Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லாஜிக் மீறல்களை மறக்கடிக்கும் அந்த மேஜிக்! - ரெமோ விமர்சனம் #REMO

 

மான்கராத்தேயில் வந்த  சாமியார் போல யாராவது, 'இன்னும் நாலு வருஷத்துல உங்க படத்துக்கு சத்யம்ல ஃபுல் சைஸ் கட் அவுட் வெச்சு, ஓபனிங் அப்படி இருக்கும்' என்று சொல்லியிருந்தால் சிவகார்த்திகேயனே 'சில்ற இல்ல போய்ட்டு அப்பறம் வா' என்று அனுப்பியிருப்பார். இன்றைய தேதியில் (ஏழு அக்டோபர் 2016) அப்ப்ப்ப்படி ஒரு ஓபனிங் சிகாவிற்கு!

பெண்களென்றாலே பயப்பட்டு ஒதுங்கி ஓடும் சிவகார்த்திகேயனுக்கு எப்படா அம்பு விட்டுக் காதல் கடலில் தள்ளி விடலாம் என்று காத்திருக்கிறான் காதல் கடவுள் க்யூபிட். சிக்காமல் எஸ்கேப் ஆகிக்கொண்டிருக்கும் எஸ்கேவுக்கு நடிப்பின்மீதுதான் ஆர்வம். ஆனாலும் ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷை சந்திக்க, காதல் துளிர்விடுகிறது. காதல் நிச்சயமாகுமா என்று கீர்த்தியை அவர் வீட்டில் சந்திக்கப்போகும் எஸ்கேவிற்கு, அங்கே ஓர் அதிர்ச்சியாக கீர்த்திக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன் கல்யாண நிச்சயம். இந்தக் காதலெல்லாம் ஒத்துவராது என்று ஒரே சீனில் உதறிவிடுகிறார் எஸ்கே. 

முதன்முறை திட்டு வாங்கி, இரண்டாவது முறை  கே.எஸ்.ரவிகுமாரிடம் நர்ஸ் வேஷமிட்டு சான்ஸ் கேட்டுச் செல்லும் எஸ்கே, வரும் வழியில் கீர்த்தியை சந்திக்க.. அவர் முன் நர்ஸாகவே தொடர்கிறார். அவர் டாக்டராக இருக்கும் மருத்துவமனையில் வேலைக்கு சேர்கிறார். 

அடுத்த பாரா என்ன எழுதுவோம் என்று உங்களுக்கே தெரியும். மீதியை வெள்ளித்திரையில் காண்க என்கிற அதே பழைய பாட்டுபுக் வரிகள்தான். 

முதலில் அந்தப் பெரும் கலைஞனைப் பாராட்டிவிடுவோம். பி.சி.ஶ்ரீராம்! டேப்லெட் காலத்திலும் மவுஸ் இருக்கிறதென்றால் அது இந்த பி.சி-க்குதான்! பெரிய கேமரா ஞானமில்லாதவர்களுக்கும் புரியும்...   ஃப்ரேம் வைப்பது என்கிற விஷயத்தை இவரின் படங்கள் பார்த்தே கற்றுக்கொள்ளலாம். ஒரு பாட்டில் கீர்த்தி காஃபி குடிக்கற க்ளோஸப் ஃப்ரேம்,   மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் கீர்த்தி க்ளோஸப்பிலும், சிவகார்த்திகேயன் கொஞ்சம் லாங்கிலும் தெரிகிற ஒரு ஃப்ரேம், மொட்டை மாடியில் பறக்கிற பலூன்கள் கீர்த்தியின் கண்ணில் தெரியும் ஒரு ஷாட் என்று வித்தைகளை அள்ளித் தெளித்திருக்கிறார். ரொம்ப ப்ரைட்டாகவும் இல்லாமல், இருட்டு அப்பியும் இல்லாமல் எப்படி பி.சி இப்படி!?

 

எஸ்கே என்று கேரக்டருக்கு பெயர் வைத்த டைரக்டருக்கு தேங்க்ஸ். அத்தனை பெரிய பெயரை ஒவ்வொரு முறையும் அடிக்க முடியவில்லை. டைட்டிலிலும் எஸ்.கே. என்று போட்டுதான் எக்ஸ்பாண்ட் பண்ணிக்காட்டுகிறார்கள்.  

