Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோஷங்கள் நீக்கும் புரட்டாசி வழிபாடு!


சுமார் 800 அடி உயரத்தில் பச்சைப் பசேலென வீற்றிருக்கிறது அந்த மலை. முன்னையகோன் என்பவன், அந்த மலைப்பகுதியில்தான் தினமும் பசுக்களை மேய்த்து வந்தான். ஒருநாள்... அந்த மலையுச்சியில் இருந்த சிலையைக் கண்டான். அது வெறும் கற்சிலையாகத் தோன்றவில்லை, அவனுக்கு! 'இது தெய்வத் திருமேனி’ என உணர்ந்து சிலிர்த்தவன், தினமும் சாப்பிடக் கொண்டுவரும் கேழ்வரகுக் கூழை அந்தக் கல்லுக்கு முன்னே வைத்து, பாடல்களைப் பாடி, நைவேத்தியம் செய்துவிட்டு, பிறகு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டான்.

அவனுடைய பக்தியில் மகிழ்ந்த திருமால், அந்தணர் வேடமிட்டு அவனுக்கு முன்னே வந்தார். 'பிருகு மகரிஷி இருக்கிற இந்த மலைக்குச் செல்லும் பாதை தெரியாமல், நடந்து வந்து கொண்டிருந்தேன். உன் பாடல்தான் எனக்கு வழிகாட்டியது’ என்று சொன்னவர், அங்கே வைத்திருந்த கேழ்வரகு நைவேத்தியத்தைப் பார்த்துவிட்டு, அதிர்ச்சி அடைந்தார்.

'யாதவ குலத்தில் பிறந்தவன் நீ. பகவானுக்கு, பால் நைவேத்தியம் செய்யாமல், கேழ்வரகு கூழ் வைத்து நைவேத்தியம் செய்கிறாயே! ஆனாலும், பக்தியுடன் எது கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார் பகவான். இருப்பினும், பால் நைவேத்தியம் செய்து வழிபடு’ என்று சொல்லிச் சென்றார், அந்தணர். அன்று முதல், முன்னையகோன் தன் மனைவியுடன் வந்து, அந்தணர் கூறியபடி, உரிய முறையில் பூஜைகளைச் செய்து வந்தான். ஒருநாள்... 'இந்தக் கல், இனி ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் எனும் திருநாமத்துடன் எல்லோரும் போற்றி வணங்கும் வகையில் திகழப்போகிறது’ என அசரீரி கேட்டது. அந்த நிமிடமே... அங்கே ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் அழகே உருவெனக் கொண்டு திருக்காட்சி தந்தருளினார். அன்று முதல், திருமலை வையாவூர், தென் திருப்பதி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது அந்த மலை.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் மதுராந்தகத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது திருமலை வையாவூர். சுமார் 450 படிகளைக் கடந்து சென்றால்... மலையில் கோயில் கொண்டிருக்கும் மலையப்பனை, ஸ்ரீபிரசன்ன வேங்கடேசனைக் கண்ணாரத் தரிசிக்கலாம் (படிகளில் நடக்காமல், வாகனத்தில் அமர்ந்தபடியே மலைக்கு வருவதற்குப் பாதையே உள்ளது!). இந்தத் தலத்து திருமாலின் திருநாமம் - ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள். ஆதி வராக க்ஷேத்திரம் என திருப்பதி தலத்தைப் போலவே இந்தத் தலத்தையும் போற்றுகின்றனர் பக்தர்கள்! முதலில் ஸ்ரீஆதி வராகரின் அற்புதத் தரிசனம். இவரைத் தரிசித்துவிட்டுத்தான் மூலவரைத் தரிசிக்க வேண்டும் என்பார்கள்.

