Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறைத்தொண்டு செய்யும் சிறுவர்கள்!

சிறுவர்கள் என்றால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று எந்நேரமும் குதூகலமான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பதைத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் தேனி மாவட்டம், தாமரைக்குளத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சற்று வியப்பளிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.  பள்ளி நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் கோயிலை சுத்தம் செய்வதையே தங்கள்
பொழுதுபோக்காக கொண்டிருக்கின்றனர். வீடியோ கேம்ஸ் யுகத்தில் கோயிலை சுத்தம் செய்கிறார்களா? என்று சற்று நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர் இந்த சிறுவர்கள்.

“சௌந்திரபாண்டி, பரணிக்குமார், மாரிமுத்துப்பாண்டி, கிரண், ரோஹித், மோனீஸ்குமார், முத்துக்குமார், அஜீத்பாண்டி, சந்தனபாண்டி, லோகேஷ்,கௌதம், ஜெகதீஷ் - இவர்கள்தான் அந்த 12 இளம் திருவாளர்கள்.
இரண்டாம் வகுப்பு படிக்கும் ஜெகதீசிலிருந்து,10-ஆம் வகுப்பு படிக்கும் அஜித்பாண்டி வரை, அவர்களை ஒன்றிணைத்தது, மனதில், வீற்றிருந்த, இறைப்பணி ஒன்று மட்டும்தான்.” இந்தக்குழுவில் எம்பெருமான் மட்டுமே தலைவன், மற்ற அனைவருமே தொண்டர்கள்தான்” என அச்சிறார்கள் கூறியது, நம்மை வெகுவாக ஆச்சர்யப்படுத்தியது.

“எங்க எல்லாத்துக்கும் சொந்த ஊர் தாமரைக்குளம்தான் அண்ணே, 4 வருசத்துக்கு முன்னாடி இந்த 600 வருஷ பழமையான வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலும் சும்மா கேட்பாறற்றுதான் கிடந்துச்சு. பிறகு, பசங்க நாம எல்லாம் சேர்ந்து, சும்மா இருக்கிற லீவு நாள்ல ஏன் கோயில சுத்தம் பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. எங்க தெருப்பசங்கல்லாம் அன்னைக்கு ராத்திரியே, விளையாடுறப்ப, கூட்டத்தக் கூட்டி பேசுனோம். மறுநாளே வந்து கோயிலைச் சுத்தம் பண்ணணும்னு வீட்டுல இருந்து வாளி எடுத்து வந்து, தெருக்குழாய்ல தண்ணி நிறைச்சு, மலையில கஷ்டப்பட்டு மேல ஏத்தி, வெங்கடாஜலபதி பெருமாள் கோயில சுத்தம் பண்ணுனோம். பிறகு லீவு நாள்ல, சுத்தம் பண்ணுவோம்,” என தன் மனதில் சுத்தம் செய்வதற்கான விதை விழுந்த இடத்தை நினைவு கூறுகிறான், 8-ஆம் வகுப்பு மாணவன் சௌந்திரபாண்டி…

“பிறகு, அடுத்தடுத்த வாரங்கள்ல கோவிலைச் சுத்தி துளசி, மனோரஞ்சிதம் , சங்குப்பூ, மல்லிப்பூ, அரளிப்பூ, வேப்பமரம், மாங்கன்று, அரசமரம், தென்னை, நெல்லி, கொய்யான்னு கன்னுகளை வாங்கி நட்டு வைச்சோம். இதுக்காக, நாங்க யார்கிட்டேயும் காசு வாங்கிறது இல்ல. எல்லாமே எங்க செலவுக்காக, வீட்டுல கொடுக்கிற காசுதான். உதாரணத்துக்கு, பரீட்சை நேரத்துல 10 ரூ. தந்தாங்கன்னா, 5 ரூபாய்க்கு பேப்பர், மை வாங்கிட்டு, மீதி 5 ரூபாய, கோவிலுக்கு செலவழிச்சுருவோம். அநாவசியமா எதையும் வாங்கி சாப்பிடமாட்டோம். அந்தக்காச சேர்த்து வச்சு கோவில் திருப்பணிகளுக்குத்தான் பயன்படுத்துவோம்” என்றான் பத்தாம் வகுப்பு மாணவன் அஜித்பாண்டி.

