Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜுராஸிக் வேர்ல்ட் - படம் எப்படி?

என்னதான் இண்டர்ஸ்டெல்லர், கிரேவிட்டி, உலக சினிமாக்கள், பிடித்த ஹீரோ லீ மின் ஹோ என சீன் போட்டாலும் ‘எல்லாரும் ஓடுங்க’ அந்த கொடிய மிருகம் வருது’ இந்த டயலாக்குடன் ஹாலிவுட் படம் பார்க்கும் சுகமே அலாதிதான்.

அப்படி கொண்டாட வந்திருக்கிறது ’ஜுராஸிக் வேர்ல்ட்’. பழைய ‘ஜுராஸிக் பார்க்’கை பட்டி டிங்கரிங் வேலைகள் செய்து பிரம்மாண்டமான விலங்குகளை ஜெனிடிக் முறையில் விசித்திர விலங்குகளாக உருவாக்கி ‘ஜுராஸிக் வேர்ல்ட்’ என்ற பெயரில் சுற்றுலாத் தளமாக பாட்டாவே பாடிட்டிங்களா? ரேஞ்சிற்கு ஒரு தீவாகவே திறந்து வைத்திருக்கிறார்கள்.

அங்கு பார்க் மேனேஜராக பவர்ஃபுல் அதிகாரத்தில் ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட். அவருக்கு குட்டியாக இரண்டு அக்கா மகன்கள். விடுமுறையை கழிக்க இருவரையும் தங்கை வேலை செய்யும் ஜுராஸிக் வேர்ல்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர்கள். சிறுவர்களும், ஜாலியாக ஊர் வந்து இறங்குகிறார்கள். அறியாத சிறுவனாக டை சிம்ப்கின்ஸ், அவருக்கு அண்ணனாக நிக் ராபின்சன். பருவ வயது நிக் தம்பியை தான் பார்த்துக் கொள்வதே இடையூறாக நினைக்கிறார். என்ன நடந்தாலும் அண்ணன் சொல்வதை கேட்கும் நல்ல பையனாக டை சிம்ப்கின்ஸன். இப்படி பட்ட இருவரும் விஐபி பாஸுடன் சித்தி வேலை செய்யும் ஜுராஸிக் வோர்ல்டில் களம் இறங்குகிறார்கள். அந்த சமயத்தில் கட்டுப்பாட்டை மீறி கதவுகளை உடைத்து வெளியேறுகிறது ரகசியமாக ஜெனிடிக் முறையில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட டைனோசர். எதிர்பார்த்தபடி சிக்குகிறார்கள் குழந்தைகளும், அங்கிருக்கும் மக்களும். பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

டைனோசரை ஜெனிடிக் முறையில் உருவாக்கியதே தவறு, இதில் பல விலங்குகளின் குணாதிசயங்களை புகுத்தி விசித்திரமாக வேறு அலையவிட்டுள்ளார்கள். அந்த டைனோசர் கண்களுக்கு தெரியாமல் மறைந்து கொள்ளும், கேமரா எங்கே வைக்கப்பட்டுள்ளது என்பதைக் கூட அறிந்துகொள்ளும். இப்படி கண்களை விரியவைக்க பல ஜெனிடிக் வித்தைகளை காட்டுகிறார்கள்.

இதில் இன்னொரு வில்லனாக டனோசர்களை செல்லபிராணிகளாக பழக்கி அதை வைத்து இன்னும் காசு சம்பாதிக்க நினைக்கும் வின்செண்ட் டிஓனோஃப்ரியோ. அந்த வில்லனுக்கு ஹீரோவாக டைனோசர்களை பழக்கி கைக்குள் வைத்திருக்கும் க்ரிஸ் ப்ராட்.டைனோசர்களை காட்டுக்குள் விரட்டி மோட்டார் பைக்கில் கூடவே பயணிக்கும் போது செம ஹீரோப்பா என கைதட்டலில் அதிர்கிறது அரங்கம்.

கோட்டு சூட்டோடு கம்பெனியின் சீஇஓ வாக வருகிறார் நம்மூரு இர்ஃபான் கான். டனோசரை வீழ்த்த கிளம்பி ஹெலிகாப்டரோடு இறந்துவிட, எப்போதும் ஹாலிவுட்டின் இது போன்ற படங்களில் அப்பாவியாக சாகும் நீக்ரோ நடிகர்களுக்கு பதிலாக அந்த வேலையை இர்ஃபான் கான் செய்துள்ளார். 

