Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஷ்ணு வாகனனே போற்றி! - வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்

- கே.குமார சிவாச்சாரியார்

னன ஜாதகத்தில் சனியும் ராகுவும் சூரியனின் வீட்டில் சேர்ந்தாலும், 6, 8, 10, 12 ஆகிய இடங்களில் இரண்டு பாவ கிரகங்கள் சேர்ந்து இருந்தாலும், அந்த ஜாதகர் பில்லி-சூன்யம் போன்ற தீவினைகளுக்கு ஆளாக நேரிடும் என்று சென்ற இதழில் பார்த்தோம். இத்தகைய அன்பர்கள் கருடனை வழிபட, தீவினைகளில் இருந்து தப்பிக்கலாம் எனவும் படித்தோம்.

வெறுமனே வழிபட்டால் போதாது! விஷ்ணு வாகனரான கருடனின் மகத்துவங்களை அறிந்து உணர்ந்து வழிபட்டால், பரிபூரண பலன் கிடைக்கும்.

முருகனுக்கு மயில், அம்பிகைக்கு கிளி, சனைச்சரருக்கு காகம் என்று தெய்வங்களுக்கு உரித்தான பறவைகளைச் சொல்வார்கள்.  ஆனாலும், 'கருட புராணம்’ என்று மிக அற்புதமான- தனது திருப்பெயருடன் திகழும் ஒரு ஞானநூலைக் (பரிகார காண்டம்) கொண்டவர் கருட பகவான் மட்டும்தான். மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் தவறுகளுக்கு உரியவையாக இந்த நூலில் பட்டியலிடப்பட்டிருக்கும் தண்டனைகள் நரக லோகத்தில் எமதருமனால் நிறைவேற்றப்படும் என்பது நம்பிக்கை.

பட்சி ராஜன், விஷ்ணு வாகனன், பெரிய திருவடி என்று புகழப்படும் ஸ்ரீகருடபகவானின் அவதாரக் கதை மிக அற்புதமானது.

காசியப முனிவரின் மனைவிகளில் வினதைக்குப் பிறந்தவர்கள் கருடனும் அருணனும். கத்ருவுக்குப் பிறந்தவர்கள் நாகங்கள். கத்ருவின் சூழ்ச்சியால் வினதை சிறைப்பட்டாள். கத்ருவின் நிபந்தனையின்படி தேவலோக அமிர்தத்தைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்து, தன் தாயை மீட்டார் கருடன். இந்தக் கதை நாமறிந்ததே. ஆனால், ஸ்ரீகருடன் யாகத்தீயில் தோன்றியவர் என்றொரு  கதையும் உண்டு.

ரு முறை, காசியப முனிவர் தன் வம்சத்துக்கு அறிவுள்ள குழந்தைகள் பிறக்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன், இமயமலைச் சாரலில் புத்திரகாமேஷ்டி யாகத்தைத் தொடங்கினார். மகரிஷிகள், தபஸ்விகள், கந்தர்வர்கள் என யாகத்துக்கு வந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளைக் கொண்டு வந்தனர். தேவேந்திரனும் யாகத்துக்கு ஒத்துழைப்பு நல்கினான். ஆனாலும், வாசனை மூலிகைகள், யாக சமித்துக்களை எடுத்து வரும் முனிவர்களை கேலி செய்தான். அவர்கள் வயிறு குலுங்க நடந்து வருவதையும், சோர்வால் கீழே விழுவதையும் கண்டு ஏளனம் செய்து சிரித்தான். இதனால் அந்த தபஸ்விகளும் முனிவர்களும் கோபம் கொண்டனர். 'அதிகம் பலமும் அதிகாரமும் பெற்றிருக்கிறோம் என்ற மமதையில் இந்திரன் நம்மை ஏளனம் செய்கிறான். அவனுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அவனுக்குப் போட்டியாக வேறோர் இந்திரனை உருவாக்கி இவனைத் தலைகுனிய வைக்க வேண்டும்’ என்று முடிவு செய்தனர். அதற்காக நடுக்காட்டில் ராஜசூய யாகம் நடத்தினார்கள்.