“அது மட்டுமில்லண்ணே, பக்கத்துல இருக்கிற தொந்தி விநாயகர் கோயில்ல நாங்கதான் எல்லாப் பணியும் செய்வோம். விநாயகரை குளிப்பாட்டிவிட்டு, வெண் ஆடை சாத்துறது, சங்கடஹர சதுர்த்தி அன்னைக்கு சந்தனக்காப்பு பண்ணுறதுன்னு எல்லாமே பண்ணுவோம்” என்றான் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஜெகதீஷ்.

உடனே இடைமறித்த, ஐந்தாம் வகுப்பு படிக்கும் லோகேஷ், “நாங்க செய்யிறத பார்த்துட்டுத்தான் பெரியவங்க எல்லாரும் இந்தக் கோவிலுக்கு வந்தாங்க அண்ணே. அப்புறம் தினமும் ஒரு ஐயர் மாலையில் 4 மணிக்கு வந்து 8.30 மணி வரை இருப்பார்ண்ணே… அவருக்கும் எங்களப் பிடிச்சுப்போச்சு. அவரோட எல்லா வேலைக்கும் நாங்க எல்லாரும் உதவிபண்ணுவோம். புதுவருசத்துக்கு வீட்டுல இருந்து கேசரி ரெடிபண்ணி கொண்டுவந்து, கேக் மாதிரி வச்சு, மெழுகுவத்திய அணைச்சு, கோவிலுக்கு வர எல்லாருக்கும் கேசரிய பிரசாதமா தருவோம். மார்கழி மாசம் அதிகாலையில 4.30க்கு எழுந்து பஜனைக்கு போயிடுவோம். வியாழக்கிழமை கோவிலுக்கு முன்னாடிக்கூடி, கூட்டுப்பிரார்த்தனை பண்ணுவோம். சிறப்பு திறனாளிகள், வயசானவங்க, மலையில ஏறி நடந்து வரக் கஷ்ட பட்டாங்கன்னா, பக்கத்துலப்போய் கையப்பிடிச்சி கூட்டிட்டு வருவோம். பெரிய கார்த்திகைக்கு தூண்ல விளக்கேத்த உதவுவோம். பௌர்ணமி அன்னைக்கு நடக்குற சத்தியநாராயாணா பூஜையில கலந்துக்கிறவங்களுக்கு பிரசாதத்துக்குண்டான தேக்கு இலையில செஞ்ச தொன்னை ( பிளாஸ்டிக் கப் போன்றது) வாங்கிக்கொடுப்போம் . சனிக்கிழமை துளசிப்பிடிங்கி கொடுப்போம்” என்று தங்களுடைய குழுவின் பணிகள் பற்றி விவரித்தான் 5-ஆம் வகுப்பு படிக்கும் லோகேஷ்.

“நாங்க ஊர் நல்லாயிருக்கணும், நாடு நல்லாயிருக்கணும்தான் எல்லாமே பண்ணிட்டு இருக்கோம். ஆனா, எங்கள எல்லோரும் ‘ஓசி பொங்கச்சோறு திங்க கோஷ்டி கிளம்பிடுச்சாடா’ன்னு சிலர் கிண்டல் பண்றாங்க…. அவங்களையும் இந்த வெங்கடாஜலபதி பெருமாள் ஒருநாள் கேப்பாரு. ஓம் நாமோ நாராயாணா” என்று முடித்தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கௌதம்.

‘வழிகாட்ட ஆளில்லாமலே… இறைவனைப்போற்ற வேண்டும்” என்ற விதை இன்று சிறுவயதிலேயே, இந்த பிஞ்சுகளின் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்டது. இனி இந்த சிறுவர்கள் நம் வருங்கால தமிழ்க் கலாசாரத்தை ஒழுக்கத்துடன் கட்டிக்காப்பார்கள்’ என்பது இறைவனின் நிர்பந்தம்.\

“இறை நிந்தை செய்யும் ஊர்ப்பெரியவர்களை விட, கோவிலின் சுத்தத்தை மதிக்கும் இளம் சிறார்கள்” போற்றுதலுக்குரியவர்கள்தான்.

ம. மாரிமுத்து (மாணவப்பத்திரிகையாளர்) ,
படங்கள் : வீ.சக்தி அருணகிரி