள், பகவத் கீதை போன்ற வற்றுக்குப் பல்வேறு விளக்கவுரைகள் சொல்லப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும் வாய்ப்பு உள்ளது அல்லவா? இதனால், மூலத்தின் உண்மைத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுமே? இதுகுறித்து விளக்குங்களேன்!

 - தி.முருகன், கோவை

புத்தர் பேரறிவு பெற்றார். தன்னுடைய உணர்வை உற்சாகமாக வெளியிட்டார். அதைக் கேட்ட நான்கு பேர் நான்கு விதமாக உணர்ந்தனர். புத்தரின் கொள்கைகள் ஹீனயானம், மஹாயானம், ஸெளத்ராத்திகம், வைபாஷிகம் என நான்கு விதமாக உருவெடுத்தது.

வியாசர் பிரம்மசூத்திரத்தை உலகுக்கு அளித்தார். ஆதிசங்கரர், ராமானுஜர், மாத்வர், வல்லபர் ஆகியோர் அதற்கு மாறுபட்ட விளக்கங்கள் அளித்தனர். அத்துடன், அத்தனை மாறுபட்ட விளக்கங்களுக்கும் வியாசரின் பிரம்ம சூத்திரம் இடம் அளித்திருக்கிறது என்று அதற்குப் பெருமை சேர்த்தார்கள். பூமியில் விழுந்த தண்ணீர், ஆறுகள் வாயிலாகக் கடலை அடையும். விளக்கங்கள் மாறுபட்டாலும், அத்தனை பேருக்கும் இலக்கு ஒன்றுதான் என்ற ரீதியில் துணிச்சலாக அவர்கள் விளக்கம் அளிக்க முற்படவில்லை.

போரில் சுணக்கமுற்ற அர்ஜுனனை உசுப்பிவிட, பகவத்கீதை உதயமானது. அது அறிவைப் புகட்டுகிறது என்றார் ஒருவர். செயல்பாட்டின் பெருமை விளக்கப்படுகிறது என்றார் வேறொருவர். பக்திக்கு முன்னுரிமை அளிக்கிறது என்றார் மற்றொருவர். அதன் குறையை நிறைவு செய்ய கண்ணன் வாக்கு எல்லோரது விளக்கத்துக்கும் இடமளிக்கிறது என்று, கீதை குறித்த மாறுபட்ட விளக்கங்களுக்குப் பெருமை சேர்த்தார்கள்.

ராமனைப் போன்று வாழவேண்டும்; ராவணனைப் போன்று மாறிவிடாதே என்று ராமாயணத்தின் விளக்கத்தை இறுதி செய்தார் ஒருவர். சீதையின் பெருமையை விளக்க வந்தது ராமாயணம்; இல்லையில்லை, ஹனுமனின் பெருமையை எடுத்துரைக்கிறது; பரதனின் பக்தியே மிளிர்கிறது... இப்படி, மாறுபட்ட விளக்கங்கள் தோன்றின.

தர்மம் அதர்மத்துடன் மோதினாலும், கடைசியில் தர்மமே வெல்லும். இது, மகாபாரத விளக்கம் என்பார் ஒருவர். கிருஷ்ணரின் பெருமையை விளக்க வந்தது என்று மற்றொருவர் கூறுவார். இல்லை, பாண்டவர்களின் நன்னெறி விளக்கப்படுகிறது என்றும், பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை இந்த மூன்றும் அழிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்ல வந்தது எனவும் மாறுபட்ட விளக்கங்கள் உண்டு.

பாகவதம் பக்தியை விளக்குகிறது; இல்லை, இல்லை... அது, உன் உடலில் ஒன்றியிருக்கும் ஆன்மாதான் பரமாத்மா என்று உணர்த்துகிறது; எல்லாம் துறந்து பரம்பொருளில் அடைக்கலமாகிவிடு என்று பரிந்துரைக்கிறது; அதுவும் இல்லை, பக்தியே முக்தியளிக்கும் என்ற தத்துவத்தை விளக்குகிறது; அதுவும் சரியில்லை, அதில் கண்ணனின் விளையாட்டுகள் பெருமைப்படுத்தப்படுகின்றன; அதெல்லாம் இல்லை, மனிதனின் மனத்தில் இருக்கும் மாசுக்கள் அகற்றப்படுகின்றன எனப் பலப்பல விளக்கங்கள். ராமாயணம், பாரதம், பாகவதம் இம்மூன்றும் கதை வாயிலாக பாமர மக்களை நல்வழிப்படுத்துகின்றன என்று விளக்கம் அளிப்பவர்களும் உண்டு.

