Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வசந்த விழா!

சித்திரை, வைகாசி மாதங்களில் வசந்த கொண்டாட்டம் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் திருவிழாவாகும். பெரிய ஆலயங்களில் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. பல ஆலயங்களில் இதற்கெனவே வசந்த மண்டபம் கட்டி வைத்திருக்கிறார்கள்.

 

பெரும்பாலும் தோட்டத்தின் நடுவே உயர்வாக 16 கால் மண்டபமாக, விமானத்துடன் இது திகழும். சுற்றிலும் அகழி போல் அமைத்து, அதில் நீரைத் தேக்கிவைத்து நீர்ப் பூக்களை இட்டுவைத்திருப்பார்கள். விழாவையொட்டி மண்டபத்தை சுற்றிலும் வெட்டிவேர் தட்டியால் தடுப்பு அமைத்திருப்பார்கள். அந்த இடமே குளிர்ச்சியாகத் திகழும். வசந்த விழாவின் இறை ஆராதனைகள் இந்த மண்டபத்தில்தான் நடைபெறும். வெள்ளரிப் பிஞ்சு, நீர்மோர், பானகம், தயிர்சாதம் முதலியன ஸ்வாமிக்கு நிவேதிக்கப்படும். கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் விழாவாகவே இது கொண்டாடப்படுகிறது.

 

 

வசந்தம் என்பது மகிழ்ச்சியின் அடையாளம். மன்மதனுக்கு வசந்தன் என்று பெயர். வசந்த காலத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்று பாடும் குயில்களுக்கு வசந்த கோகிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

 

வசந்தம் கலைகளின் வெளிப்பாடாக அமைந்து மக்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதால், கலைகளின் தெய்வமான சரஸ்வதியை வசந்தி என்றும் வசந்தா என்றும் அழைப்பர். அம்பிகைக்கும் வசந்தவல்லி, வசந்த நாயகி எனும் திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன.

 

செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள வல்லம் எனும் திருத்தலத்தில் உள்ள மலையில் உள்ள குடைவரைக் கோயிலை வசந்தீசுவரம் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன.திருவண்ணாமலை அண்ணாமலையார் வீரவசந்த வைபோக வல்லாள மகாராஜனுக்குக் குழந்தையாகத் தோன்றியதால், அருண வசந்தர் என்று அழைக்கப்படுகிறார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி திருவண்ணாமலையில் வசந்த விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் மே 3ம் தேதி சித்ரா பெளர்ணமியன்று மகா கிரிவலம் நடக்கவிருக்கிறது.


 

- பூசை. .அருண வசந்தன், சென்னை-4