Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேய் பயமுறுத்தும்னு நினைச்சு போனா, என்ன நடக்குது தெரியுமா? - ஜித்தன் -2 விமர்சனம்

அப்பாவின் ஆசைக்காக, ஒரு வீட்டை விலைக்கு வாங்கும் ரமேஷ், அந்த வீட்டிற்குள் குடிபோக பேயாக வாழும் ஸ்ருஷ்டி டாங்கேவால் அடி, உதைகளுக்கு ஆளாகிறார். பேயை விரட்ட என்ன என்னவோ செய்து கடைசியில் பேயுடன் நட்பாகி, வீட்டை இடிக்க வரும் வில்லன்களை இறந்து போன சிலரின் உதவியோடு விரட்டியடிக்கிற காவியக்கதைதான் ஜித்தன் -2.

பேய்க்கதைகளின் காலத்தில் எதையும் புதிதாக சொல்ல முடியாதுதான். கட்டிப்பிடித்தால் பேய், ஃபோனில் பேய், பஸ் ஓட்டினா பேய் என்று விதவிதமாய் வந்துவிட்டதுதான். ஆனால் குறைந்தபட்சம் ரசிகர்களை எதாவது ஒரு விதத்தில் கவர வைக்க வேண்டும். நகைச்சுவையான வசனங்களிலோ, பயமுறுத்தும் காட்சியமைப்பிலோ, எதாவது ஒரு விதத்தில்.

இதில் புதுமை என்று முயன்றிருப்பது எல்லாமே ரசிகர்களை முகம் சுளிக்கவே செய்திருக்கிறது. ரமேஷை, கவுண்டமணி திட்டுகிறார், அஜீத் சுடுகிறார். சோஃபா, இவருடன் சண்டை போடுகிறது. இவர் சோஃபாவின் காலில் விழுந்து கதறுகிறார். கை காலாக மாறுகிறது, கால் கையாக மாறுகிறது. திடீரென்று இடுப்பை வளைத்து நெளித்து டான்ஸ் ஆடுகிறார். சேவல் வந்து சண்டை போடுகிறது, வீடு முழுவதும் சேவல்கள் இவரை துன்புறுத்துகிறது.

பயமும் இல்லை. சிரிப்பு... ம்ஹ்ம்..!

ஜித்தன் ரமேஷின் காதலி இரண்டோ, மூன்றோ காட்சிகளில் வருகிறார். ‘நீ என்கிட்ட பேசவே மாட்டிங்கற’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். இடைவேளைக்கு முன் கன்னங்கரேலென்று இருந்த பேய், இடைவேளைக்குப் பின் திடீரென்று ஸ்ருஷ்டி டாங்கேவாக அழகாக ரமேஷால் பார்க்க முடிகிற, பேச முடிகிற பேயாக மாறுகிறது.

சப் இன்ஸ்பெக்டர் ரோபோ சங்கர் வந்து, பேயை விரட்டுகிறேன் பேர்வழி என்று சோஃபாவையும், டிவியையும் தூக்கிக் கொண்டு போகிறார். பேயை விரட்ட வந்த கேரள மந்திரவாதிப் பெண் உடம்பில் பேய் வந்து, ரமேஷை உடலுறவுக்கு அழைக்கிறார். மயில்சாமியும், ரமேஷும் போய் அழைத்ததும் விபத்து நடந்த இடத்திலிருந்து இறந்தவர்கள் நடந்து வந்து என்ன நடந்ததென்று சொல்கிறார்கள். அவர்களை திரும்பவும் உதவிக்கு கூப்பிட, அவர்கள் வந்து ரமேஷுக்கு உதவுகிறார்கள்.

ப்பா! முடியல சார். ஒரு விஷயமாவது பாராட்ட இருக்காதா என்று யோசித்தால், போனால் போகிறதென்று சாண்டி நடனத்தை சொல்லலாம். சோனா ஜித்தனை கரெக்ட் செய்ய முயல்கிற மற்றும் கருணாஸ், ஸ்ருஷ்டி டாங்கேவை கரெக்ட் செய்ய முயல்கிற காட்சிகள் எல்லாம் எரிகிற தீயில் எண்ணெய்.
படத்தில் எல்லா கேரக்டர்களும், நாடக பாணியில், ஃபோனை எடுக்கும்போதே ‘இந்தா ஃபோன் போடப்போறேன்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டு - என்ன செய்யப்போகிறார்கள் என்று அறிவித்துவிட்டே செய்கிறார்கள். பயமுறுத்துகிற மாதிரி இசை போடுவதற்கு பதிலாக, இசை வருமோ என்றே பயமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போன்ற ஒரு க்ளைமாக்ஸ்.
படத்துல பேய் பயமுறுத்தலாம். ஆனா, படமே பேயா பயமுறுத்தலாமா?
போதும்... நிறுத்திக்குவோம்..!

 

.

 

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close