Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நடிகர் மயில்சாமியை சிக்க வைத்த குரங்குகள்!

குரங்குகளுக்கு மது ஊற்றியதாக பேசிய நடிகர் மயில்சாமி, கால்நடை துயர்தடுப்பு அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னையில் கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற ‘வஜ்ரம்’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய நகைச்சுவை நடிகர் மயில்சாமி, "குற்றாலத்தில் நடந்த படப்பிடிப்பின்போது சேட்டை செய்த குரங்குகளுக்கு தனது உதவியாளர் மூலமாக மது அருந்த செய்து, குரங்கிற்கு மரம் ஏறுவதையே மறக்க செய்ததாக’ நகைச்சுவையுடன் கூறினார்.



இவ்வாறு நடிகர் மயில்சாமி பேசியது, பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது. இந்த செய்தியை படித்த மதராஸ் கால்நடை துயர் தடுப்பு கழக (எஸ்.பி.சி.ஏ.) அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மயில்சாமியின் பேச்சு, பிராணி வதை தடுப்பு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதுதொடர்பாக நடிகர் மயில்சாமியிடம் எஸ்.பி.சி.ஏ. கவுரவ செயலாளர் தி.தியாகராஜன் தலைமையில் முதன்மை ஆய்வாளர் தவுலத்கான், துணை ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது நடிகர் மயில்சாமி அதிகாரிகளிடம் ஒரு மனு ஒன்றை அளித்தார். அதில், நகைச்சுவைக்காக, ஒரு நகைச்சுவை நடிகன் என்ற முறையில், பேச்சில் ஒரு ‘ஜனரஞ்சகம்’ இருக்க வேண்டும் என்ற காரணத்தால் அவ்வாறு பேசினேன். ஆனால் அப்படி ஒரு நிகழ்ச்சி உண்மையில் நடக்கவில்லை. பிராணிகளையோ அல்லது பறவைகளையோ வதைப்பது எனக்கு உடன்பாடான ஒன்று அல்ல பிராணிவதை தடுப்பு சட்டப்படி எந்த ஒரு தவறையும் செய்யவில்லை.

குரங்குகளுக்கு நகைச்சுவைக்காக மதுவை குடிக்க கொடுத்ததாக பேசியிருந்ததே பிராணி வகை தடுப்பு சட்டப்படி குற்றமாகும் என்று எனக்கு இப்போது தெரிய வருகிறது. இது மிகுந்த மன வேதனையும், வருத்ததையும் தருகிறது. எனவே நான் மேற்கண்டவாறு பேசியது தவறு என்றும், அதற்காக எனது ஆழ்ந்த மன வருத்தத்தை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இது குறித்து எஸ்.பி.சி.ஏ. அதிகாரி தி.தியாகராஜன் கூறுகையில், ‘‘குரங்குகளுக்கு மது ஊற்றியது தொடர்பான பேச்சு, நகைச்சுவைக்காக மட்டுமே பேசியதாக நடிகர் மயில்சாமி விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கத்தை ஏற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் இதுபோன்று விலங்குகளை துன்புறுத்தும் வகையான பேச்சினை இனி நகைச்சுவைக்காக கூட பேசக்கூடாது என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்