Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்தர் யோகம்

''தூய உள்ளமே ஆண்டவனுடைய ஆலயம்'' ,''மனமகிழ்ச்சி மாறதிருப்பதே உண்மையான வழிபாடு '' என்ற அருள்மொழிகளை மொழிந்தவர் சுவாமி சித்பவானந்தர். மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவு என்ற புத்தகம் இவரின் ஆன்மிகப் பயணத்திற்கான பயணச் சீட்டாய் அமைந்தது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்து மக்களுக்காக ஆன்மிக தொண்டாற்றிய மகான்.

ராமகிருஷ்ண மடத்தில் இணைந்து பரமஹம்சரின் பக்தனாய் விவேகானந்தர், சாரதாதேவி ஆகியோரின் கொள்கைகளை தமிழகத்தின் தெருக்களெங்கும் பேசியவர். பகவத் கீதையை தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தவர். இவரின் பகவத் கீதை உரை, பத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான புத்தகங்களில் இவர் எழுத்துக்கள் வாழ்க்கையை வரையறுத்தவாறும் ஆன்மிகத்தை ஆழப் பேசியவாறும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

 

லௌகிக வாழ்க்கையிலேயே மன அமைதியை தொலைத்து மூழ்கி இருப்பவர்களுக்கு மன சாந்தியை வழங்கும் பொருட்டு  'அந்தர் யோகம்’ என்ற வழிபாட்டு முறையை கண்டறிந்து, மக்களுக்கிடையே அதற்கான பயிற்சிகளையும் கொடுத்து வந்தார். திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன முன்னாள் மாணவர்கள் அமைப்பு 'சுவாமி சித்பவானந்தர் சேவா சங்கம்’ என்ற ஆன்மிக அறக்கட்டளையின் மூலமாக பல்வேறு நலதிட்ட உதவிகளையும் ஆன்மிக நிகழ்ச்சிகளையும் தமிழகமெங்கும் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் ஈரோடு கிளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்தர் யோக பயிற்சியை இலவசமாக அளித்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த இறைப் பிரியர்கள் இறையருளில் திளைத்தனர்.

அந்தர் யோகம்:

அந்தர் என்றால் உள்ளே என்று பொருள். யோகம் என்றால் இணைத்தல் என்று பொருள். மனதை உள்முகமாக திருப்பி இறைவனோடு இணைத்துக் கொள்வதற்கு அந்தர் யோகம் என்று பெயர். இல்லறத்தில் வாழ்கிறவர்கள் உலக விவகாரங்களை ஒரு நாள் ஒதுக்கி வைத்து விட்டு, தெய்வ சிந்தனையில் சிலாகிக்கவும் ஆன்மிக விழிப்புணர்வில் ஈடுபடவும் இந்த முறை சுவாமிகளால் அருளப்பட்டது.

 

ஒருநாள் முழுவதும் நிகழ்ந்த இந்நிகழ்வில் இறைவனின் பெயரை மறந்துவிட்ட மனித ஜீவிகளின் மூளையில் பரம்பொருளின் நாமத்தை பொறிதட்டச் செய்வதற்காய், பத்து நிமிடம் நாமஜபம் நடந்தது. அதைத் தொடர்ந்து அந்தர் யோகத்திற்கான விளக்கமும், அது நம்மை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் போன்ற கருத்துக்களும் எடுத்துரைக்கப்பட்டன. பெருந்துறை சாலையில் உள்ள குருசாமி திருமண மண்டபம் இந்த அந்தர் யோகப் பயிற்சியால் ஒரு புனித தளத்தினைப் போல் புன்னகைத்தது.

''பாரதப் போரில் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா கொடுத்த மருந்து தியானம். பிரச்னைகளை சமாளிக்கவும் எதிர்வரும் பிரச்னைகளில் இருந்தது விடுபடவும் இவ்வையத்தில் உள்ள ஒற்றை நிவாரணி தியானம்' என திருவேடகம் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர்.சுப்ரமணியம் அவர்கள் அனைவருக்கும் தியானம் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து  'இன்றைய வாழ்வில் ஸ்ரீ கிருஷ்ணர்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். உடலை எப்படி பேண வேண்டும் என்ற பதஞ்சலி முனிவரும் காயத்ரி மந்திரம் தந்த விஷ்வா மித்ரரும், அர்த்த சாஸ்திரம் அளித்த கவுல்டியரும் ஆராய்ச்சியாளர்கள். அவர்களின் ஆராய்ச்சிகளை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

பின் நடைபெற்ற பஜனையில் இறைப்பாடல்கள் பாடப் பெற்று பக்திமயம் நிலைபெற்றது. அர்ச்சனைகளும் ஆராதனைகளும் இறைவனின் நிழலில் நம்மை இளைப்பாறச் செய்தது. வேதங்கள், உபநிடதங்கள், ராமர் புராணம், கிருஷ்ண அவதாரம் என பல தலைப்புகள் பற்றி சொற்பொழிவுகள் நடந்தன.

சாதனம் இன்றி ஒன்றை சாதிப்பார் உலகில் இல்லை
ஆதலால் இந்த நான்கும் அடைந்தவர்க்கு அறிவுண்டாகும்
நூதன விவேகி உள்ளம் நுழையாது நுழையும் ஆகில்
பூத சன்மங்கள் கோடி புனிதமாம் புருடன் ஆமே''

- கைவல்ய நவநீதம்

மக்களிடையே ஆண்மிக உணர்வு குறைந்துவிட்டது. அதன் விளைவாக இன்று சுயநலமும் பொறாமையும் பெருகிவிட்டது. அவர்களிடையே நல்ல மனப்பான்மையை வளர்த்து இந்த சீர்கேட்டை சரிசெய்ய அந்தர் யோகம் உதவும்.

- பா.குமரேசன் (மாணவப் பத்திரிக்கையாளர்)