Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலக்கியத்துக்கும் இந்த ஆண்டு ஆஸ்கருக்கும் இவ்ளோ தொடர்பா?

இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகள் என்றழைக்கப்படும் அகாடமி விருதுகளுக்கானப் பரிந்துரைப் பட்டியல் புத்தகப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. புத்தகங்களைத் தழுவி திரைப்படங்களை எடுத்து புத்தகத்தின் ஆன்மாவை அழித்துவிடாதீர்கள் என்று கதறும் புத்தகப் பிரியர்களை இந்த இன்ப அதிர்ச்சியாளர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது. வழக்கமாக ஆஸ்கர் விருதுகளுக்கானப் பரிந்துரைப் பட்டியலில் புத்தகங்களை மையமாகக் கொண்ட அல்லது புத்தகங்களைத் தழுவியதாகக் கொண்ட படங்கள் ஐந்து அல்லது ஆறு படங்கள் தான் இருக்கும். இவையும் பெரும்பாலும் சிறந்த தழுவல் திரைக்கதை விருதுப் பிரிவிலேயே இருக்கும்.

வாழ்க்கை வரலாறுகள், சிறுகதைகள், நாடகங்கள், நாவல்களைத் தழுவி எடுக்கப்படுபவை அல்லது இதற்கு முந்தைய வேறு திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சித் தொடர்களில் இருந்து தழுவி எடுக்கப்படுபவையே இந்தப் பிரிவில் இடம்பெறும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக புத்தகங்களோடு தொடர்புடைய படங்கள் ஒன்பது விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 1935-ல் பரிந்துரைக்கப்பட்ட நான்கு திரைப்படங்களுமே நாவல்களைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டவை.

1945, 1949,1953,1963, 1967, 1971, 1973, 1976, 1990, 1991, 1995, 1997, 1998, 1999, 2001, 2003, 2005, 2007 ஆகிய ஆண்டுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஐந்து திரைப்படங்களுமே புத்தகங்களைத் தழுவித் திரைக்கதை அமைக்கப்பட்டவை. ஆனால், மேற்கூறிய இத்தனை ஆன்டுகளைப் போல அல்லாமல் இந்த ஆண்டு சிறப்புக்கு உரியதாகக் கருதக் காரணம் ஒட்டுமொத்தமாக புத்தகங்களை அடிப்படையாகக் கொண்ட 9 படங்கள் பரிந்துரைப்பட்டியலில் இடம்பெறுவது அதிசயம் தானே. 2015 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதின் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதுப் பிரிவில் இடம்பெற்றுள்ள 'த பிக் ஷார்ட் (The Big Short)' திரைப்படம் இதே பெயரில் மைக்கேல் லூயிஸ் என்பவர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டும், 'புரூக்ளின் (Brooklyn)' திரைப்படம் கோல்ம் டோய்பின் அவர்களால் இதே பெயரில் எழுதப்பட்ட நாவலையும் தழுவி எடுக்கப்பட்டது,

'கெரால் (Carol)' திரைப்படம் பாடெய்சியா ஹைஸ்மித் எழுதிய 'த பிரைஸ் ஆப் சால்ட் (The price of salt)' நாவலைத் தழுவியும் , 'த மார்ஷியன் (The Martian)' திரைப்படம் இதே பெயரில் ஆன்டி வெய்ர் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்பட்டது மற்றும் 'ரூம் (Room)' திரைப்படம் இதே பெயரில் எம்மா டோனோக் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்பட்டது. இதனோடு சிறந்த தழுவல் திரைக்கதைப் பிரிவில் இடம்பெறாமல் அதே சமயம் பிற விருதுப் பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு உள்ள 'த ரெவனெண்ட் (The Revenant)', 'ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs)' , 'த டேனிஷ் கேர்ள் (The Danish Girl)' மற்றும் 'எம்பரேஸ் ஆப் த ஸெர்பண்ட் (Embrace of the Serpent)' ஆகிய நான்கு படங்களும் வெவ்வேறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளன.

த ரெவனெண்ட் திரைப்படம் இதே பெயரில் மைக்கேல் புன்க் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திரைப்படம் சிறந்த திரைப்படம், இயக்குநர், நடிகர், துணை நடிகர், துணை நடிகை என்று ஒட்டுமொத்தமாக 12 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படம் Steve Jobs: The Exclusive Biography என்ற புத்தகத்தின் பெரும்பகுதியை அடிப்படையாகக் கொண்டும் திரைக்கதை அமைக்கப்பட்டது. சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை என்று இரண்டு பிரிவுகளில் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. த டேனிஷ் கேர்ள் திரைப்படம் இதே பெயரில் டேவிட் எபர்ஷாப் அவர்களால் எழுதப்பட்ட நாவலை அடிப்படையாகக் கொண்டது. இந்த படமும் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை மற்றும் மேலும் இரண்டு விருதுகள் உட்பட மொத்தமாக நான்கு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எம்பரேஸ் ஆப் த ஸெர்பண்ட் என்ற கொலம்பிய நாட்டு திரைப்படம் சிறந்த அயல்நாட்டு திரைப்படத்துக்கான விருதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தியோடோர் கோக்ரன்பெர்க் மற்றும் ரிச்சர்ட் எவான்ஸ் ஆகிய இரு அறிவியலாளர்களின் நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. புத்தகங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் அதிகமானப் பரிந்துரைகளைப் பெற்ற ஆண்டு என்ற சிறப்போடு, புத்தகங்களைத் தழுவிய திரைப்படங்கள் அதிகமான விருதுகளைப் பெற்ற ஆண்டும் இது என்ற சிறப்பை இந்த ஆண்டு பெறுமா என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.

- சுப. தமிழினியன்-

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close