சொல்பவரின் உணர்வை உள்ளது உள்ளபடியே ஏற்க இயலாமல், மனத்தில் இருக்கும் வாசனையின் சேர்க்கையில் மாறுபட்ட விளக்கத்துக்கு அடிபணிந்துவிடுவார்கள். அதுவே உண்மை விளக்கம் என்று திடமாக நம்புவார்கள். மாசற்ற மனம் மாற்றுக் கருத்துக்கு இடம் அளிக்காமல், உள்ளதை உள்ளபடி ஏற்கும். மாசு படிந்த மனம் தத்துவ விளக்கத்தை மாறாகவே ஏற்கும். காமாலைக் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் நிறமாகப் படும்; வெண்சங்கும் மஞ்சள் நிறமாகவே தெரியும். கிளிஞ்சலை வெள்ளியாக நினைப்பவர்களும் உண்டு.

நம்மிடம் இருக்கும் குறை, தத்துவ விளக்கத்தின் உருவத்தை மாற்றிவிடும். தத்துவ விளக்கத்தை ஏற்க, தனி அணுகுமுறை வேண்டும். அவற்றை, அறக் கண்ணுடன் அணுக வேண்டும். ஆசாபாசங்களுடன் இணைந்த பார்வை அதை வேறு விதமாகவே உணரும்.

குரு- சிஷ்ய பரம்பரைக்கு முதலிடம் வரக் காரணம் அதுதான். பிறப்பிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும் வாசனையை முழுமையாகத் துடைத்து எறிந்த பிறகு, தெளிவான மனம் அதை ஏற்கத் தகுதி பெறுகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடமை உணர்வுடன் செயலில் ஈடுபட்டுப் பழக்கப்பட்டால், ஒட்டிக்கொண்டிருக்கும் வாசனை அகன்றுவிடும். அப்படிச் செயல்படுவதற்குக் கடவுளின் அருளை வேண்டிக்கொள்ள வேண்டும். அவரது பாதுகாப்பில் செயல்பட்டால், துயரம் தொடாத இன்பத்தைச் சுவைக்கலாம்.

இந்த விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல. இது, 'எவராலும் உண்மையைத் தெரிந்துகொள்ள இயலாது’ என்ற முடிவையே எட்டுகிறது.

பிறந்தவர்கள் அனைவருமே தத்துவ விளக்கம் ஏற்கத் தகுதியற்றவர்கள் என்று கூற இயலாது. வியாசரும், சுகரும், காளிதாஸனும், ஞானசம்பந்தரும் இயல்பாகவே வேத விளக்கம் அளித்தனர். அவர்கள் ஒன்றை மற்றொன்றாகப் பார்க்காதவர்கள். பிரகலாதனும் துருவனும் சிறு வயதிலேயே அறிவாற்றல் பெற்றவர்கள். சீதை, குந்தி, திரௌபதி, சாவித்திரி ஆகியோரும், வசிஷ்டர், விஸ்வாமித்திரர், ஜனகர், தருமர், கர்ணன், விதுரர் ஆகியோரும் பேரறிவை எட்டியவர்கள். ஸனாதன தர்மத்தின் விளக்கத்தை உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள். ஹனுமன், விபீஷணன், அச்வத்தாமா, மகாபலி, கிருபாச்சார்யர், பரசுராமர் ஆகிய அத்தனைபேரும் பேரறிவை எட்டிப் பெருமை பெற்றவர்கள். இவர்களில் எவரும் ஒன்றை மற்றொன்றாக ஏற்று ஏமாந்தவர்கள் அல்லர்.

