Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெயில் கொடுமையா... பதற வேண்டாம்!

''வெயில் இப்போதே வதைக்கிறது. அக்னி நட்சத்திரத்தை நினைத்தாலே, நா வறட்சியாகிறது. இந்த வெயிலின் கொடுமையில் இருந்து தற்காத்துக் கொள்ள, வீட்டில் பின்பற்றக் கூடிய, பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் தாருங்கள்!''  வேலூர் வாசகி மங்கையின் கடிதம் இது. ஆலோசனைகள் தருகிறார், ஹோமியோபதி மருத்துவர் ஜீவா சேகர்.

''கோடையில் வியர்வையால் உடலின் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறும் என்பதால், ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்ளர் நீர் அருந்த வேண்டும். கோடையில் ஏற்படும் கண் எரிச்சல், கண்கட்டி, கண்களிலிருந்து நீர் வழிவது போன்ற தொல்லைகளைத் தவிர்க்க, வெளியில் சென்று வந்ததும் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வேண்டும். நறுக்கிய வெள்ளரிக்காயை கண்களில் சில நிமிடங்கள் வைத்திருந்தாலும், சூடு தணியும்.

வாரத்துக்கு இரண்டு முறை கண்டிப்பாக தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும். குளிக்கும் நீரில் வேப்பிலை போட்டு குளித்தால், சரும நோய்கள் அண்டாது. அடர்நிற ஆடைகள் தவிர்க்கவும். பருத்தி உடைகள் அணிவது நலம். சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்தலாம். தலையில் வெயில் நேரடியாக படாதவாறு தொப்பி, குடை பயன்படுத்தலாம். வியர்வையை உறிஞ்சி அலர்ஜிகளைத் தவிர்க்கும் காட்டன் சாக்ஸ், கோடைக்கு நல்லது. வேனல் கட்டிகளுக்கு சந்தனமும் மஞ்சளும் கலந்து பூசி வர, நல்ல பலன் கிடைக்கும். அதிகப்படியான மேக்கப், கோடையில் வேண்டாம்.

வயிறு முட்ட உண்பதையும், காரசாரமான உணவுகளையும் தவிர்க்கவும். நீராகாரங்களையும், வெயில் காலங்களில் விளையும் காய்கள், பழங்களையும் அதிகமாக எடுத்துக் கொள்ளவும். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் தவிர்த்து இளநீர், மோர் பருகலாம். மோரில் பச்சை மிளகாய்க்குப் பதில் இஞ்சி, பெருங்காயம் சேர்க்கலாம். குடிநீரில் குறுமிளகு, சிறிதளவு வெட்டிவேர், சீரகம் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவிட்டு, ஆறவைத்துக் குடிக்கலாம். முடிந்த வரை டீ, காபி தவிர்த்து எலுமிச்சைச் சாற்றில் சர்க்கரை மற்றும் உப்பு சம அளவு கலந்து குடிக்கலாம். நறுக்கிய வெள்ளரிக்காயில் மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் தூவி சாப்பிட்டால்... நீர் கடுப்பைத் தவிர்க்கலாம். எண்ணெய்ப் பதார்த்தங்கள் தொடர்ந்து சாப்பிட்டால், மயக்கம்கூட ஏற்படலாம் என்பதால் குறைத்துக்கொள்ளவும். காலையில், ஊறவைத்த வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

முகத்தில் ஏற்படும் கருமை நீங்க, கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை தலா ஒன்றை வெந்நீரில் போட்டு நாள் முழுக்க ஊறவைத்து அரைத்து, இந்தக் கலவையோடு பப்பாளிப் பழத்தைச் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம். மெத்தையில் படுப்பதைவிட, தரையில் கோரைப் பாய் விரித்து உறங்கலாம். பகல் நேர தூக்கம் தவிர்த்து இரவில் குறைந்தது, எட்டு மணி நேரம் அமைதியான சூழலில் உறங்கவும்.''

ந.ஆஷிகா, படம்: இரா.யோகேஷ்வரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கைகொடுக்கும் கிராஃப்ட்! - 35
‘ஊருன்னா தஞ்சாவூரு... சும்மா கலக்குவோம் இப்போ பாரு!’
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close