Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் வேத விழா...

'ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொளி ஞானம் தோன்றும்;
ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்;
ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ’

- என்று, 'ஓம்’ என்னும் ஒலியின் மகிமை குறித்துப் பாடியிருக்கிறார், குமரிக் கண்டத்தில் கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த சிற்பியான மயன். 'ஓம்’ என்னும் ஒலியின் உள்ளொளி உருவம்தான் பிரபஞ்ச இயக்கத்தின் தலைவனான ஆடலரசன்.

இத்தனை மகிமைகள் கொண்ட பிரணவ மந்திரமான 'ஓம்’ என்ற பெயரிலேயே 'ஓம் சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்று ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் மாணவர்களுக்கு வேதங்களைக் கற்றுத் தருவதுடன், அவர் களை உற்சாகப்படுத்தும் விதத்தில், 2009ம் வருடத்திலிருந்து போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கி வருகிறார்கள்.  

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில்  - முதல் நாள் ரிக், யஜுர், சாம வேதங்களில் இருந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. இரண்டாவது நாளில், மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்குப் பாத பூஜை செய்யும் நிகழ்ச்சியும், மூன்றாவது நாளில் பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையிலான நிகழ்ச்சிகளும் நடைபெறும். 14 வகையான போட்டிகள் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் வேத பாடசாலைகளில் பயிலும் 7 வயது முதல் 21 வயது வரையிலான மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

இந்த வருடம் 'ஓம்’ அமைப்பினர் நடத்தும் வேதம் ஒப்புவித்தல் போட்டி, வரும் டிசம்பர் 19 முதல் 21 வரை சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ணசாமி திருமண  மண்டபத்தில் நடக்கவிருக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பின் நிர்வாகிகள் நாராயணன், பாலாஜிஸ்ரீனிவாசன், ஏ.எஸ்.குமார், ஸ்ரீனிவாச ராகவன் ஆகியோர் செய்துவருகின்றனர்.

வேத வல்லுநர்களை உருவாக்கும் இவர்களது முயற்சியானது, வேதங்களைப் படிக்கும் மாணவர்களை மட்டுமல்ல, அவர்களின் மூலமாக வருங்கால உலகத்தையும் தழைக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

- இ.லோகேஸ்வரி