Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான்மாடக் கூடலில் மீனாட்சி கல்யாணம்!

கூடல் மாநகரின் பெருவிழா, சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான இன்று மீனாட்சி-சொக்கர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

 

முன்பு மதுரை மலையத்துவச பாண்டியன் ஆண்டு வந்தான். அவனது மனைவி காஞ்சனமாலை. இருவருக்கும் குழந்தை பேறு இல்லாத்தால் புத்திரகாமேட்டி யாகம் செய்தனர். அதன் பலனாய் அவ்வேள்வி குண்டத்திலிருந்து மூன்று ஸ்தனங்கள் கொண்ட ஒரு பெண் குழந்தையாக மீனாட்சி தோன்றினாள். அத்தோற்றம் கொண்டு மன்னன் மலையத்துவசன் கலங்கினான். அப்போது ஒர் அசரீரி கேட்டது. "இக்குழந்தை அவள் கணவனை முதன் முதலாக காணும் போது ஒரு ஸ்தனம் மறைந்து விடும்" என்றது. பின்பு அக்குழந்தைக்கு தடாதகை என பெயரிட்டு வளர்த்தனர். அவள் 64 கலைகளையும் கற்று மலையத்துவசனுக்கு பிறகு மதுரையை ஆண்டாள். பின்பு திக்விஜயம் செய்து அக்னி, வருணன், இந்திரன் போன்றோரை வென்றாள். இறுதியாக திருக்கயிலாயத்துக்குப் புறப்பட்டன தடாதகையின் சேனைகள். அங்கே அவள் சிவனாரைக் கண்டதுமே அவளது மூன்று ஸ்தனங்களில் ஒன்று மறைந்தது. அவரே தன் தலைவன் என்பதை உணர்ந்தாள் தடாதகை. கயிலைக் கடவுளுக்கும் தடாதகைக்குமான மண விழா ஏற்பாடுகள் துவங்கின.

 

 

 

 

 

 

 

தடாதகையின் திக்விஜய வைபவம், இன்றைக்கும் மதுரையில் ஶ்ரீ மீனாட்சித் திருகல்யாணத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படுகிறது. திக்குவிஜயம் நிகழ்ச்சியின் இறுதியில் கீழமாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பில் நடைபெறும். இதில், மீனாட்சியாக ஒரு சிறுமியும், சொக்கனாக ஒரு சிறுவனும் தேர்ந்தெடுக்கபட்டு, இந்நிகழ்வை நடைபெறும்.

இன்று வடக்கு ஆடி வீதியில் பிரம்மாண்டமான வண்ணமிகு பந்தல் அமைத்து, மேடை அமைத்து, நெய் மணக்கும் யாக குண்டங்களில் சிவாச்சாரியார்களின் மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியும் ,மீனாட்சியை தாரை வார்த்து கொடுப்பதற்காக ஆருள்மிகு பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய தெய்வங்களும் உடனிருந்தது சிலிர்ப்பான காட்சி.

 

 

 

 

 

 

இத்திருக்கல்யாணத்தில் மணமகள் அங்கயற்கண்ணியாக ஒருவர், மணமகன் ஆலவாய் சொக்கனாக ஒருவர் என இரண்டு சிவாச்சார்யர்கள் திருமணச் சடங்கில் பங்கு கொண்டு,மணமக்கள் போல மாலை மாற்றிக் கொள்ளும் மங்கல வைபவம் நடந்தேறியது. தொடர்ந்து மாங்கல்ய தாரணம் நிகழ மகாதீபாராதனையுடன் அம்மையும் அப்பனும் பக்தர்களுக்கு மணக்கோலத்தில் திருக்காட்சி தந்த்ருளினார்கள். அதே தருணத்தில் வைபவத்தைக் காண வந்த பெண்கள் மீனாட்சியின் அருளால், தங்கள் வாழ்விலும் மங்கலம் நிறைந்திருக்க மாங்கல்ய பலம் வலுத்திருக்க அன்னையை வேண்டிக் கொண்டு மங்கலச் சரடு அணிந்து கொண்டது சிலிர்ப்பான காட்சி. 

 

 

 

 

 

பின்னர், மதுரை சேதுபதி உயர்நிலை பள்ளியில் கல்யாண விருந்து நடைபெற்றது. சாலையில் ஆங்காங்கே பக்தர்கள் மாங்கல்யா தானமும், அன்ன தானமும், பிரசாதமும், நீரும், மோரும் அளித்து மகிழ்ந்தனர்.

 

- பி. சூரியராஜ், மாணவ பத்திரிகையாளர்,

படங்கள்: இ.ஜெ. நந்தகுமார், மாணவ பத்திரிகையாளர்

மதுரை