Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் தரிசனம் நாளை 10 மணி நேரம் ரத்து!

நாளை சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால், திருமலை ஏழுமலையான் தரிசனம் 10 மணி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

கிரகண நேரத்தில் ஆன்மிகக் காரணங்களுக்காக திருப்பதி கோயில் நடை அடைக்கப்படுவது வழக்கம்

நாளை புதன்கிழமை மாலை 4.45 மணிமுதல் 7.05 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால், நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை சாற்றப்படும். மேலும், அன்றைய தினம் காலை 6.30 மணிமுதல் 9.30 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். சந்திர கிரகணம் நிறைவு பெற்ற பின் இரவு 8 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு தூய்மைபடுத்தி புண்ணியாவசனம் செய்து பூஜைகள் நடத்தப்படும்.

அதன் பின்னர் இரவு 10.30 மணிமுதல் நள்ளிரவு வரை பக்தர்கள் தர்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். மேலும் புதன்கிழமை, வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமக்கள் தரிசனம், ரூ.300 விரைவு தரிசனம், ரூ.50 சுதர்சன தரிசனம், திவ்ய தரிசனம் (நடைபாதை பக்தர்கள் தரிசனம்) ஆகிய தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சந்திர கிரகணம் குறித்து மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் கோளரங்கக் கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரசாத் குப்த் கூறுகையில்,"மதியம் 2.44 மணிக்கு தொடங்கி மாலை 6.04 மணி வரை நீடிக்கும் இந்த சந்திர கிரகணத்தில், நிலவு முழுமையாக மறையும் நிகழ்வு 23 நிமிடங்கள் வரை இருக்கும்.

இந்த சந்திர கிரகணத்தை வடகிழக்குப் பகுதிகளான திரிபுரா, இம்பால், கோஹிமா பகுதிகளில் தெளிவாகக் காண முடியும்" என்றார். இது, இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் இறுதி சந்திர கிரகணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவை பூமியின் நிழல் முழுமையாக மறைத்துவிடும். இந்த நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.