Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென்னகத்தின் முக்திநாத் - புன்னைநல்லூர் ஸ்ரீகோதண்ட ராமர்!

புன்னைநல்லூர் என்றாலே மாரியம்மனின் அருள் பொருந்திய முகமும், எழிலடர்ந்த புன்னை மரங்களும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் அதே ஊரில் முக்திநாத்திற்கு இணையான ஒரு கோயில் உள்ளது! ஆம். 18ஆம் நூற்றாண்டில், தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் பிரதாப்சிங்  மகாராஜாவால் கட்டப்பட்ட புன்னைநல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்தான் அது!

பொதுவாக ராமர் கோயில்களில் ராமரின் அருகில் ஆஞ்சநேயர்தானே வீற்றிருப்பார்!!! ஆனால் இங்கு சுக்ரீவன் நமக்கு அருள் பாலிக்கிறார். இவ்வாலயத்தின் சிறப்பு இங்கிருக்கும் மூலவர்களான ராமர், லக்ஷ்மணர், சீதா பிராட்டி, சுக்ரீவர் அனைவரும் நேபாளத்தில் கண்டகி நதியில் கிடைக்கும் சாளகிராமத்தைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளனர்!  சாளக்கிராம கல்லை வழிபட்டால் சகல செல்வமும் கிடைக்கும் என்றால், சாளக்கிராமத்திலான சிலைகளை வழிபட்டால்.. எவ்வளவு புண்ணியம்!

 

அதுவும் சாளக்கிராமம் உருவாகும் இடத்துக்கு சென்று வழிபடுவதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனாலேயே நேபாளத்தின் அருகில் உள்ள முக்திநாதர் ஆலயத்திற்கு எப்போதுமே பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அங்கே செல்ல முடியாதவர்கள், புன்னைநல்லூருக்கு வந்து சாளக்கிராமத்திலான கோதண்டராமரை நெக்குருகி வழிபட்டால் முக்திநாதரை வழிபட்ட பலன்கள் கிடைக்குமாம். அதனால் இவ்வாலயத்தை தென்னகத்தின் முக்திநாத் என்றும் அழைக்கிறார்கள்.

இத்திருக்கோயிலில் தலவிருட்சம் புன்னைமரம். புன்னைமரக்காடுகளாக இருந்ததால் இவ்வூர் புன்னைநல்லூர் என்ற பெயரால் வழங்கப்படுகிறது. இக்காரணத்தினாலும் கிருஷ்ணர் குழந்தை பருவத்தில் புல்லாங்குழலுடன் புன்னைமரத்தில் விளையாடுவார் என்ற நம்பிக்கையாலும் புன்னைமரம் தலவிருட்சமாக இருக்கிறது. இப்புன்னை மரத்தடியில் ஸ்ரீஇராமபிரானது திருவடிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இன்னும் சிறப்பு.

சீதையின் இருப்பிடம் அறிந்து ஆஞ்சநேயர் அந்த செய்தியைச் சொல்ல தாமரைப் பூவுடன் சென்றாராம். அதைப்போலவே இங்கிருக்கும் தனி மண்டபத்தில் ஆஞ்சநேயர் ‘கதை’ இல்லாமல் தாமரைப் பூவை கையிலேந்தி காட்சியளிக்கிறார். இந்த மண்டபத்தின் மேற்கூரையில் பன்னிரெண்டு ராசிக் கட்டங்கள் உள்ளன. பக்தர்கள் தங்கள் ராசிக்குக் கீழே நின்று ஆஞ்சநேயரைப் பிரார்த்தித்தால் நினைத்தது நடக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

தஞ்சையில் இருந்து சுமார் ஏழு கி.மீ தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். கோதண்டராமர் கோயிலின் அருகிலேயே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது.   

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
 தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
 சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
 இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்”

என்ற ராம நாமத்தை கூறி புண்ணியம் அடைவோம்!

ஆ. மேரி செல்வ இஸ்ரேலியா   
(மாணவ பத்திரிகையாளர்)
படங்கள்:  குணசீலன்