குட்டி பசங்க, சமயோஜிதமாக சிந்தித்து, சிறப்பு வாகனத்தை உடைத்து வெளியேறுவது, பாழடைந்த பழைய இடத்தில் இருக்கும் காரை லாவகமாக ஒட்டி தப்பிப்பது என பசங்க தூள் கிளப்புகிறார்கள். உயர் அதிகாரி தோரணை, ஆபீசர்களை கண்களிலேயே மிரட்டுவது, அதே சமயம் நீ இப்படியே வந்தா ஒரு மணிநேரம் கூட தாக்குபிடிக்க முடியாது என ஹீரோ க்ரிஸ் ப்ராட் கிண்டலடித்தவுடன் சட்டையை சுருட்டி, முடித்து நான் இப்போ ரெடி, என கூறிவிட்டு துப்பாக்கியால் மிருகங்களை சூட்டு வீழ்த்தி ஹீரோவையே காப்பாற்றும் இடத்தில் ப்ரைஸ் டால்லாஸ் ஹோவர்ட் அடடே பொண்ணு. குழந்தைகள் படமாச்சே என்பதை மீறி நாமே யோசிக்கும் தருவாயில் ஹீரோவே முத்தமிட்டு விடுகிறார்.

3டி படம் என்பதால் ஒவ்வொரு முறையும் மிருகங்கள், டைமோர்ஃபோடோன் என முகத்திற்கு நேராக வந்து பயமுறுத்தும் போதும் சிறுவர்கள் ஆங்காங்கே கத்தும் சத்தம் கேட்கிறது.  முதன்முதலில் டைனோசர்களை கண்களுக்கு விருந்தாக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் கான்செப்டை மீண்டும் தூசி தட்டி ஓல்ட் ஈஸ் கோல்ட் என நிரூபித்துவிட்டார் இயக்குநர் கோலின் ட்ரிவோரோ.  சேஸிங் காட்சிகள், இன்னொரு டைனோசர் மொமெண்ட் என பின்னணியில் பட்டையை கிளப்பும் மைக்கேல் ஜிக்ஸினோ மீண்டும் பழைய தீம் மியூசிக்கை இரண்டு இடங்களில் போட்டு நம்மை புல்லரிக்க செய்துவிடுகிறார். 

இவ்வளவு பெரிய தீவில் இப்படி பட்ட பிரச்னைகளில் கூட பாதுகாப்பு படையை எப்படி இப்படி பேட்ச் பேட்ச்சாக அனுப்புகிறார்கள். ஒரு இடத்தில் ஹீரோவே இந்த ஆயுதம் பத்தாது என சொல்லியும் கேட்க முடியாத அளவிற்கு என்ன அதிகாரிகள். படம் முடியும் வரை கூட அரசாங்கத்திற்கு தகவல் செல்லாமல் இருப்பது சோகம் தான்.

ஆனாலும்,  அவ்வளவு ஆபத்தான இன்னொரு டைனோசர் எப்படி அவ்வளவு தோழமையுடன் திரும்பி செல்கிறது? என்ற கேள்வி எழுகையில் சின்ன டைனோசர் சொல்லியிருக்கும்பா என நமக்கே டைனோசர் பாஷை தெரியச் செய்தவிதம் டச் பண்ணிட்டாங்க மொமெண்ட். கடைசி காட்சியில் ஸ்லோ மோஷனில் ஓடி வரும் குட்டி டைனோசர், பிரம்மாண்ட டைனோசர்களின் சண்டை, வெடுக்கென இன்னொரு நீர் பிராணி டைனோசரை இழுத்து செல்வது, பின்னணியில் 22 வருட பாரம்பரிய ஜுராஸிக் பார்க் தீம் மியூசிக் என க்ளைமாக்ஸ் பட்டையை கிளப்ப அட இன்னொரு தடவை பாக்கணும்பா என அப்ளாஸ் அடிக்கச் செய்கிறது இந்த 'ஜுராஸிக் வேர்ல்ட்'.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close