Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முட்டிக்கொள்வார்கள்.. பின் கட்டிக்கொள்வார்கள்!

-பதினெட்டுப்பட்டி பராக் பராக்

கிராமப் பின்னணியில் வெளியான பெரும்பாலான தமிழ் சினிமாக்களில், ‘கூட்றா பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்த...’ என்ற டயலாக்கை கேட்டிருப்போம். தமிழ்த் திரையுலகில் பதினெட்டுப்பட்டி கிராமங்களை சாகாவரம் பெற்று வாழவைத்த பெருமை பாரதிராஜா, பாக்யராஜ், கங்கை அமரன், கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி உட்பட பல இயக்குநர்களைச் சேரும். என்ன... காட்சிகள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருக்கும்.

சரி, ஒரு கிராமத்தில் நடக்கும் பிரச்னைக்கு ஏன் பதினெட்டுப்பட்டியைக் கூட்ட வேண்டும்? உண்மையிலேயே தமிழகத்தில் பதினெட்டுப்பட்டி ‘நெட்வொர்க் கிராமங்கள்’ இருக்கின்றனவா?

ஆம், இருக்கின்றன! சிவகங்கை, மதுரை, தேனி, கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பதினெட்டுப்பட்டி கிராம அமைப்புகள், இன்றும் செயல்பட்டு வருகின்றன. சட்டம் கடுமையாகிவிட்டதாலும், கிராம மக்கள் கல்வியறிவு பெற்று வருவதாலும், அந்தக் காலம் மாதிரி ஊர்விலக்கம், தீண்டாமைக் கொடுமை, தண்டனை, நாட்டாமையின் அதீத அதிகாரங்கள் என்று இல்லாமல், ஊர் நலன் சார்ந்து நல்ல விஷயங்களுக்காக பதினெட்டுப்பட்டி கிராமங்கள் இணைந்து செயல்பட்டு வரும் விதம், பாரம்பர்ய அழகு!

மேலூர்... மரபு பிரதேசம்!

மதுரை மாவட்டம், மேலூர், ஒருகாலத்தில் கிராமமாக இருந்து, வளர்ச்சி அடைந்து இப்போது நகராட்சியாக மாறிவிட்டாலும், அதைச் சுற்றியுள்ள பதினெட்டு கிராமங்களுக்கும் தாய்க்கிராமமாக தொடர்ந்து விளங்கி வருகிறது. மேலூர் நகரில் இரண்டு பகுதி, புது சுக்காம்பட்டி, பழைய சுக்காம்பட்டி, நவநாதப்பட்டி, நொண்டிகோயில் பட்டி, மலம்பட்டி, மேற்குத்தெரு, தெற்குபட்டி என்று பதினெட்டுப் பட்டிகளை உள்ளடக்கி, இந்த பதினெட்டுப் பட்டிகளின் தலைநகராக மேலூர் உள்ளது. மேலூர் பஜாரில் அமைந்திருக்கும் காஞ்சி வனம் கோயிலை தலைமையாகக் கொண்டு சுத்துப்பட்டில் பதினெட்டு கிராமங்கள் உள்ளன. இந்தக் கோயில் திருவிழாவை பதினெட்டுப்பட்டிக்காரர்களும் வெகுவிமர்சையாகக் கொண்டாடுகிறார்கள்.

நகர்மயமாகிவிட்டாலும், இன்றும் பதினெட்டுப்பட்டி மரபை மீறாமல் இந்தப் பகுதி மக்கள் செயல்பட்டு வருவது ஆச்சர்யமானது. பதினெட்டுப் பட்டிகளின் தலைமை கிராமத்தைச் சேர்ந்தவரை பெரியஅம்பலக்காரர் (நாட்டாமை) என்றும், ஒவ்வொரு பட்டியிலும் உள்ள பெரிய தலைகளை அம்பலக்காரர் (குட்டி நாட்டாமை) என்றும் அழைக்கிறார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் ஊராட்சி நிர்வாகம் அரசின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டு வந்தாலும், இந்த அம்பலங்களின் நிர்வாகம் தனியாக நடந்துகொண்டிருக்கிறது. தாய்க்கிராம கோயில் திருவிழாவில் பெரியஅம்பலக்காரருக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. அடுத்து குட்டி அம்பலக்காரர்களுக்கு வழங்கப்படுகிறது. விவாகரத்து, சொத்துப் பிரச்னை, கடன் பிரச்னைகள், வாய்க்கால் வரப்புப் பிரச்னைகள் என... ஊர் நல்லது கெட்டதுகளில் இந்தப் பதினெட்டுப்பட்டித் தலைகளும் உட்கார்ந்து பேசுகிறார்கள். ‘இதுதான் தீர்ப்பு’ என்று இப்போதுள்ள சூழலில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும், முதல்கட்டமாக பஞ்சாயத்தில் சமரசம் ஆகவில்லை எனில், வழக்கு காவல்நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலூரின் மிகப் பிரபலமான ஆற்றில் மீன் பிடிக்கும் திருவிழாவில், பதினெட்டுப்பட்டி ஜனங்களும் வந்த பிறகுதான் தண்ணீரில் காலை வைக்கிறார்கள். அதுபோல் விவசாய வேலை துவங்கும்போதும், பதினெட்டுப்பட்டி ஆட்கள் வந்த பின்புதான் கோயிலில் பூசை செய்து சேற்றில் காலை வைக்கிறார்கள். அந்த ஒற்றுமையே, இந்தப் பிரதேசத்தின் பலம்!

