Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இருந்த இடத்திலேயே சம்பாதிக்கலாம்... இணையத்தில்!

``தமிழ்நாட்டில் நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும், அது கிராமமாக இருந்தாலும்கூட, இணைய வசதி இருந்தால் இணைய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதித்துத் தரும் உங்கள் வீட்டுக் கணினி!

மார்க்கெட் ரிசர்ச் அனலிஸ்ட், கன்டன்ட் ரைட்டிங், ஆன்லைன் டியூஷன், மொழிபெயர்ப்பு போன்ற திறன் சார் வேலைகளுக்கு அடிப்படைக் கணினி அறிவும், நவீன தொழில்நுட்ப தகவல் தொடர்பு அறிவும் இருந்தால் போதும். சோஷியல் மீடியா டிசைனிங், மொபைல் ஆப் உருவாக்கம், கிராஃபிக்ஸ் டிசைனிங் போன்ற பணிகளுக்கு அதற்கான அடிப்படை கணினி கோர்ஸ்களை கற்றுவிட்டு களத்தில் இறங்கலாம்’’ என்று நம்பிக்கையூட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப தொழில்முனைவர், நரேன் ராஜகோபாலன்.

இணையத்தில் வேலைவாய்ப்புகளைக் கண்டறிவது குறித்து அவர் தந்த விளக்கத் தகவல்கள் இங்கே!

மார்க்கெட் ரிசர்ச் அனலிஸ்ட்

‘‘எல்லோராலும் செய்யக் கூடிய இந்தப் பணியில், ஒரு நிறுவனத்துக்குத் தேவையான தகவல்களைச் சேகரித்துக் கொடுப்பதே வேலை. உதாரணமாக, எந்த நிறுவனம் மார்க்கெட்டில் அதிகமான, தொடர்ச்சியான விளம்பரங்கள் கொடுக்கிறார் கள் என்பதைக் கவனித்து, அவர்களின் டார்கெட் வாடிக்கையாளர்கள் யார் யார், அவர்களை அணுகுவதற்கான வழிகள், விற்பனை போன்றவற்றை உங்களால் ஆன்லைனில் செய்து கொடுக்க முடிந்தால், அந்த நிறுவனத்திடம் நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பெரிய நிறுவனங்கள் என்றில்லை, சிறிய நிறுவனங்களையும் அணுகத் தயங்காதீர்கள். விசாலமான தேடல் அறிவு இருந்தால், ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கிடைக்கும். சேகரிக்கும் தகவல்களைப் பொறுத்து, சம்பளம் கூடுதலாகக் கிடைக்கும். 

மொழிபெயர்ப்பு

நம் பிரதமரின் ஜப்பான் பயணத்தின்போது, அடுத்த ஐந்து வருடங்களில் 35 பில்லியன் டாலர்கள் அவர்கள் நம் நாட்டில் முதலீடு செய்வதாகக் கூறியிருக்கிறார்கள். ஜப்பானிய மொழி உங்களுக்குத் தெரிந்திருந்தால், இருநாட்டு நிறுவனங்களுக்கான இணைய செய்தித் தொடர்புகளின் மொழிபெயர்ப்பு வேலைவாய்ப்பைக் கிடைக்கப் பெறுவீர்கள். பெரும்புதூர் மற்றும் ஒரகடத்தில் உள்ள கொரியன் நிறுவனங்களின் இணையச் சேவைகளுக்கு, கொரிய மொழிபெயர்ப்பாளர்கள் தேவை. இப்படி பிறநாட்டு மொழிகள் அறிந்த மொழிபெயர்ப்பாளர்களையும் இணையம் அழைக்கிறது. உங்களின் தகுதி, திறமையின் அடிப்படையில் உங்களைப் பற்றிய விரங்களைப் பதிந்துகொள்ளவும், இணைய வேலைவாய்ப்புகளை அறியவும் www.odesk.com, www.elance.com என்ற வலைதளங்களையும், e-commerce cart பற்றி தெரிந்துக்கொள்ள www.vhopify.com என்ற வலைதளத்தையும் அணுகலாம்.’’

கன்டன்ட் எழுதுங்கள்!

ஒரு விஷயத்தை சுருக்க மாகவும், எளிமையாகவும், கவித்துவமாகவும் உங்க ளால் எழுத முடியுமா? `ஆம்’ எனில், பல நிறுவனங்களின் இணைய விளம்பரங்களை நீங்கள் எழுதிக்கொடுக்கலாமே? கவர்ச்சியான மொழி, அடுத்தடுத்த நிறுவனங் களிலும் உங்களுக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கிக் கொடுக்கும். ஆரம்பமாக, உங்கள் ஏரியாவில் பல கிளைகள் வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தை அணு குங்கள்.

`மொபைல் ஆப்’ உருவாக்குவீர்களா?

