Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமீர்கானை அறைந்தால் ரூ.1 லட்சம் பரிசு

பாலிவுட் இந்தி நடிகர் அமீர்கானை அறைபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிவ சேனா பகிரங்கமாக அறிவித்து உள்ளது.

''நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. இதனால் என் மனைவி கிரண், 'நாம் இத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். முதல் முறையாக, இந்தியாவைவிட்டு நாம் வெளியேறி விடலாமா' என்று கேட்டார். அவர், தன் குழந்தைகளுக்காக பயப்படுகிறார். எங்களை சுற்றியுள்ள சூழலைக்கண்டு அவர் பயப்படுகிறார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை பிரித்து பார்க்கவே அவர் அஞ்சுகிறார். நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதையே இது காட்டுகிறது" என்று சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் கருத்து தெரிவித்து இருந்தார்.

அமீர்கானின் இத்தகைய கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவர் மீது வழக்கு மற்றும் கண்டனம், 'அமீர்கான் பாகிஸ்தானுக்கு போகட்டும்' என்ற வெறுப்புக் குரல்களும் ஓங்கி ஒலித்தபடி உள்ளன. இந்நிலையில் டங்கல் படத்தின் படப்பிடிப்பிற்காக பஞ்சாப் சென்றுள்ள அமீர் கான், அங்கு, லூதியானா நகரில் உள்ள ராடிசன் ப்ளூ ஓட்டலில் தங்கி உள்ளார்.

இதை அறிந்து நேற்று அந்த ஓட்டலை முற்றுகையிட்ட சிவசேனா அமைப்பினர், அமீர்கானை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரது புகைப்படத்தைக் கொளுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பஞ்சாப் மாநில சிவ சேனா கட்சியின் தலைவர் ராஜீன் தன்டன், அமீர்கானை அறைபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ''இந்த ஓட்டலில் உள்ள ஊழியர்களுக்கும், மேலாளருக்கும், அமீர் கானின் படப்பிடிப்பு குழுவினருக்கும் நாங்கள் ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம். வீரம் நிறைந்த தேசப்பற்று மிக்கவர்கள், அமீர் கானை அறையும் ஒவ்வொரு அறைக்கும் 1 லட்ச ரூபாய் பரிசு அளிக்கப்படும்" என்றார் பகிரங்கமாக. இதையடுத்து அமீர்கான், ''எனக்கு எதிராக செயல்படுபவர்கள், நான் கூறிய கருத்தையே மெய்ப்பிக்கின்றனர்" என்று கூறி உள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close