Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தை வரம் தரும் கடை ஞாயிறு திருவிழா!

'தஞ்சை கோயில் அழகு, திருவிரிஞ்சிபுரம் மதில் அழகு' என்று பாடல் பெற்ற வேலூர் விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை உடன் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. வருடத்திற்கு ஒருமுறை திறக்கப்படும் புகழ்பெற்ற சிம்மக்குளமும் திறக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் அடி முடி காணாமல் சிவனிடம் பிரம்மன் சாபம் வாங்கியது அனைவருக்கும் தெரியும். அந்த பிரம்மன் விரிஞ்சிபுரத்தில் சிவநாதன்-நயினாநந்தினி தம்பதிக்கு சிவசர்மன் என்ற மகனாகப் பிறந்தார். சிறுவனான பிறகு சிவசர்மன் உயரம் காரணமாக ஈசனுக்கு பூஜை செய்ய இயலாமல் தவித்தபோது, தனது தலையை சாய்த்து இறைவன் அருள்புரிந்து, பிரம்மன் சாப விமோசனம் பெற்ற  திருத்தலம் இந்த விரிஞ்சிபுரம். திருவண்ணாமலையில் பிரம்மனுக்கு காட்டாத திருமுடியை, சிறுவனாக வந்து வருந்தியபோது காட்டி, அந்த அபிஷேகத்தையும் ஏற்றருளிய நாள் கார்த்திகை கடைஞாயிறு.

மைசூரை சேர்ந்த வணிகருக்கு வழிகாட்டி உதவியதால் மார்க்கபந்தீஸ்வரர் (வழித்துணை நாயகர்) என்று அழைக்கப்படுகிறார்.

கோயிலில் உள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் சக்தி வாழ்ந்தது. நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத பெண்கள் பாலாறு, கோயில் அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம்,கோயிலுள்ள சிம்ம தீர்த்தம்மூன்றிலும் நீராடி கோயிலில் உறங்கினால், அவர்களின் கனவில் இறைவன் குழந்தை வரம் தருவார் என்பது நம்பிக்கை. அதேபோல் இந்த வருடம் கடை ஞாயிறுக்கு முதல்நாள் சனிக்கிழமை அன்று இரவு 12 மணிக்கு சிம்மக்குளம் திறக்கப்பட்டது.

வேலூர் மட்டுமல்லாமல், பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் சிம்மக்குளத்தில் நீராடி, கோயிலில் படுத்து உறங்கி வரம் பெற்றனர். மறுநாள் ஞாயிறு அன்று பிரம்ம குளத்தில் தீர்த்த வாரியும், சுவாமி திருமாட வீதி உலாவும் நடைபெற்றது. சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு இரவு வரை  சிம்மக் குளத்தில் நீராடியும், நீண்டவரிசையில் நின்றும் பக்தர்கள் இறைவனை வழிபட்டனர். இவ்விழாவிற்காக வேலூரிலிருந்து சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

செய்தி மற்றும் படங்கள் : சு.ராஜா - மாணவ பத்திரிகையாளர்