• Vikatan apps

ஒரு புதன்கிழமையும் சில சி.பி.ஐ. அதிகாரிகளும்!

செம தோரணையான சி.பி.ஐ. அதிகாரி அனுபம் கெர், அவரது ஜூனியர் அக்ஷய் குமார்... இருவரும் அமைச்சர் வீட்டுக்கு உள்ளூர் போலீஸ் துணையோடு ரெய்டு அடிக்கிறார்கள். சுவர், கார் இருக்கைகள், ரகசிய அலமாரி என அத்தனை மறைவிடங்களில் இருந்தும் பணத்தை அள்ளுபவர்களிடம் லஞ்ச பேரம் பேசுகிறார் அமைச்சர். சும்மா இருப்பாரா நேர்மையின் சிகரமான அனுபம் கெர். பளார்என ஓங்கி அறைகிறார். பதறிப் பம்முகிறார் அமைச்சர். மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு ரசீது கொடுத்துவிட்டு, சீல் வைத்து விட்டுக் கிளம்புகிறார்கள். களேபரங்கள் முடிந்த பிறகுதான் தெரியவருகிறது... ரெய்டு அடித்துச் சென்றது சி.பி.ஐ. அதிகாரிகள் என்று பொய் சொல்லி ஏமாற்றும் மோசடிக் கும்பல் என்பது.  

 1987-ம் வருடம்... மும்பை ஓபரா ஹவுஸ் பிராஞ்சுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத 26 பேர் வருமானவரித் துறை அதிகாரிகள் என்று சொல்லி ஒரு நகைக் கடையை மொத்தமாகக் கொள்ளையடித்தது அப்போதைய பரபரப்புச் செய்தி. அதையே கதைக் களமாகக்கொண்டு 'ஸ்பெஷல் 26’ படத்தை இயக்கியிருக்கிறார் நீரஜ் பாண்டே.

யார் இந்த நீரஜ் பாண்டே? கமல் தமிழில் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்’ படத்தின் இந்தி ஒரிஜினலான 'எ வெனஸ்டே’ படத்தின் இயக்குநர். 2008-ம் வருடம் வெளியாகி ரிவ்யூ, ரெவின்யூ இரண்டிலும் பட்டையைக் கிளப்பிய 'எ வெனஸ்டே’ தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டபோதும், அபார ஹிட் அடித்தது. ஆனால், கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் நான்கு வருடங்களுக்குப் பிறகு 'ஸ்பெஷல் 26’ படத்தை நிறுத்தி நிதானமாக இயக்கி வெளியிட்டு இருக்கிறார் நீரஜ். ஆனால், படம் விறுவிறு ஓப்பனிங் அள்ளி பம்பர் ஹிட் அடித்திருக்கிறது.

ஆரம்பம் முதல் இறுதி வரை கலகல விறுவிறு வேகத்தில் பயணிக்கிறது படம். ஃப்ராடு கும்பலைக் கண்டுபிடித்து, முட்டிக்கு முட்டி தட்ட, களம் இறங்குகிறார் நிஜ சி.பி.ஐ. அதிகாரி மனோஜ் பாஜ்பாய். 'மோசடிக் கும்பலைப் பற்றி க்ளூ இல்லை... ஒரு வரிச் செய்தி இல்லை’ என்று திரும்பிய பக்கமெல்லாம் இருட்டு மூலைகள். அனுபம் கெரும், அக்ஷய் குமாரும் ஒரு நகைக் கடையில் மகாமெகா ரெய்டு அடித்து அதோடு செட்டில் ஆகிவிடுவது என்று முடிவு எடுக் கிறார்கள். திட்டத்தை மோப்பம் பிடித்து, நகைக் கடையில் ஒரிஜினல் நகைகளை மொத்தமாக இடம் மாற்றி, போலி நகைகளை வைத்து இவர்களைப் பிடிக்க அங்கே கொலைவெறி யோடு காத்திருக்கிறது மனோஜ் பாஜ்பாய் டீம். மெகா ரெய்டு நடந்ததா, 'வில்ல’ ஹீரோக்கள் சிக்கிக்கொண்டார்களா என்பது திக்திக் க்ளைமாக்ஸ்!

'இது எப்படி... அது எப்படி...?’ என ஆங்காங்கே சந்தேகம் வந்தாலும், ஆரம்பத்திலேயே 'இது நிஜக் கதை!’ என்று சொல்லிவிடுவதால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அதுதான் இந்தக் கதை யின் பலமே. அனுபம் கெரை முன்னிறுத்தியே நகரும் கதையில், மனிதர் காமெடியில் விளாசிஇருக்கிறார். மனோஜ் பாஜ்பாயிடம் சிக்கிக்கொண்டு அழுகையும், சிரிப்புமாகத் தங்கள் திட்டத்தைப் பற்றிப் பேசும் ஒரு இடம் போதும்... அவரது அட்டகாச நடிப்பின் சிறப்பைச் சொல்ல! பின்பாதி முழுக்க 'மனதுக்குள் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்’ என்று கண்டுபிடிக்க முடியாத மாதிரி இறுக்கமான உணர்வுகளுடன் ரசிகர்களைக் குழப்பும் அண்டர்ப்ளே நடிப்பில் அக்ஷய் அசத்துகிறார். ஹீரோயின் நம்ம கண்ணழகி காஜல். பெரிதாக வேலை இல்லை. பொம்மை மாதிரி வந்து போகிறார்!

'ஹிட், ஃப்ளாப் என மாறி மாறி ரேஸில் இருந்தாலும் அமீர், ஷாரூக் போல ஒரு சென்சிபிள் படம் கொடுக்கலையே’ என்பது விமர்சகர்கள் மற்றும் அக்ஷய் குமார் ரசிகர்களின் நீண்ட நாள் வருத்தம். அதைப் போக்கும் விதமாகவே அக்ஷய் இந்தப் படத்தில் கலர் டிரெஸ், குத்துப் பாட்டுகளைத் தவிர்த்து நடித்திருப்பார்போல. திருமணம் முடித்த 12 வருடங்களில் அக்ஷய்குமாரின் எந்தப் படத்துக்கும் எழுந்து நின்று கைதட்டாத அவரது மனைவி டிவிங்கிள் கண்ணா இந்தப் படம் பார்த்துவிட்டுக் கைதட்ட, பத்திரிகை கள் பாராட்ட செம சந்தோஷத்தில் இருக்கிறார் அக்ஷய்.

'எ வெனஸ்டே’ படத்தின் க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் வந்து சுவாரஸ்யப்படுத்தியது போல, இந்த 'ஸ்பெஷலிலும்’ ஒரு டிவிஸ்ட் உண்டு. ஆனால், அதை வெள்ளித் திரையில் கண்டு ரசித்துக்கொள்ளுங் கள்! 'எனக்கு இந்தி புரியாதே!’ என்று சோகம் வேண்டாம். வெகு விரைவி லேயே தமிழின் மாஸ் ஹீரோ நடிக்க, 'ஸ்பெஷல் 26’ தமிழ் அவதாரம் எடுக்கும். அதுவரை.... தயவுசெய்து காத்திருக்கவும்!

எஸ்.கலீல்ராஜா