Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஞ்சலக சேமிப்பு... அழகான லாபம்!

‘‘அஞ்சல் துறை, அதிகபட்ச பயன்கள் தரும் பல சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், மக்கள் அதனை குறைவாகவே பயன்படுத்திக்கொள்கிறார்கள். அஞ்சலக சேமிப்பு, மற்ற எல்லா சேமிப்புகளையும்விட பாதுகாப்பானது, உங்கள் பணத்தை பெருக்கக்கூடியது!’’ என்று அக்கறையுடன் வழிகாட்டும் சென்னை நகர்  மண்டல அஞ்சல துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர், அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் விவரங்கள் தருகிறார் இங்கு..!

அஞ்சலக சேமிப்புக் கணக்கு  (Savings Bank)

‘‘இந்தியக் குடிமகன்கள் யாரும் இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம், வயது வரம்பு கிடையாது. பத்து வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கை ஆரம்பித்துக் கொடுக்கலாம். கையெழுத்துப் போடத் தெரிந்த பத்து வயதுக் குழந்தை, தாராளமாகத் தன் பெயரிலேயே கணக்கைத் தொடங்கலாம். ஆரம்பத்தொகை 50 ரூபாய் மட்டுமே. செக் வசதி வேண்டுமென்றால், ஆரம்பக் கட்டணமாக 500 ரூபாய் கட்டி கணக்கைத் தொடங்க வேண்டும். வருடத்துக்கு 4% வட்டி கிடைக்கும். வட்டிக்கு 10,000 வரை வரிவிலக்கு உண்டு. இரண்டு அல்லது மூன்று நபர்கள் இணைந்த ஜாயின்ட் அக்கவுன்ட் வசதி மற்றும் நாமிநேஷன் உண்டு. அதிகபட்சம் சேமிப்பு என்பது கிடையாது. இந்தக் கணக்கில், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

டைம் டெபாஸிட் (Time Deposit - TD)

இது ஃபிக்ஸட் டெபாஸிட். ஒரு முறைதான் பணம் செலுத்த முடியும். ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம், ஐந்து வருடம் என, ஃபிக்ஸடு காலத்தை தேவையைப் பொறுத்துத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அந்தக் காலம் முடிந்ததும், சேமிப்புப் பணத்தை வட்டியுடன் பெறலாம். ஒரு வருடம் முதல் மூன்று வருடம் வகைக் கணக்குகளுக்கு 8.4% வட்டி கிடைக்கும். ஐந்து வருடக் கணக்குக்கு 8.5% வட்டி கிடைக்கும். காலாண்டு கூட்டு வட்டி கிடைக்கும். வயது வரம்பற்ற இந்தக் கணக்கில், ஜாயின்ட் அக்கவுன்ட் வசதியும் பெறலாம். குறைந்தபட்சமாக 200 ரூபாய் டெபாஸிட்டில் ஆரம்பிக்கும் இந்த சேமிப்புக் கணக்கில், 200-ன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாஸிட் செய்யலாம். ஒருவரே எத்தனை அக்கவுன்ட்டுகள் வேண்டுமானாலும் ஆரம்பித்துக்கொள்ளலாம் என்பதுடன், இதுக்கு லாக் அப் பீரியட் என எதுவும் கிடையாது. டெபாஸிட் பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஐந்து வருட கணக்கில் செலுத்தும் தொகைக்கு வருமானவரி சலுகை உண்டு. கணக்கின் காலம் முடிந்தும் பணத்தை எடுக்கவில்லை எனில், அஞ்சல் துறையே (CBS P.O மட்டும்) அந்தக் கணக்கை புதுப்பித்துக்கொள்ளும்.

மாதாந்தர வட்டித் திட்டம் (Monthly Income Scheme - MIS)

குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் அதிக பட்சமாக ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரம் வரை இந்தத் திட்டத்தில் டெபாஸிட் செய்யலாம். ஜாயின்ட் அக்கவுன்ட் எனில் 9 லட்சம் வரை டெபாஸிட் செய்யலாம். ஒரே தவணையாக செலுத்த வேண்டும். 1,500-ன் மடங்குகளில் சேமிக்கலாம்.  மாதம் 8.4% வட்டி கிடைக்கும். ஐந்து வருடங்களுக்கு கணக்கை தொடர முடியும். தேவைப்பட்டால் ஒரு வருடத்துக்குப் பின் பணத்தை எடுத்துக்கொள்ள லாம். வயது வரம்பு கிடையாது, இதற்கு நாமினேஷன் உண்டு.

சீனியர் சிட்டிஸன் - முதியோர் சேமிப்புத் திட்டம்  (Senior Citizens Savings Scheme - SCSS)

அதிகபட்சமாக... வருடத்துக்கு 9.3% வட்டி கிடைக்கும் சேமிப்புத் திட்டம் இது. இந்த வட்டியை ஒவ்வொரு மாதமும் எடுக்க முடியாது. மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் எடுக்க முடியும். குறைந்தபட்சம் 1,000 ரூபாயில் இருந்து, ஆயிரத்தின் மடங்குகளில், அதிகபட்சமாக ஒருவர் 15 லட்சம் வரை டெபாஸிட் செய்யலாம். இந்தக் கணக்கை ஆரம்பிக்க, 60 வயது முடிந்திருக்க வேண்டும் அல்லது 55 வயது முடிந்து பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. பணி ஓய்வு பெற்றவர்கள், அவர்களின் பணி ஓய்வுப் பணத்தை ஒரு மாதத்துக்குள் டெபாஸிட் செய்துவிட வேண்டும். கணக்கை ஐந்து வருடங்கள் வரை தொடரலாம். ஒரு வருடத்துக்கு பின் பணம் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளலாம். ஐந்து வருடங்களுக்குப் பின், தேவைப்பட்டால் கணக்கை மேலும் மூன்று வருடங்கள் தொடரலாம். இந்த திட்டத்துக்கு வரிவிலக்கு சலுகையும் உண்டு.

