Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எத்தனையோ தெய்வங்கள்... தீபாவளி எண்ணெய்க் குளியலில்!

தீபாவளி அன்று கடைப் பிடிக்க வேண்டிய சாஸ்திரங்களையும், அவற்றின் பலன்களையும் சொல்கிறார், நெய்வேலியைச் சேர்ந்த கந்தசாமி சிவாச்சாரியார்!

“மனிதனிடம் எத்தனையோ அற்புதமான சக்திகள் இருந்தாலும் சில சமயங்களில் கர்வம் தலைதூக்கி, தான் பிறந்த பயனை மறந்து, அழிவுப் பாதையில் செல்கிறான். இந்த அகங்காரத்தை ஒடுக்கி, பகுத்தறிவோடு அடக்கத்தை ஒளிரச் செய்வதே தீபாவளித் திருநாளின் பயன். நரகாசுரன் துவாபர யுகத்தில் தோன்றி, ‘தான்’ எனும் அகங்காரம் கொண்டு, ஆத்திரம் அடைந்து, உலக மக்களை அழவைத்துக்கொண்டிருந்தான். அவனை ஒழித்து உலக மக்களுக்குச் சாந்தியை அளித்தார் கிருஷ்ண பரமாத்மா. அகங்காரத்தின் அழிவே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.

எண்ணெய்க் குளியலின் பலன்!

சூரிய உதயத்துக்கு முன்னதாக பொதுவாக எவரும் எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது என்பது சாஸ்திர நியதி. ஆனால், தீபாவளியன்று மட்டும் சூர்யோதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணெய் ஸ்நானம் செய்வதன் மூலம், தன் பிள்ளையான நரகாசுரனை நினைவுகூர வேண்டும் என்று, பகவானிடம் வேண்டினாள் பூமாதேவி. சாஸ்திரம் தவிர்க்கும் ஒரு காரியத்தைச் செய்யுமாறு சாதாரணமாகக் கூறினால், எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால், தீபாவளி அன்று மட்டும் அதிகாலையில் எல்லா இடங்களிலும் தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லக்ஷ்மியும், சிகைக்காயில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடையில் மகா விஷ்ணுவும் வசிக்க வேண்டும் என வேண்டினாள் பூமித்தாய். பகவானும் அவ்வாறே அனுக்கிரகித்தார்.

எனவே, தீபாவளி திருநாளில் அருணோதய காலத்தில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடினால், இறைபலன் கிட்டும். அருணோதய காலம் என்பது சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம். அதாவது சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடம் முன் உள்ள காலம். 6.00 மணிக்கு சூரிய உதயம் என்றால் 5.15 மணிக்கு நீராட வேண்டும்.

தீப ஒளியில் திருமகள்!

தீபாவளி அன்று நம் இல்லங்களுக்கு திருமகள் வருவதாக ஐதீகம். அவளை வரவேற்கும் விதமாக இல்லம் தோறும் தீபங்கள் ஏற்றி வழிபடுவர்.

நாம் கட்டாயம் செய்ய வேண்டிய வேறு சில சாஸ்திரங்களும் உள்ளன. மஹாளயபட்ச நாட்களில், குறிப்பாக மஹாளயபட்ச அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில் பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படி வருபவர்கள் தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்கு திரும்புகின்றனர். அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபாவளி அன்று அதிகாலை தீபமேற்றுதல் வேண்டும்.

இத்தகு சிறப்பு மிகுந்த இந்த புனிதத்திருநாளில் நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழிந்துபோக கண்ணபிரானை வேண்டி, மனிதன் தேவனாக மாற முடியாவிட்டாலும், மனிதனாகவாவது வாழ இறைவனுடைய அருளைப் பெறுவோமாக!”

சு.சூர்யா கோமதி 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
க்வில்லிங் கிளாஸ்..!
ஹாரர் ப்ளஸ் அசத்தல் ஆடைகள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close