Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்னோர் திதிக்காக சமைக்கும் பெண்கள், ஈரத் துணியுடன் சமையலில் ஈடுபடுவதன் தாத்பரியம் என்ன?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் பதில்கள்

முன்னோர் திதிக்காக சமைக்கும் பெண்கள், ஈரத் துணியுடன் சமையலில் ஈடுபடுவது உண்டு. இதன் தாத்பரியம் என்ன? முதல் நாள் மடி உலர்த்திக்கொண்டு, அதை உடுத்தியபடி சமைப்பது தவறா?

- பிரேமா பரசுராமன், சென்னை-18

முதல் நாள் மடி உலர்த்தி, அதை உடுத்திக்கொண்டு சமையல் செய்வது தவறாகாது. மாற்று மடி இல்லாத நிலையில், ஈரமான மடியை 7 தடவை உதறி, காற்றில் படவைத்துக் கட்டிக்கொண்டு செயல்படலாம். இக்கட்டான சூழலில், அவசர காலத்தில் கடைப்பிடிக்கும் பரிந்துரை. அதை பொது நியமமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

மடியோடு செயல்பட வேண்டிய மற்ற காரியங்களில், முதல் நாள் மடி உலர்த்தி செயல்படுவது உண்டு. மடியில் சந்தேகம் ஏற்படாமல் இருக்க, ஈரமான ஆடையுடன் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள். அன்றைய தினம் நனைத்து உலர்ந்ததோ உலராததோ அதைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் கட்டளையிடாது.

சாஸ்திரத்தின் அணுகுமுறை அலாதியானது. அன்று பயன்படுத்தும் தயிரும் நெய்யும் முன்னதாகவே தயாராகிவிடும். அதைப் பயன்படுத்துவது உண்டு. அதேபோன்று, அன்று நெல்லைக் குத்தி அரிசியாக்கி சமைக்க இயலாது. உமி, வரட்டி, சிரா போன்றவற்றையும் அன்றைக்கு தயார் செய்ய இயலாது.  கடையில் வாங்கிய பழம், தேங்காய் போன்றவற்றை ஜலம் விட்டு சுத்தமாக்கி எடுத்துக்கொள்ளச் சொல்லும். ஆனால் நெய், பால், எண்ணெய் போன்றவற்றை ஜலம் விட்டு சுத்தம் செய்யாமல் ஏற்கச் சொல்லும்.

ஒரு பொருளின் தரம் குறைவதற்கு அல்லது அதன் அழிவுக்கு சாஸ்திரம் துணை போகாது. நீராட இயலாத ஒருவனை நீராடியவனாக மாற்ற, ஒருவன் தலைமுழுகி அவனைத் தொட வேண்டும். இப்படி 10 முறை தலை முழுகித் தொட்டுவிட்டால், நீராடாதவன் (நீராட இயலாதவன்) மடியாகிவிடுவான் என்று சாஸ்திரம் சொல்லும். முடியாதவனை நீராட வைத்து, அவனது சுகாதாரத்தை அழிக்காது.

நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவள் ஈரத் துணியுடன் சமையலில் ஈடுபட்டால், அவளது சுகாதாரம் கெட்டுவிடும். உடல் ஆரோக்கியத்துக்குக் குந்தகம் இல்லாத வகையிலேயே தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரை அமைந்திருக்கும். ஈரத் துணியோடு செயல்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அன்று அதிகாலையில் நீராடி, ஈரத் துணியை உலர்த்திவிட்டு, முற்றிலும் உலர்ந்த பிறகு அதைக் கட்டிக்கொண்டு சமையல் செய்யலாம். திதிச் சமையலுக்கு கால அவகாசம் நிறைய இருக்கும்போது, ஈரத் துணியை அணிவது தவறு.  ஈமச் சடங்கில் ஈடுபடுபவன் ஈரத் துணியோடு இருப்பான்; மாற்றுத் துணிக்கு இடமில்லாத நிலை.

ஈரத் துணி மடியானாலும் அவனுக்கு மடி இல்லை. அவன் சுத்தமானால் மட்டுமே அவன் கட்டிய துணி சுத்தமாகும்.