Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜீவா - சினிமா விமர்சனம்

கிரிக்கெட்டில் ஜெயிக்கப் போராடலாம். கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்கவே போராடினால்..?

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே விஷ்ணுவின் லட்சியம். பூதாகாரமாக வரவேற்கிறது கிரிக்கெட் தேர்வுக் கமிட்டியின் சாதி அரசியல். தடைகளைத் தாண்டி, தனது கனவை விஷ்ணு சிக்ஸருக்குத் துரத்தினாரா என்பது கிளைமாக்ஸ்!

எதிரெதிர் அணிகள், ரோல்மாடல் கோச், கடைசி பால் சிக்ஸர் என எதிர்பார்த்து உட்கார்ந்தால்... காதல், நட்பு, சாதி வில்லன், குடும்ப சென்டிமென்ட் என ஸ்போர்ட்ஸ் சினிமாவை புது பிட்ச்சில் ஆடியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். கிரிக்கெட்டில் புழங்கும் சாதி அரசியலைப் பூடகமாக அல்லாமல், உடைத்துப் பேசியிருப்பது பொளேர்.

பள்ளி மாணவனாக கிரிக்கெட் பற்றி பேசும்போது முகம் மலர்வதும், ஸ்ரீதிவ்யாவுடனான காதல் அத்தியாயங்களில் பூரிப்பதும், தேர்வுக் குழுவினரின் வன்மத்தில் சிக்கும்போது கலங்குவதுமாக விஷ்ணுவிடம் அவ்வளவு இயல்பு. முயல் குட்டியாக ஓடியாடித் திரிகிறார் ஸ்ரீதிவ்யா. 'நல்லவேளை என்னைக் காதலிக்கிறேன்னு பொய் சொன்னதால தப்பிச்ச!’ எனக் கூறும் விஷ்ணுவிடம், 'நான் திருடுவேன்... ஆனா பொய் சொல்ல மாட்டேன்!’ என ஸ்ரீதிவ்யா வெட்கத்துடன் மிளிரும்போது, 'திவ்யா... திவ்யா...’ என்னமோ டாஸ்மாக்கில் வேலை பார்ப்பதுபோல, அவர் ரெகுலராக ஒயின் சப்ளை பண்ணுவதெல்லாம் அய்யோ... அய்யோ!

தங்களைச் சுற்றிப் பின்னப்பட்ட சூழ்ச்சி பற்றி தெரிந்ததும், 'இனி என் வாழ்க்கைல கிரிக்கெட்டே இல்லையா?’ எனப் புலம்பி, பின் பொருமும் இடத்தில் நிராகரிப்பின் வலியை அழுத்தமாக உணர்த்துகிறார் லக்ஷ்மன் ராமகிருஷ்ணா. படத்தின் ஜாலி பேட்ஸ்மேன் சூரிதான். 'ஒரு நல்ல டீமுக்கு அழகு என்ன தெரியுமாடா? கடைசிவரைக்கும் கடைசி பேட்ஸ்மேனை கிரவுண்டுல இறங்கவிடாமப் பாத்துக்கறதுதான்’ எனச் சலம்பும்போதெல்லாம் சிரிப்பு சிக்ஸர் சாத்துகிறார்.

'முடியாததை முடிக்கும்போதுதான், அது ரெக்கார்டா மாறும்’, 'எல்லா நாட்டுலயும் விளையாடிதான் தோத்துப்போறாங்க. இங்க மட்டும்தான் வாய்ப்பு கிடைக்காமயே தோத்துப்போறாங்க’ என சந்தோஷின் வசனங்கள் பல இடங்களில் பன்ச்.

'என் தோள்ல கை போட்டப்போ தட்டிக்கொடுக்கிறார்னு நினைச்சேன். ஆனா, தடவிப் பார்த்திருக்கார்னு இப்பத்தான் புரியுது’ என கிரிக்கெட்டின் சாதி அரசியலைத் துவைத்துத் தொங்கப்போடுவது துணிச்சல். ஆனால், அது மட்டுமா பிரச்னை. கோடிக்கோடியாகப் பணம் புரளும் கிரிக்கெட்டின் அரசியல் எத்தனை பிரமாண்டமானது? அதை படத்தில் மிகப் பலவீனமாகக் கடந்து செல்கிறார்கள்.

இமான் இசையில் 'ஒவ்வொன்றாய் திருடுகிறாய்...’ பாடல் வசீகரிக்கிறது. அவரின் பின்னணி இசை, ஒரு கிரிக்கெட் மேட்ச் டெம்போவைக் கச்சிதமாக நமக்கு ஏற்றுகிறது.

போராட்டங்களுக்கு நடுவே துவண்டுவிடாமல் தன் காதலில், குடும்பத்தில், லட்சியத்தில் நின்று விளையாடி ஹிட் அடித்த பாசிட்டிவ் அப்ரோச்சில் நிற்கிறான் ஜீவா!

- விகடன் விமர்சனக் குழு

MUST READ

எடிட்டர் சாய்ஸ்