மகாத்மா காந்தி கீதையின் வழியில் தெளிவு பெற்று, சாத்வீக முறையில் சாம்ராஜ்ஜியத்தை வென்று, மக்களாட்சிக்கு வித்திட்டார். திலகர் ஸனாதனத்தின் தத்துவ விளக்கத்தில் பெருமை பெற்று எல்லோராலும் போற்றப்பட்டார். ஸனாதனத்தின் தத்துவ விளக்கம், ராஜாராம் மோகன்ராயை சீர்திருத்தவாதி ஆக்கியது. வேத சாரத்தின் நுண்ணிய அறிவு தயானந்த சரஸ்வதியை சீர்திருத்தவாதி ஆக்கியது. அரவிந்தரும், கோபாலகிருஷ்ண கோகலேவும் ஆன்மிக அறிவின் எல்லையை எட்டியவர்கள். அப்பய்ய தீக்ஷிதர், நீலகண்ட தீக்ஷிதர், பவபூதி, நாராயண பட்டதிரி ஆகியோரும் ஸனாதனத்தின் தத்துவ விளக்கத்தை ரசமாக மாற்றி, மக்களுக்கு ஊட்டினர். வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், ஸம்பிரதாயம் ஆகியவற்றில் தேர்ச்சி அடைந்த வல்லுநர் குழாம், இன்றும் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் மருந்தாகச் செயல்படுகிறது.

தத்துவ விளக்கங்கள் மனத்தின் மாசை அகற்றும் மருந்து. அவை, மாசு இருப்பவர்களுக்குப் பயன்படவேண்டுமே தவிர, மாசற்ற மனத்துக்குத் தத்துவ விளக்கங்கள் தாமாகவே புரிந்துவிடும். மனித இனத்துக்குப் பாகுபாடின்றிப் பயனளிக்கும் விதத்தில் விளக்கவுரை அளிப்பது ஸனாதனம். அதை அறிய மாசற்ற மனம் வேண்டும் என்பது தவறு. அதன் உண்மை விளக்கம், பாமரரையும் மாசற்றவராக்கிவிடும். கடவுளை அடிபணிந்தால், மனத்தில் இருக்கும் நஞ்சையும் அமுதமாக்கிவிடுவார். அசுரனின் அகங்காரத்தை அடக்கி ஆட்கொண்டவர் முருகன். அரக்கனைத் தன் திருப்பாதத்தால் அடக்கி ஏற்றுக்கொண்டவர் ஸ்ரீநடராஜர். ஆக, தத்துவ விளக்கங்கள் ஏற ஏற மாசுக்கள் விலகிக்கொண்டே வரும்.

எனவே, மக்கள் மனத்துக்குப் பிடித்த தகவலோடு தத்துவ விளக்கம் உருப்பெற்றால், அதை அவர்களின் மனம் எளிதில் ஏற்று நிம்மதி பெறும். கசப்பான மருந்தை இனிப்புடன் கலந்து சிறாருக்குக் கொடுப்பார்கள். சிந்தனை வளம் குன்றிய சிறுவர்களே பாமரர்கள். ஆகவே, விளக்கங்கள் அவர்கள் ஏற்கும்படியாகவே இருக்கும்.

இந்த விளக்கம் உண்மைக்குப் புறம்பானது. படைத்தல், பராமரித்தல், ஆட்கொள்ளுதல் எனும் மூன்றும்தான் மும்மூர்த்தியரின் பங்கு. மனித மனத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாசுக்களை அகற்றும் வேலை அவர்களுக்கு இல்லை. கருவுற்றால், சுமந்து பெறுவது தாயின் பொறுப்பு. மற்றொருவர் அதை ஏற்க இயலாது. நோயாளியே மருந்தை ஏற்று, நோயிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். மனைவியின் நோய் அகல, கணவன் பத்தியம் இருந்தால் பலன் இருக்காது. மாசுபட்ட மனம், பக்தியைத் தெரிந்துகொள்ளாது;  விளக்கத்தையும் ஏற்காது; கடவுளை நம்பாது சிந்தனையைத் திசைதிருப்பும். மாசு அகலாத வரையில் அவனுக்குக் கடவுளும் பக்தியும் எட்டாக்கனி.