இன்று எந்தத் தொழிலுக்கும் `ஆப்’ தேவை என்றாகிவிட்டது. ஒரு `ஆப்’-ஐ எப்படி உருவாக்குவது என்ற தகவல்களும் இணையத்தில் கிடைக்கிறது. யாருக்கு என்ன மாதிரியான ஆப் தேவை என்பதை சரியாகக் கணித்து, நம்பிக்கையுடன் களத்தில் இறங்குங்கள். உதாரணமாக, ஒரு ஃபார்மஸிக்கு, வாடிக்கையாளர்கள் என்னென்ன மாத்திரைகள் தேவை என்பதை குழப்பமில்லாமல் ஆர்டர் கொடுக்கும் ஆப்ஸை உருவாக்கிக் கொடுக்கலாம். ஆப்ஸ் எந்தளவுக்கு ஸ்மார்ட் ஆக இருக்கிறதோ அந்தளவுக்கு உங்களுக்கு வாய்ப்பும், வருமானமும் கிடைக்கும்.

சோஷியல் மீடியா டிசைனிங்

இன்று எல்லா நிறுவனங்களும் ஃபேஸ்புக், டிவிட்டர் என சமூக வலைதளங்களிலும் இயங்க வேண்டிய சூழல். எனவே, அவர்களுக்கான சமூக வலைதள விளம்பரப் பக்கங்களை உருவாக்கித் தரும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். நிறுவனத்தின் விற்பனைப் பொருள், அதன் சிறப்பம்சங்கள், அது எங்கெங்கு எல்லாம் கிடைக்கும் என்ற தகவல்கள், அதை எளிமையாக வாங்குவதற் கான வழிகள், சலுகைகள் என அந்தப் பக்கத்தை வடிவமைக்க வேண்டும். பின் அந்தப் பக்கத்தை, பலரின் பக்கங்களில் ‘ஷேர்’ செய்து, விளம்பரம் பலரையும் சென்றடையச் செய்ய வேண்டும். இதற்கும் பெரிய நிறுவனங்களைத்தான் அணுக வேண்டும் என்பதில்லை. உங்களுக்குத் தெரிந்த ஒருவர் அப்பளம் பிசினஸ் செய்கிறார் என்றால், அவர்களுக்கு ஒரு சமூக வலைதள விளம்பரப் பக்கத்தை உருவாக்கி, அதில் அவர்கள் செய்யும் அப்பள வகைகளை விதம்விதமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளாகப் பதிவேற்றலாம். அது கிடைக்குமிடம், வாங்குவதற்கான வழிகள், ஆன்லைன் ஆர்டர்கள் குறித்த தகவல்கள் தரலாம். அப்பளம் தரும் ஆரோக்கியம், அதன் வகைவகையான ரெசிப்பிக்கள் என்று பக்கத்தை சுவாரஸ்யமாக்கலாம். இப்படி, விற்பனையாளர்களையும், வாடிக்கையாளர்களையும் இணையத்தில் இணைக்கும் வேலையில் இன்று பலர் பிஸி!

ஆன்லைன் டியூஷன்

படிப்பு, பாட்டு, நடனம், யோகா, ஸ்லோகம் என்று எதையும் இன்று ஸ்கைப் மூலமாக டியூஷன் எடுக்கலாம். ஒரு குக்கிராமத்தில் இருந்தாலும், உலகத்தில் எந்த மூலையில் இருப்பவர்களுக்கும் உங்களால் ஆன்லைன் டியூட்டர் ஆக முடியும். ஃபீஸை, மாணவர்கள் உங்கள் பேங்க் அக்கவுன்ட்டில் சேர்த்துவிடுவார்கள். எனக்குத் தெரிந்த வழக்கறிஞர் ஒருவர், கன்சல்டேஷனையே இப்படித்தான் செய்கிறார். ஒரு புரோகிதர், அமெரிக்காவில் இருக்கும் தமிழ் மக்களுக்கு சுலோகம் கற்றுத் தருகிறார். இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கிராஃபிக்ஸ் டிசைனிங்

தமிழ்நாட்டில் ஒரு நாளில் எத்தனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன..! அதற்கான இணைய அழைப்பை உருவாக்கித் தருவதும், ஒரு வேலைவாய்ப்பே! கூடவே, அந்த குறிப்பிட்ட நிகழ்வுக்கு என ஒரு வலைதளப் பக்கத்தையும் உருவாக்கிக் கொடுக்கலாம். உதாரணமாக, 40 பேர் கலந்துகொள்ளும் ஒரு கல்லூரி முன்னாள் மாணவர்களின் ‘ரீ-யூனியன்’ விழாவுக்கான அழைப்பிதழையும், அந்த நிகழ்வு குறித்த முன், பின் சுவாரஸ்யங்களைப் பகிர்ந்துகொள்ளும் வலைதளப் பக்கத்தையும் உருவாக்கலாம்.

கே.அபிநயா  படம்: தி.ஹரிஹரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
சம்பளம்... ஆயிரம் to லட்சங்கள்!
ஒல்ட் - நியூ ஃப்யூஷன் ரெசிப்பி
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close