சிவகங்கைச் சீமையில்... நாடுகள் பதினெட்டு!

சிவகங்கை மாவட்டத்தில் சாக்கோட்டை நாடு, தேவகோட்டை நாடு, கப்பலூர் நாடு, திருவேகம்பத்தூர் நாடு, பாகனேரி நாடு, ஆறாவயல் நாடு, இறகுசேரி நாடு, தென்னிலை நாடு, உஞ்சனை நாடு, ஏரியூர் நாடு, அமராவதி நாடு, திருப்பத்தூர் நாடு, பிரான்மலை நாடு, கண்டதேவி நாடு என்று... ‘பட்டி’ அமைப்பு, இங்கு ‘நாடு’ அமைப்பாக விளங்கி வருகிறது. இதில் ஒவ்வொரு நாட்டுக்கும், 18 ஊர்கள் பாத்தியப்படும். இந்த நாடுகளின் பாரம்பர்யக் குடிவாரிசுகள், இப்போது வெளியூர், வெளிநாடு என்று சென்றுவிட்டாலும், அந்தந்த ஊர்த் திருவிழாவுக்கு தவறாமல் ஃப்ளைட் பிடித்து வந்துவிடுவார்கள், ‘நாட்டு’ப் பாசத்தில். அந்தளவுக்கு, இவர்களின் ரத்தத்தில் கலந்திருக்கிறது ‘நாட்டு’ மரபு!

உசிலம்பட்டி... முட்டி... கட்டி!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் பாப்பாபட்டியை தாய்க்கிராமமாக கொண்டு பதினெட்டு பட்டிகள் இருக்கின்றன. இங்கு அவ்வப்போது பட்டிகளுக்குள் முட்டிக்கொள்வார்கள்; அடுத்த திருவிழாவில் கட்டிக்கொள்வார்கள். இம்மக்கள் வாழும் பதினெட்டுப்பட்டிகள் உசிலம்பட்டியைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி, தேனி என்று விரிகிறது.

பதினெட்டாம்படி கருப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, சாயல்குடி, முதுகளத்தூர் பகுதியிலும் பதினெட்டுப்பட்டிகள் உள்ளன. இந்தப் பகுதி கிராமங்களை பதினெட்டாம்படி கருப்பு காவல் காப்பதாக நம்பப்படுவதால், இங்குள்ள மக்கள் பலருக்கும் ‘பதினெட்டான்படியான்’ என்று பெயர் வைக்கப்படுகிறது தலைமுறைகளாக. இதுபோல புதுக்கோட்டையிலும் பதினெட்டுப்பட்டிகள் தொடர்ந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் பகுதியில் இந்த மரபு உயிர்ப்பித்திருக்கிறது.

மொத்தத்தில், கிராம மக்களின் பிடிவாதத்தாலும், மரபுப் பிரியத்தாலும் வாழ்ந்துகொண்டிருக்கும் ‘பதினெட்டுப்பட்டி’ வழக்கம், காவல், சட்டத்துறைகளின் வளர்ச்சியால் தேய்ந்துபோயிருந்தாலும், தொலைந்துபோகவில்லை. ‘கூட்றா பதினெட்டுப்பட்டிப் பஞ்சாயத்தை...’ குரல் எங்கேனும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது, சன்னமாக!

செ.சல்மான் வீ.சக்தி அருணகிரி, சி.சுரேஷ்பாபு

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
பெருமைமிகு 18
கேமரா காவியம்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close