இந்திரன் நடுநடுங்கிப் போனான். காசியப முனிவரைச் சரணடைந்தான். அவர், மற்ற முனிவர்கள் மூலம் விவரம் அறிந்தார். 'உலக நன்மைக்காக நான்முகனால் படைக்கப்பட்ட இந்திரனுக்குப் போட்டியாக வேறொரு இந்திரன் வேண்டாம். உங்கள் யாகத்தின் பலனால் உருவாகப் போகும் இந்திரன், பட்சிகூட்டங்களுக்குத் தலைவனாகத் திகழட்டும்’ என்றார். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். யாகத் தீயின் மேல் வழியாக கருடனும், அருணனும் பிறப்பெடுத்தனர். கருடன் ஸ்ரீவிஷ்ணுவின் வாகனமானார்.

ஆக, ஸ்ரீகருடனை வழிபட நம்மைச் சூழும் தீவினைகள் மட்டுமல்ல, சகல துயரங்களும் தீயிலிட்ட பஞ்சு போன்று பொசுங்கிவிடும். தீராத நோய்நொடி, குடும்பத்தை வாட்டும்  பிரச்னைகள், தொழிலில் உருவாகும் நஷ்டம், உத்தியோகத்தில் பின்னடைவு ஆகியவற்றுக்கு தீவினைகளே காரணம் என உணரும் அன்பர்கள் ஸ்ரீகருடபகவானை அனுதினமும் அவசியம் வழிபட வேண்டும்.

இவருக்கான வழிபாட்டை 'கருட ப்ரயோகம்’ என்பார்கள். இந்த வழிபாட்டு  முறையில் சக்தி வாய்ந்த மூலமந்திரங்கள் கூறப் பட்டுள்ளன. தினமும், உடல் - உள்ள பரிசுத்தத்துடன், மனம் ஒருமுகப்பட்டு இந்த மந்திரங்களை (108 முறை) ஜபித்து, கருடனை (சென்ற இதழில் கூறியுள்ள முறைப்படி) வணங்கி வழிபட, விசேஷ பலன்கள் கிடைக்கும்.

கருட ப்ரயோகத்தில் உள்ள ஜப மூலமந்திரம்

1. ஓம் ஸசரதி ஸசரதி தத்காரீ மத்காரீ விஷாணஞ்ச விஷரூபிணீ
விஷ தூஷணீ விஷசேஷணீ விஷநாசினீ விஷஹாரிணீ
ஹதம் விஷம் நஷ்டம்
விஷம் அந்த : ப்ரலீனம் விஷம் ப்ரநஷ்டம் விஷம்
ஹதம்தே ப்ரம்மணா
விஷம் ஹதம் ஹதமிந்த்ரஸ்ச வஜ்ரேண ஸ்வாஹா:

- இந்த மந்திரம் விஷ ஜுரத்தையும் போக்கவல்லது.

கருடனை வழிபட்டு நிறைவுசெய்யும்போது தமிழ் வழிபாட்டு முறையில் உள்ள கருடப்பத்து பாடலை மூன்று முறைப் படித்து முடிப்பது விசேஷம். மிக சக்தி வாய்ந்த ஸ்ரீகருடனின் பார்வை நம் மீது பட்டு அருள்பாலிக்க இந்தத் தமிழ் துதியைக் கூறலாம்.

விண்ணில் நீந்தும் வேந்தனாய் வட்டமிடும்
மண்ணின் மாந்தர்க்கு ஏவும் சக்தியைக் களைந்திடும்
பரந்தாமன் வாகனராய் உயர்ந்தவரே! பட்சிராஜனே
மருந்தாய் வருவாய் மருதனை போக்குவாய்ப் போற்றி!

- வழிபடுவோம்...

கருட தரிசனம்!

வியாழக்கிழமை அன்று கருடன் வானத்தில் வட்டமிடுவதைப் பார்த்துவிட்டால் கஷ்டங்கள் நீங்கும், நல்ல பலன்கள் நாடிவரும், பில்லி சூன்யங்கள் அகலும் என்று கருடதரிசன விதி சொல்கிறது.அப்போது, கீழ்க்காணும் தரிசன துதியைச் சொல்லி வணங்குவது சிறப்பு.

ஓம் குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயது.
விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜயதே நம:

மேலும், ஞாயிறன்று கருடனைத் தரிசித்தால் காரிய வெற்றி உண்டாகும். வெள்ளிக்கிழமையில் தரிசிக்க ஆயுள் நீடிக்கும். சனிக்கிழமையில் தரிசித்தால் மகிழ்ச்சி பெருகும்.