மூலவராக... ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள். நின்ற திருக்கோலம். தோளில் சாளக்கிராம மாலையும் அஷ்டலட்சுமி ஆரமும் ஸ்ரீலட்சுமி ஆரமும் என தகதகக்கிற திருமாலின் திருமேனியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். குறிப்பாக, தசாவதார திருக்கோலங்கள் கொண்ட ஆபரணத்தை மாலையாகவும் ஒட்டியாணமாகவும் அணிந்தபடி காட்சி தரும் அழகே அழகு! இன்னொரு விஷயம்... கையில் செங்கோலுடன் தரிசனம் தருகிறார் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள். இந்த செங்கோல், ராஜா தோடர்மால் வைத்திருந்ததாம்!

விஜய நகரத்தை ஆட்சி செய்த ராஜா தோடர்மால், திருப்பதி திருத்தலத்துக்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கிறான். ஒருநாள் மன்னனுக்குக் காட்சி தந்த திருமால், 'பர்வதத்தின் உச்சியில் இங்கே கோயில் அமைந்திருப்பது போல, பர்வதத்தின் மற்றொரு பாகத்திலும் எனக்குக் கோயில் எழுப்புவாயாக! அங்கே இருந்தபடியும் பூலோகத்தைக் காக்கத் திருவுளம் கொண்டுள்ளேன்’ என அருளினார். இதில் நெக்குருகிப் போன மன்னன், வையாவூரில் உள்ள மலையில் கோயில் கட்டினான். அதுவே திருமலை வையாவூர் என்றானதாகத் தெரிவிக்கிறது ஸ்தல வரலாறு.

ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாளை வணங்கினால், சர்ப்ப தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இங்கே... ஸ்ரீசுதர்சனர் தனிவிமானத்துடன் கோயில் கொண்டிருக்கிறார். இவரை வணங்கித் தொழுதால், எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்!

தாயாரின் திருநாமம் - ஸ்ரீஅலர்மேல்மங்கை. பங்குனி உத்திர நன்னாளில், ஸ்ரீஅலர்மேல்மங்கைத் தாயாருக்கு திருக்கல்யாண உத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது. அதேபோல் தனிச்சந்நிதியில் காட்சி தரும் ஸ்ரீஆண்டாளுக்கு, ஆடிப்பூர நாளில் திருக்கல்யாணம் நடைபெறும். இதில் கலந்துகொண்டு தரிசித்தால், விரைவில் திருமணத் தடை அகலும்; மாங்கல்ய பாக்கியம் கிடைக்கப்பெறுவர் என்கின்றனர், பெண்கள்!

சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை மற்றும் மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில், இங்கு வந்து தரிசிப்பது சகல ஐஸ்வரியங்களையும் அள்ளித் தரும். புரட்டாசி திருவோண நட்சத்திர நாளில், இங்கே நடைபெறும் திருப்பாவாடை சேர்த்தி உத்ஸவம் வெகு பிரசித்தம். இதில் கலந்துகொண்டு திருமாலைத் தரிசித்தால், பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். குறிப்பாக, மனநலம் குன்றிய குழந்தைகள் விரைவில் குணம் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புரட்டாசி, ஆவணி, மார்கழி மாத திருவோண நாட்களில், இந்த வைபவம் நடைபெறும்.

இங்கே உள்ள தீப ஸ்தம்பத்தில், புரட்டாசி பிரம்மோத்ஸவம் துவங்கியதும் தீபமேற்றி வழிபடுவர். திருப்பதி போலவே ஐந்தாம் நாள், கருடசேவையில் அமர்க்களமாகக் காட்சி தருவார் திருமால்! புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் முத்தங்கி சேவையில் காட்சி தரும் திருமாலைத் தரிசிக்க, எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வந்து குவிவார்கள்.  

21 சுமங்கலிகளுக்கு, வெற்றிலை - பாக்கு வைத்து ஸ்ரீவராகரை வணங்கினால், 48 நாட்களில் திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகம்!

மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயரும் நம் வேண்டுதல்களை நிறைவேற்றித் தருவார்.