Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் சேதுபதி என்கவுண்டர் செய்தது சரியா? - சேதுபதி விமர்சனம்

பண்ணையாரும் பத்மினியும் என்ற ஒரு ரசனையான படம் கொடுத்த இயக்கநர் அருண்குமார், அதே நாயகனுடன் கைகோர்த்திருக்கும் படம், சேதுபதி.

போஸ்டரிலும், டிரெய்லரும் அதிரடியாக மிரட்டும் இந்தப் படம், நிவாஸின் இசையில் அழகானதொரு மெலடியோடு துவங்கி, டைட்டில் கார்டில் காவல்துறையினரின் சின்னச் சின்ன சங்கடங்களை -  நிஜத்தோடு ஒப்பிடுகையில் - மிகைப்படுத்தல் இருந்தாலும், மாண்டேஜ்களாக சொல்லி.. பாடல் முடிந்ததும் ஒரு போலீஸ்காரர் கொலை செய்யப்படுவதில் ஆரம்பிக்கிறது. 

கறாரான, நேர்மையான, பயப்படாத, மக்களை சந்திப்பதில் மகிழ்கிற, புல்லட் வைத்திருக்கிற, கூலிங்க்ளாஸை ஸ்டைலாக மாட்டுகிற, குடும்பத்தை நேசிக்கிற, மீசை முறுக்குகிற என்று வழக்கமான தமிழ்ப்பட இன்ஸ்பெக்டர் விஜய் சேதுபதி. ASP ப்ரமோஷனுக்குக் காத்திருக்கிறவருக்கு, அவரது எல்லைக்குள் நடந்த இன்னொரு போலீஸ்காரரின் கொலையை விசாரிக்கும்போது சிலபல சிக்கல்கள் நடக்கிறது. அதையெல்லாம் தாண்டி, சிக்கல்களை அவிழ்த்து யார் காரணமென்று கண்டுபிடித்து இடைவேளைக்கு முன்பே அரெஸ்ட் செய்துவிடுகிறார் விஜய் சேதுபதி.

பழிவாங்கும்விதமாக, வில்லன் செய்யும் ஒரு காரியம் விஜய் சேதுபதியை மீண்டும் சிக்கலில்  மாட்டிவிட்டு பதவி உயர்வுக்கு மட்டுமின்றி, வேலைக்கே பாதிப்பைக் கொண்டுவருகிறது. அதை எப்படி ஹீரோ உடைக்கிறார் என்பதை கொஞ்சமும் சலிப்படைய வைக்காமல் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு கதையாக, சாதாரணக் கதைதான். நாடே எதிர்நோக்குகிற பிரச்னையையோ, மாநில அளவில் சீரியஸான கேஸையோ இந்த ஹீரோ கையாளவில்லை. ஆனாலும் ஒரு இன்ஸ்பெக்டரின் குடும்பம், குடும்பம் சார்ந்த அவரது நடவடிக்கைகளை உள்ளே புகுத்தியதில் இயக்குநர் ஈர்க்கிறார்.

போலீஸ் கெட்டப்பில் முதல்முறையாக விஜய் சேதுபதி. கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். முறைத்துக் கொண்டே சீரியஸான இன்ஸ்பெக்டராக இருக்கும் அதே சமயம் வீட்டுக்கு வந்ததும் மனைவியைக் கொஞ்சுவதிலும், மாமனார் - மாமியாரோடான சண்டையிலும் (அது என்னதான் சண்டை? சொல்லவேல்ல? பார்ட்-2 ஏதும் வருதோ?), குழந்தைகளுடனான ஜாலி நேரங்களிலும் தேர்ந்த நடிப்பைக் காட்டத் தவறவில்லை. ஆனா அதென்ன பாஸ், சக போலீஸ்காரரிலிருந்து வில்லன் வரை ப்பளார்னு விடற ஒரே அறையில வழிக்குக் கொண்டு வந்துடறீங்க? 

பீட்சாவுக்குப் பிறகு, விஜய் சேதுபதியுடன் ரம்யா நம்பீசன். பீட்சா போலவே ரொமாண்டிக் காட்சிகளில் நெருக்கம் காட்டியிருந்தாலும், இவ்வளவு அழகான பொண்டாட்டி சண்டை போட்டுட்டாவே இருப்பாங்க? இட்லிப் பொடியை தொட்ட விரலை.. விடுங்க... அவ்ளோ ஆசையை வெச்சிருந்து, ஒவ்வொருக்கா புருஷன் வரும்போதும் தள்ளிவிட்டுட்டேவா இருப்பாங்க? ஒருகட்டத்தில் விஜய் சேதுபதியே காலில் விழுந்தபிறகுதான் போனாப்போவுது என்று கட்டிப்பிடிக்கிறார். நடிப்பில்.. நச்! கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, மகள் பார்த்துவிட கண்ணில் நீருடன் ஒரு எக்ஸ்ப்ரஷன் தருகிறார். ரம்யம்! 