கடவுள் தன்னைச் சரணடைந்தவர்களது மாசுக்களை அகற்றித் தூய்மையாக்கி ஏற்றுக் கொள்வார் என்பது படைப்பின் ரகசியத்தையே ஏளனம் செய்வதாகும். 'மனிதரில் எனக்குப் பிரியமானவனும் இல்லை; பகையும் இல்லை. நான் கண்காணிப்பாளனாகவே செயல்படுகிறேன்’ என்கிறார் கண்ணன். அவரது வார்த்தைக்கு மாறான விளக்கத்தை ஏற்க இயலாது. அப்படியான வாதம் ஏற்கப்பட்டால், மனிதனின் ஆறாவது அறிவு பயனற்ற படைப்பாகிவிடும். மனித இனம் சோம்பேறியாகிவிடும். காப்பாற்றக் கடவுள் இருக்கிறார் என்ற எண்ணத்தில் தவறான வழியில் செல்லத் துணிந்துவிடும். படைப்பு, பராமரிப்பு, ஆட்கொள்ளுதல்- இவை தவிர, பாகுபாடின்றி எல்லா மனிதர்களின் மனத்தில் சேமிக்கப்பட்ட மாசுக்களை அகற்றும் வேலையையும் கடவுளிடம் சுமத்துவது அறியாமை. இப்படியும் கூறலாம்... ஸனாதனத்தின் உண்மையை மாற்று வடிவத்தில் ஏற்றவரது கூற்று என்று.

தன் வினை தன்னைச் சுடும், வினை விதைத்தவன் வினையறுப்பான், கொன்றால் பாவம் தின்றால் தீரும் போன்ற வாக்கியங்கள், அவரவர் மாசுக்களை அவரவரே அகற்றவேண்டும் என்று உறுதியாகச் சொல்கின்றன. ஒருவனது செய்வினைக்கான பலனானது, அவனால் உணரவைக்கப்பட்ட பிறகே மறையும் என்கிறது தர்மசாஸ்திரம் (நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்பகோடிசதைரபி...). முற்பிறவியில் ஈட்டிய கர்மவினையானது, மனத்தில் வாசனை வடிவில் குடிகொண்டிருக்கும். அதை அழிப்பது கடவுளின் பொறுப்பு இல்லை. அந்த மனிதனின் செயல்பாட்டால் மட்டுமே முடியும். எதிர்பார்ப்பில்லாத- தன்னலமற்ற கடமைகளில் ஈடுபடும்போது மாசு சிறுகச் சிறுகக் கரைந்துவிடும். மாசற்ற மனம் உள்ளதை உள்ளபடி ஏற்கும் என்பது மாற்றமுடியாத ஒன்று.

பக்திக்கு உயர்வை அளிக்கச் சட்டதிட்டத்தையும் மீறி விளக்கம் அளிக்கும் செயலானது, அந்த விளக்கம் சொல்பவரின் மனத்தில் தோய்ந்த வாசனையின் வெளிப்பாடு! நியதிக்குப் புறம்பான விளக்கங்களால் பாமரர்களை ஈர்த்து, தனது தேவைகளைப் பூர்த்தி பண்ணும் எண்ணம், அப்பாவி மக்களை அடித்தளத்தில் ஆழ்த்துவதாகும். கண்ணாடியில் படிந்த மாசு அகன்றால், உருவம் தெளிவாகப் பளிச்சிடும். மனத்தின் மாசு அகன்றால், தத்துவ விளக்கம் விளங்கும். ஒருவனிடம், 'பின்தங்கியவனை முன்னுக்கு அழைத்து வா’ என்றதும், முன்னால் வருபவனை பின்னுக்குத் தள்ளிவிட்டானாம் அவன். அவன் மனத்தில் இருக்கும் மாசு, சொன்னதை வேறுவிதமாக உள்வாங்க வைத்தது.

