Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருக்கடையூர் காலசம்ஹார மூர்த்தி வீர நடன திருக்காட்சி...

மிருகண்டு முனிவருக்கும் அவருடைய பத்தினி மித்திராவதிக்கும் திருமணம் ஆகி ஆண்டுகள் பல சென்றும் குழந்தை பாக்கியம் இல்லாததால், மனம் வருந்திய அவர்கள் சிவபெருமானைக் குறித்து தவம் இயற்றினர். அவர்களுடைய தவத்துக்கு மனம் இரங்கி அவர்களுக்கு தரிசனம் தந்த சிவபெருமான், அவர்களுக்கு சத்புத்திர பாக்கியம் உண்டாகும் என்று கூறியதுடன், அந்தக் குழந்தையின் ஆயுள் 16 வயதுதான் என்றும் கூறினார். பிள்ளை வரம் கிடைத்தாலும்கூட அந்தப் பிள்ளைக்கு குறுகிய ஆயுள் என்பதால் மனம் வருந்திய முனிவர், 'எல்லாம் ஈசனின் செயலே' என்று நினைத்து ஓரளவு சமாதானம் அடைந்தார். சிவபெருமானின் வரத்தின்படியே அவர்களுக்கு சர்வ லட்சணங்களுடன் கூடிய ஒரு பிள்ளை பிறந்தது. பிறந்த பிள்ளைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டி அருமைபெருமையாக வளர்த்து வந்தனர். மார்க்கண்டேயனும் சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தெளிந்ததுடன், சிவபக்தியிலும் சிறந்து விளங்கினான். அவனுக்கு 16 வயது நெருங்க நெருங்க, பெற்றவர்கள் வருந்தி மனம் கலங்கினர். பெற்றவர்களின் கலக்கத்துக்குக் காரணம் புரியாத மார்க்கண்டேயன், வற்புறுத்தி அவர்களுடைய கலக்கத்துக்கான காரணத்தை தெரிந்துகொண்டான். தன்னுடைய ஆயுள் முடியப்போவது குறித்து மார்க்கண்டேயன் சிறிதும் கலங்கவில்லை. ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று சிவபெருமானை வழிபடப்போவதாகப் பெற்றவர்களிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டு ஒவ்வொரு சிவ ஸ்தலமாக தரிசித்து வந்தான்.

திருக்கடையூரை நெருங்கும்போது, அவனுடைய ஆயுளும் முடியும் நேரம் வந்தது. மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்ந்து செல்ல காலனும் வந்துவிட்டான். காலனைக் கண்டும் கலங்காத மார்க்கண்டேயன், தான் பூஜித்து வந்த சிவலிங்கத்தை இறுகத் தழுவிக்கொண்டான். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை இறுகத் தழுவிக்கொண்ட அந்த நிலையிலும், மனத் துணிவு மிக்கவனாக யமதர்மன் தன் பாசக்கயிறை மார்க்கண்டேயன் மீது வீச, தன்னைத் தஞ்சம் அடைந்த தன் பக்தனின் உயிரைக் கவரத் துணிந்த யமதர்மன் மேல் சினம் கொண்ட சிவபெருமான், அவனை சம்ஹாரம் செய்தார். மேலும் மார்க்கண்டேயனுக்கு சிரஞ்சீவி வரமும் தந்து அருள் புரிந்தார்.

சிவபெருமான் காலனை சம்ஹாரம் செய்ததால், பூமியில் மரணங்களே இல்லாமல் போனதுடன் பாவங்களும் பெருகியது. பாரம் தாங்கமாட்டாத பூமிதேவி சிவபெருமானை பிரார்த்திக்க, அவளுடைய பிரார்த்தனையின்படி சிவபெருமான் யம தர்மனுக்கு உயிர் கொடுத்து அனுக்கிரஹம் செய்தார்.
மார்க்கண்டேயனுக்கு சிரஞ்சீவித் தன்மை அருளியதும், யமனை சம்ஹாரம் செய்ததும், பின்னர் பூமிதேவியின் பிரார்த்தனைக்கு இணங்கி அவனுக்கு உயிர் கொடுத்து அனுக்கிரஹம் செய்ததுமான திருக்கடையூர் திருத்தலத்தில் அருள்புரியும் காலசம்ஹார மூர்த்தி வருஷத்துக்கு ஒருமுறையே (சித்திரை பிரம்மோற்ஸவத்தின்போது) தம்முடைய சந்நிதியை விட்டு வீர நடனக் கோலத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.

அந்த வகையில் இன்று 28-4-15 காலசம்ஹார மூர்த்தி தம்முடைய யதாஸ்தானத்தை விட்டு புறப்பட்டு பக்தர்களுக்கு வீர நடனக் காட்சி தரும் படங்கள் பிரத்தியேகமாக எடுக்கப்பட்டு இங்கே சக்தி விகடன் வாசகர்களுக்காக வழங்கி இருக்கிறோம்.

எஸ்.கண்ணன் கோபாலன்
படங்கள் : க.சதீஷ்குமார்