Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - 2-11-2014 முதல் 25-10-2017 வரை

- ஜோதிடர் சந்திரசேகரபாரதி

நீலாஞ்ஜன ஸமாபாசம் ரவி புத்ரம் யமாக்ரஜம்
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்

இதுவரையிலும் துலா ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான் 2-11-2014 முதல் விருச்சிக ராசிக்கு இடம் மாறுகிறார். 25-10-2017 வரை விருச்சிகத்தில் உலவுவார். (திருக்கணித பஞ்சாங்கப்படி)  

சனி இம்முறை மூன்று முறை வக்கிரமாக சஞ்சரிப்பதால் வழக்கமாக இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் உலவும் சனியானவர் 2 வருஷம், 11 மாதம், 23 நாட்கள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் விருச்சிகத்தில் உலவும் நிலை அமைகிறது.

இடையில் அதிசாரமாக 25-1-2017 முதல் 21-6-2017 வரை தனுசு ராசியில் உலவும் நிலையும் அமைகிறது.

சனீஸ்வரர் நீதிமான் ஆவார். அவர் விருச்சிகத்தில், செவ்வாயின் ராசியில் ஜல ராசியில், ஸ்திர ராசியில், குரூர ராசியில் உலவும் நிலை அமைவதால் சனியால் விசேடமான நன்மைகளைப் பெற வாய்ப்புக் குறைவு. கால புருஷ ராசிக்கு 8-ல் சனி இருப்பதும் சிறப்பாகாது. இதனால் பொதுவாக பிரச்னைகளே ஏற்படும். சண்டை, சச்சரவுகளில் ஈடுபாடு உண்டாகும். ஜல பயம் ஏற்படும். எதிலும் அமைதி, காண முடியாமல் மனம் வேதனையில் புலம்பும். சனி பகை ராசியில் இருப்பதால் எதிர்ப்புக்கள் கூடும். துன்பங்களும் துயரங்களும் கஷ்டங்களும் அதிகமாகும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கெல்லாம் சோதனையான காலமிது.

சுரங்கப் பணியாளர்களுக்குப் பிரச்னைகள் அதிகரிக்கும். வாகன விபத்து அதிகரிக்கும். கால் நடைகளுக்கு நோய் ஏற்பட்டு  அதனால் நஷ்டம் உண்டாகும்.

வீண்விரயம் உண்டாகும். தேவையில்லாத செலவுகள் கூடும். சமூக விரோதிகள் அதிகரிப்பார்கள். தொழில் சார்ந்த பிரச்னைகள் பலருக்கு உண்டாகும். ஆதாயம் குறைந்து கடன் வாங்க வேண்டிய நிலைக்கு சிலர் தள்ளப்படுவார்கள்.

ஸ்பெகுலேஷன் துறைகளால் நஷ்டம் உண்டாகும். மதக் கலவரங்கள் மூளும். சோம்பலும், அலட்சியமும், எதிலும் அக்கறை இல்லாத நிலையும் உண்டாகும். பிறரது நலனில் அக்கறை இல்லாது போகும். சுய நலம் அதிகரிக்கும்.

பொதுவாக இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் இன்னல்கள் அதிகரிக்கும் என்பதால் எல்லா ராசிக்காரர்களுமே சனிக்குப் ப்ரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு 6-லும், கன்னிக்கு 3-லும், மகர ராசிக்கு 11-லும், கும்ப ராசிக்காரர்களுக்கு 10-லும் சனி அனுகூலமாக உலவுவதால் நற்பலன்கள் உண்டாகும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு 8-ல் அஷ்டமச் சனியாக உலவுவதால் சோதனைகள் அதிகமாகும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு 7-ஆம் வீட்டில் சனி உலவுவதால் தீயவர்களால் சங்கடம் ஏற்படும்.

கடகத்துக்கு 5-ல் சனி உலவுவது விசேடமாகாது.

சிம்மத்துக்கு அர்த்தாஷ்டமச் சனியின் காலமிது; விசேடமாகாது.

துலாத்துக்கு பாதச் சனியின் காலம் ஆரம்பமாகிறது. ஏழரைச் சனியின் கடைசிக் காலம் என்பதாலும் சனி யோக காரகன் என்பதாலும் ஓரளவு நலம் உண்டாகும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜன்மச் சனியின் காலமிது என்பதால் எச்சரிக்கை தேவை.