வில்லனாக வேல ராமமூர்த்தி. வழக்கம்போலவே சிறப்பு. காமெடி என்று எதையும் இயக்குநர் முயற்சிக்காதது கதையோட்டத்துக்காக என்றிருந்தாலும், அங்கங்கே நகைச்சுவையை தெளித்திருக்கலாம். எஸ்.ஐ- உடனான உரையாடல்கள் அவ்வளவு சிரிப்பைத் தரத்தவறினாலும்,அந்த ‘அவன் மொறைக்கறான். சிரிப்பு சிரிப்பா வருது வெளில போகச்சொல்லு’ - கலகலகல. குழந்தைகளாக நடித்திருக்கும் இரண்டு குட்டீஸ்க்கும் ஒரு மூட்டை சாக்லேட் பார்சல். அவ்வளவு அழகு + கச்சிதம். குறைந்த நிமிடங்களே வந்தாலும், அந்த கமிஷனை விசாரிக்கும் அதிகாரி.. செம. 

இசை நிவாஸ் கே பிரசன்னா. தெகிடி படத்தின் பாடல்கள் மூலம் கவனமீர்த்தவர், இதிலும் மெலடிக்களில் முத்திரை பதித்திருக்கிறார். ‘நான் யாரு.. நான் யாரு’ வில்லனுக்கு வரும்போது எடுபட்டத்தை விட, ஹீரோவுக்கு வரும்போது அதிக க்ளாப்ஸ் அள்ளுகிறது. ஆனால் பின்னணி இசை? ஒரு சில ஆக்‌ஷன் காட்சிகளில் ஓகே என்றாலும், காதுவலிக்குது சார். பல நேரம் சைலண்டாக இருந்திருக்க வேண்டிய இடத்திலெல்லாம் ஓவர் டைம் வேலை செய்திருக்கிறார். ஒரு இடத்தில் வசனமே கேட்காத அளவுக்கெல்லாம் துருத்திக் கொண்டிருந்தது.

தினேஷ் கிருஷ்ணனின் காமெரா, ஆக்‌ஷன் காட்சிகளிலும், ரொமாண்டிக் காட்சிகளிலும் இருவேறு விதமாக காண்பித்து அசத்தியிருக்கிறது. ஸ்ரீகர் ப்ரசாத்தின் எடிட்டிங் படத்துக்கு மிகப் பொருத்தம். ஒன்றே ஒன்று, ஒரு காட்சியில் கணவனுடனான சண்டையில் அழுதபடி இருக்கும் மனைவி, குழந்தை பார்த்ததும் டக்கென்று எக்ஸ்ப்ரஷனை மாற்றிக் கொண்டு சமாளித்து பேசுவதோடு அதை முடித்திருக்கலாம். உடனேயே அம்மா ஏதோ கேட்க, அதற்கு இவர் ஒன்று சொல்ல என்று இழுத்தது அந்த அழகை மறக்கடித்துவிட்டது.  அதை வெட்டித்தூக்கியிருக்கலாம்.

காவல்துறையின் ’சிஸ்டத்தை’ விமர்சித்திருக்கும் விசாரணை படம் வெளிவந்து இரண்டே வாரங்களில் இது வெளியாவதால், இரண்டையும் நம் மனது ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்படி ஒப்பிடுகையில், அதில் காவல்துறை செய்த அதே என்கவுண்டரை இதில் அதே துறை ஹீரோ செய்கிறார். கமர்ஷியல் படத்தில் ஹீரோ என்கவுண்டர் செய்கிறார் என்பதால் அதை ஏற்கமுடியாது. அதே ஹீரோ, வில்லனை, முதல்முறை கைது செய்யும்போது வெறுமனே இரண்டுநாள் சுற்ற விடுகிறாரே தவிர, வேறெதுவும் செய்வதில்லை. ஆக, அடியாட்கள் என்றால் என்கவுண்டர் செய்யலாம், அவரை ஏவி விட்ட செல்வாக்குள்ள மனிதர் என்றால் செய்ய வேண்டியதில்லை என்றெல்லாம் இருப்பதும், காவல்துறையின் முகத்தை இன்னொரு விதமாக வெளிப்படுத்தியதாகவே பார்க்க வேண்டியதாய் இருக்கிறது. 

நாயகனாக இருக்கும் எல்லோருக்கும் பொதுவான, காக்கிச்சட்டைக் காதலில் விஜய்சேதுபதியும் தப்பவில்லை. போலீஸ் என்றாலே விஜய்காந்த், போலீஸாக அவர் நடித்த சேதுபதியும் மக்களுக்கு ஹிட் மெமரி. அது தன் பெயராகவும் இருப்பதில் விஜய் சேதுபதிக்கு டபுள் குஷியாக இருந்திருக்க வேண்டும். ஒரு போலீஸ் கதையில் அழகான குடும்பம் + ரொமான்டிக்கைக் கொண்டுவந்து சோர்வடையச் செய்யாமல் படத்தை நகர்த்திச் சென்ற விதத்தில்.. சேதுபதிக்கு ஒரு சல்யூட்!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close