எஸ்கேவுக்கு கவுன்டரும், காமெடியும் நன்றாக வருகிறது என்று சொல்வதெல்லாம் சனிக்கிழமைக்கு அடுத்த நாள் சண்டே என்பது போல எல்லோருக்கும் தெரிஞ்ச நியூஸ். அவரின்  நடிப்பும் டான்ஸும் படத்துக்கு படம் மெருகேறிக்கொண்டே வருகிறது. கே.எஸ்.ஆரிடம் நடிக்கத்தெரியாமல் நடிக்கும்போது செஞ்சுரி என்றால், கீர்த்தியிடம் உண்மையாகவே தைரியம் வந்து சொல்லும்போது உடல்மொழியில் கான்ஃபிடென்ஸ் காட்டிய நடிப்பில் டபுள் செஞ்சுரி. 

படத்தின் ஹீரோயின் யார் என்பதில் 'ரெஜினா மோத்வானி'-க்கும் கீர்த்தி சுரேஷுக்கும் கடும்போட்டி. ஸ்க்ரீன் ப்ரசன்ஸிலும்,  ரெஜினா மோத்வானி ஒருசில புள்ளிகள் முன்னிலை பெறுகிறார். நடிக்க நிறைய ஸ்கோப் உள்ள கதை என்பதால் கீர்த்தி சுரேஷும் கிடைத்த காட்சிகளிலெல்லாம் ஸ்கோர் செய்கிறார். கீர்த்தி சுரேஷ் அவ்வளவு அழகு என்பது பிசிஶ்ரீராமின் கேமரா வழியாகப் பார்க்கும்போதுதான் தெரிகிறது.

பாக்யராஜ் கண்ணனுக்கு.. வார்ம் வெல்கம் ப்ரதர்! கதை சொல்லியே படத்தை ஆரம்பிக்கும் டிரெண்டைக் கொண்டு வந்த எஸ்.ஜே.சூர்யாவின் பாணியில், அவர் குரலிலேயே படத்தை ஆரம்பித்ததில் இருந்து கடைசி சீனில் பேனரில் கே.எஸ்.ரவிகுமார் பெயர் 'பாக்யராஜ் கண்ண'னாக  மாறுவது வரை சின்னச் சின்ன விஷயங்களில்கூட கவனமெடுத்து இழைத்திருக்கிறார். 'பொண்ணுகளை கண்ட்ரோல் பண்றது கஷ்டம் கன்ஃப்யூஸ் பண்றது ஈஸி' போன்று டிரெண்டி வசனங்களுக்கும் குறைவில்லை. 

பாடல்களில் கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டு, பி.ஜி.எம்-மில் அசால்ட் காட்டியிருக்கிறார் அனிருத். அதுவும் ஹாஸ்பிடல் ஃபைட் சீன் பி.ஜி.எம்.. கெத்து ப்ரோ!

 

 

சிங்கிள் வேண்டுமென்றாலே சிக்ஸடிக்கிற தோனியாய் சிவகார்த்திகேயன் இருக்கும்போது, ஸ்கோர் செய்வது கஷ்டம்தான்.. ஆனால் அடிக்கற குட்டிக்குட்டி கவுன்டர்களில் உரக்கச் சிரிக்க வைக்கிறார் சதீஷ். மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சரண்யா என்று கதைக்கேற்ற பாத்திரங்கள். 

 

கார்பரேட்டர் அடைத்துக்கொண்ட பைக் போல, திரைக்கதை அங்கங்கே உட்கார்ந்து விடுகிறது. இன்னும் எத்தனை படங்கள்தான் இந்தப் 'பசங்க பாவம்யா' டோன்லயே எடுப்பீங்க பாஸ்? ஹீரோ நல்லவருதான்.. ஓகே.. அவரை ஹீரோயின் கைபிடிக்கணும்கறதுக்காகவே பாவம், அந்த மாப்பிள்ளையை அப்படிக் காட்டணுமா என்ன? 

லாஜிக் உதைக்காமல் இல்லை. ஒரு ரூபாய் டவுன் பேமெண்டில் வீடே கிடைக்கிற காலத்தில், டாக்டர் ஒரு டூவீலர்கூட இல்லாமல் பஸ்ஸிலேயே வருவாரா? ஒவ்வொரு முறையும் அந்த மேக்கப்பை ஜஸ்ட் லைக் தட் போட்டுக்கொள்ளப் பழகிவிட்டாரா? அத்தனை நாள் நர்ஸாக வேலையே செய்யாமல் நடிக்க முடியுமா? வெறும் 10 நாளில் லவ்வை வலிந்து ஒரு பெண்ணுக்கு வரவைப்பது ஹீரோ என்பதால் ஓகே ஆகிவிடுமா? 

எல்லா லாஜிக் மீறல்களையும்.. ஒரு மேஜிக் மறக்கடித்துவிடுகிறது. அது சிவகார்த்திகேயன் மேஜிக்! . அதிரடியான கமெர்ஷியல் பட விரும்பிகள், றெக்க கட்டி பறக்கலாம்

 

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close