இவை தவிர, ஒன் டைம் டெபாஸிட் முறையைக் கொண்ட கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra - KVP), நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிஃபிகேட்ஸ் (National Savings Certificates) திட்டங்களும் உள்ளன. `கிசான் விகாஸ் பத்ரா’ வில் 8.7% வட்டியும், எட்டு வருடம் நான்கு மாதம் வருட வரையறையும் உண்டு. நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிஃபிகேட்ஸ் திட்டத்தில், இரண்டு வகை உண்டு. ஐந்து வருட திட்டத்தில் 8.5 % வட்டியும், பத்து வருட திட்டத்தில் 8.8 % வட்டியும் பெறலாம். கிசான் விகாஸ் பத்ரா மற்றும் நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிஃபிகேட்ஸ்... இவற்றை வங்கிகளில் வைத்து கடன் பெற்று கொள்ளலாம்.

இந்தக் கணக்குகளை எல்லாம் தொடங்க, அடையாள அட்டை, முகவரிச் சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தை அணுகலாம். 50 ஆயிரத்துக்கு மேல் டெபாஸிட் செய்தால் மட்டும், பான் கார்ட் அவசியம். மொத்தத்தில், குடிமக்களுக்காக அஞ்சல் துறை வாயிலாக அரசு செயல்படுத்தி வரும் சேமிப்புத் திட்டங்களில், அதிக லாபம் பெறலாம் என்பது இப்போது புரிந்ததா..?!’’

- புன்னகையுடன் கேட்கிறார், மெர்வின் அலெக்ஸாண்டர்!

சேமிப்பு... உஷார்!

ஏஜென்ட் தவிர்!

வங்கி, அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் இன்ஷூரன்ஸ் திட்டங்களில் வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பணம் செலுத்துவதுதான் நல்லது. ஒரு வேளை ஏஜென்ட் மூலமாகப் பணம் செலுத்தினால், பணம் கொடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் பணம் செலுத்தியதற்கான ரசீதை வாங்கிவிடுவதுடன், ஒவ்வொரு மாதமும் செலுத்திய தொகை பாஸ்புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் கவனிப்பது அவசியம். ஒரு சில ஏஜென்டுகள் வசூலித்த பணத்தை ஒழுங்காக கட்டாமல் ஏப்பம் விட்டதால் ஏமாந்தவர்களின் கதை இங்கு நிறைய உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கே.அபிநயா  படம்: ஜெ.வேங்கடராஜ்


இதயக்கோளாறு நீக்கும் வெள்ளைப்பூண்டு!

ழங்காலம் முதல்  சமையலில் முக்கிய இடம்பெற்று வரும் வெள்ளைப்பூண்டுக்கு மருத்துவக் குணம் அதிகம் உண்டு. பக்கவாதம், வயிற்றுவலி போன்றவற்றுக்கு பூண்டு கைகண்ட மருந்து. மார்புச்சளியை கரைப்பதோடு, கபத்தை இளக்கி தூக்கத்தை தரக்கூடியது; செரிமானத்தையும் சீர்படுத்தக்கூடியது.

சளித்தொல்லை உள்ளவர்கள்... 10, 15 பூண்டுப்பற்களை உரித்து 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்து... பாதியாக வற்றியதும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், மிளகுப்பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக கடைய வேண்டும். பிறகு தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவு தூங்கப்போவதற்கு முன் அருந்தினால் மூக்கடைப்பில் தொடங்கி, நெஞ்சுச்சளி, கபம் போன்றவை சரியாகும்.

வாய்வுக்கோளாறினால் சிலருக்கு முதுகுப்பிடிப்பு, இடுப்புப்பிடிப்பு, கை-கால் வீக்கம் ஏற்படக்கூடும். அப்போது, வெள்ளைப்பூண்டினை தீயில் சுட்டு அதன் தோலை உரித்து சாப்பிடுவதால், பிரச்னைகள் விலகும். பூண்டினை ரசம், குழம்பு வைத்து சாப்பிடலாம். இதயக்கோளாறு, ரத்த அழுத்தம் உள்ளவர்களும், ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்திருப்பவர்களும் வெள்ளைப்பூண்டினை வேகவைத்து சாப்பிடுவதால் நாளடைவில் நோய்கள் கட்டுக்குள் வரும். இவைதவிர பூண்டுச்சாறுடன் தண்ணீர் கலந்து கிருமி தாக்கிய புண்களை, துடைத்து வந்தால்... புண்களில் வலி குறைந்து, சீழ் பிடிப்பது குறைந்து நாளடைவில் புண் ஆறும்.

- எம்.மரிய பெல்சின்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பணம், உங்கள் பலம்!
‘ஈகோ கிச்சன்’... 1,050 ரூபாய் முதலீடு... 350 ரூபாய் லாபம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close