தனுசுக்கு ஏழரைச் சனியின் ஆரம்ப காலமிது. விரயச் சனி என்பதால் சங்கடங்கள் உண்டாகும்.

மீன ராசிக்காரர்களுக்குச் சனி 9-ல் உலவுகிறார். அளவோடு நலம் உண்டாகும்.

பொதுவாக சனி ராசிக்கு 3, 6, 10, 11-ஆம் இடங்களில் உலவும்போதே நற்பலன்களைத் தருவார்.  இதர இடங்களில் இருக்கும்போது கெடுபலன்கள் உண்டாகும்.

ஜாதகப்படி இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. 

மேலும் சனியானவர் ராசிக்குக் கெட்ட இடங்களில் உலவினாலும் கூட அவரவர் ஜன்ம நட்சத்திரத்துக்கு 2, 4, 6, 8, 9 -ஆம் நட்சத்திரங்களில் உலவும்போது நலம் புரிவார்.

கோசாரப்படி அனுகூலமில்லாத இடங்களில் உலவும் சனி, ஜாதகப்படியும் பலம் இல்லாதவராகி, தசா, புக்தியும் சிறப்பாக அமையாதபோதுதான் கெடுபலன்கள் அதிகம் உண்டாகும். தொழில், ஆயுள் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். அப்படிப்பட்ட ஜாதகர்கள் சனிப் பிரீதி செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

சனிக்குரிய மூல மந்திர ஜபத்தைக் குருமுகமாக உபதேசம் பெற்றுச் சொல்லலாம். ஹோமம் செய்யலாம். ஹனுமான் சாலீசா சொல்லி வழிபடலாம். ஹனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடலாம். வெண்ணெய் சாற்றலாம். அர்ச்சனை செய்யலாம்.

தினமும் காலை வேளையில் விஷ்ணு சஹஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம்; கேட்கலாம். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவிகள் செய்யலாம். கறுப்பு, கருநீலப் பொருட்கள், எள், இரும்பு, நல்லெண்ணெய், புனுகு,  தானம் செய்வது

சிறப்பாகும். காகத்துக்கு அன்னத்துடன் எள் கலந்து வைக்கலாம். வன்னி சமித்தால் ஹோமம் செய்வது சிறப்பாகும்.

''ஓம் ஐம் ஸ்ரீம் சனைஸ்ச்சராய நமஹ" என தினமும் காலை வேளையில் 108 முறை சொல்வது நல்லது.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி உள்ளவர்களும், ஜாதகத்தில் சனி பலம் குறைந்திருப்பவர்களும், சனி தசை நடப்பில் உள்ளவர்களும் திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி, குளக்கரையில் உள்ள விநாயகரை வழிபட்ட பின்பு, ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரரையும் அம்பிகையையும் வழிபட்டு, சனிக்கு எள் தீபம் ஏற்றி, அபிஷேக, அர்ச்சனை செய்து வரவேண்டும்.

சனி காயத்ரி மந்திரம்:

ஓம் காக த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: பிரசோதயாத்.

தினமும் காலையில் 108 முறை சொல்வது நல்லது.

சனி த்யான ஸ்லோகம்:

நீலாம்பரோ நீலவயு: க்ரீடி க்ருத்ரஸ்தித: த்ராஸகர:
தனுஷ்மாந் சதுர்புஜ: சூரிய ஸுத: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத ப்ரஸந்த.

சனீஸ்வர அஷ்டோத்தரத்தையும் சொல்லலாம்.

வன்னி மரத்தை சனிக்கிழமைகளில் சுற்றி வந்து பூஜை செய்யலாம்.

சனிக்கிழமை, சனிக்கு உகந்த காலமான சாயங்கால நேரத்தில் (மாலை 6 முதல் 7 மணிக்குள்) சிவாலயத்தில், சனி சந்நிதியில் எள் தீபமேற்றி வைத்து, கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

கோளறு பதிகம் சொல்வதன் மூலமும் நவக்கிரகங்களால் விளையக்கூடிய சங்கடங்களை விலக்கிக் கொள்ளமுடியும்.

இனி, பன்னிரண்டு ராசிகளுக்கும் இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் விளையக்கூடிய பொதுப்பலன்களைக் காண்போம்.  

உங்களுக்குரிய ராசியை க்ளிக் செய்யவும்

 

மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம்
தனுசு மகரம் கும்பம் மீனம்