'எல்லா அலுவல்களில் இருந்தும் முற்றிலும் விடுபட்ட மனம், என்னையே நாடி ஒடுங்கிவிட்டால், உனது பொறுப்புகளை நான் கவனிக்கிறேன்’ என்கிறார் நாராயணன். ஆனால், நம்மவர்கள் உதட்டளவில் நாராயணனை அழைத்து, 'எனது பொறுப்புகளைக் கவனி’ என்கிறார்கள். அவரது வார்த்தையை முழுமையாக ஏற்காமல், கடவுளுக்கான பொறுப்பை நிறைவேற்றச் சொல்கிறார்கள்.

அர்ஜுனன் கண்ணனின் நெருங்கிய நண்பன். ஆனாலும், அவனுக்கு வந்த தொல்லைகளைக் கண்ணன் கண்டுகொள்ளவில்லை. ஒரு கண்காணிப்பாளராகவே செயல்பட்டார். அவர் நினைத்திருந்தால் திரௌபதியின் அவமானத்தைத் தடுத்திருக்கலாம். ஆனால், கூப்பிட்ட பிறகே உதவிக்கு வந்தார். தனக்கு ஒரு அவமானம் நேர்ந்தபோதும் (ஸ்யமந்தக மணி), தானே முயற்சி செய்து அதிலிருந்து வெளிவந்தார்.

இப்படியிருக்க, முயற்சியில் ஈட்டவேண்டிய தத்துவ அறிவை கடவுள் இனாமாக அளிப்பார் என்பது, சிந்தனைக்கு ஒத்துவராத ஒன்று. சட்டத்தில் பல ஓட்டைகளை உருவாக்குவதும், அதுவழி தப்பிப்பதும்... சட்டத்தை உள்ளபடி புரிந்துகொள்ளாமல் மாற்று விளக்கத்தை ஏற்பதால் ஏற்பட்ட விளைவு. உள்ளதை உள்ளபடி மனம் ஏற்க, அதன் மாசு அகல, எதிர்பார்ப்பு இல்லாமல் கடமையைச் சுயநலமற்ற நிலையில் செயல்படுத்த வேண்டியது அவசியம். இதில் ஏற்படும் குறைபாடுதான், சட்டத்துக்குத் தனது விருப்பப்படி விளக்கம் ஏற்று, அதன் உருவைச் சிதைத்து, சமுதாயத்துக்குக் கரும்புள்ளி வைக்கப்படப் காரணமாயிற்று.

ங்களது சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

புழு- பூச்சிகளும், எறும்புகளும், பறவைகளும் சுயமுயற்சியில் கூடுகட்டி, இனப்பெருக்கத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்கின்றன. ஆறாம் அறிவு பெற்ற இனமானது, செயலில் சுணக்கமுற்றுப் பிறரது உதவியை நாடுகிறது. அந்த எதிர்பார்ப்பே தத்துவ விளக்கங்களுக்கு மாறுபட்ட விளக்கங்களை வெளியிட வைக்கிறது. குயில் சோம்பேறி. சுயமாகக் கூடுகட்டாமல் காகத்தின் கூட்டில் தனது முட்டையைச் சேர்த்துவிடும். காகம் அப்பாவி. அடையாளம் தெரியாமல் தனது முட்டைகளுடன் குயிலின் முட்டைகளையும் அடைகாத்து குஞ்சு பொறிக்க உதவும். குயில் குஞ்சுகள் இறக்கை முளைத்ததும் பறந்துவிடும். இப்படியான எண்ணம் மனிதரில் தென்படக்கூடாது.

மாற்றுக் கருத்து உருவாகக் காரணம், மனத்தில் படிந்திருக்கும் வாசனைதான். சுயமுயற்சியில் அதை அகற்றாத வரையிலும் உண்மை புலப்படாது. விளக்கம் தெளிவாகத் தெரிந்தவனிலும் மாற்றுக் கருத்தை உறுதி செய்யும் துணிவு தென்படுகிறது. நாடு முன்னேற, மனிதனின் மனம் தெளிவு பெற வேண்டும்.