Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குமுளி அப்பர்கேம்ப் ஸ்ரீ வன காளியம்மன் கோயில் திருவிழா!

“ ஒரு ஊரில் உள்ள அனைத்து மக்களாலும் பூஜிக்கப்படுகிற , ஊரின் எல்லையோரங்களிலிருந்து மக்களை காக்கும்   , பெரும்பாலும் வடக்கு நோக்கி அமைந்த   கோயில்கள் பெரும்பாலும்   சிறு தெய்வங்களாக இருக்கும் . அவை பெயரளவில் சிறு தெய்வங்களே தவிர , அவற்றின் வழிபாட்டு முறைகளும் , சிறு தெய்வத்தின் பெருமையும் ஊர் மக்களால் மிகவும் நம்பிக்கையாக பேசப்படும்   “   இவ்வாறாக வரலாற்று ஆய்வாசிரியர் தொ.பரமசிவம் தன்னுடைய நூலில் சிறு தெய்வங்களை பற்றி குறிப்பிடுவார் . 



அவர் கூறிய சிறுதெய்வங்களின் இலக்கணப்படியே அமைந்து குமுளி அப்பர் கேம்ப் பகுதியிலுள்ளது   ஸ்ரீ வன காளியம்மன் திருக்கோயில் .   பங்குனி மாதம் 16 ஆம தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்கள் அதாவது , திங்கள் , செவ்வாய் , புதன் ஆகிய நாட்களில் வன காளியம்மன் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . குமுளி பகுதியை சுற்றியுள்ள , ரோஜாப்பூ கண்டம் , வள்ளிக்கண்டம் , அட்டப்பமேடு , தாமரைக்கண்டம் என இருபதுக்கும் மேற்பட்ட சிற்றூர்களிலிருந்தும் , கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலிருந்தும் , தமிழகத்தின்   கம்பம் , லோயர் கேம்ப் , கூடலூர் ஆகிய பகுதிகளிருந்து மக்கள் வன காளியம்மனை வழிபட்டனர் . திங்கள் கிழமை சுமார் 1500 மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .

அதோடு வன காளியம்மனுக்கு பால் , பன்னீர் , நெய் ஆகியவற்றால் அபிஷேகமும் செய்யப்பட்டது . சபரி மலைக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் வன காளியம்மனை வணங்கிவிட்டு ஐயப்பனை தரிசிப்பர் .மதுரையை எரித்த கண்ணகி இந்த பகுதி வழியாக கண்ணகி கோவிலுக்கு சென்ற வரலாறும் உண்டு . தமிழக கேரள மாநில எல்லைகளின் முகப்பில் அமைந்துள்ளதால் இந்த கோவில் தனியாக இன்னொரு சிறப்பையும் பெறுகிறது .     


இன்று இரண்டாம் நாளான செவ்வாய்கிழமை கோவிலுள்ள கணபதிக்கும் , அம்மனுக்கு நடைபெறும் காலை மற்றும் உச்சிகால   பூஜைகளை தொடர்ந்து மாலை ஏழு மணி வரை பக்தர்களுக்கு தீபாரதனை அபிஷேகங்கள் நடக்கும் . தொடர்ந்து தேக்கடியிலிருந்து முளைப்பாரிகள் கொண்டு வந்து அம்மன் சன்னதியில் வைத்து மக்கள் வழிபட்டு செல்வர் . 

வன விலங்குகளால மக்களுக்கு எவ்வித தீமையும் , அதே நேரத்தில் வன விலங்குகளும் காட்டு தீ போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருக்கவும் , நீண்ட தூரம் பயணம் செய்வோர் தங்களுடைய பயணம் சிறப்பாக இருக்கவும் அம்மனை வழிபட்டு செல்வர் .  இங்கு கருப்பண சாமிக்கும் , விநாயகருக்கும் தனித்தனியான பூஜைகளும் செய்யப்படுகின்றன .

இறுதி நாளான புதன் கிழமை   வனகாளிக்கு மாவிளக்கு , பால்குடம் எடுத்து வழிபாடு நடைபெறுகிறது .   அதை தொடர்ந்து பாலாபிஷேகத்தில் இரு மாநிலத்தை சேர்ந்த பக்தர்களுக்கும் தீச்சட்டி , பொங்கல் வைத்து அம்மனுக்கு தங்கள் நேத்திக்கடனை தீர்க்கின்றனர் . விழாவின் கடைசி நிகழ்ச்சியாக அம்மன் கரகம் எடுத்து ஊர்வலமாக சென்று பின் அம்மன் சன்னதியில் வைத்து நிறைவாக கான மேளாவுடன் ( பாட்டு கச்சேரியுடன் ) விழா முடிகிறது . இரு மாநிலங்களின் எல்லையில் இருக்கும் வன காளியம்மனை தரிசித்து அருள்பெற ஒரு முறை தேக்கடிக்கு சென்று வரலாமே ! 

செய்தி : உ.சிவராமன் 
படங்கள் : வீ. சக்தி அருணகிரி .