Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குச்சி ஐஸுக்காக லவ் லெட்டரு எழுதினேன்!- தம்பி ராமையா கலகல பேட்டி!

'ஹீரோ, ஹீரோயினை புக் செய்கிறார்களோ இல்லையோ... முதலில் தம்பி ராமையாயை புக் செய்துவிடுகிறார்கள் டைரக்டர்கள்' என்று கோலிவுட்டில் செல்ல பொறாமையுடன் சொல்லும் அளவுக்கு ஒரு மாதத்தில் தம்பி ராமையா நடிக்கும் படங்கள் இரண்டு, மூன்றாவது ரிலீஸ் ஆகிவிடுகிறது.

பேசக் கூட நேரம் இல்லாமல் ஷூட்டிங்கில் பரபரவென சுற்று சுழன்றுகொண்டிருந்தவரைப் பிடித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

செம பிஸி போல... போன வருஷம் 20 படங்கள். இந்த வருஷம் ஆரம்பத்திலேயே 13, 14 படங்கள்ல நடிக்கிறீங்களே?

ஏம்பா... உனக்கு இதுதான் வேலையா? நீ சொன்ன பிறகுதான் இத்தனை படத்துல நான் நடிக்கிறேன்னு எனக்கே தெரியுது" என சிரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தார். ''நல்ல கதையும் படத்துல என்னோட ஸ்கோரும் நல்லா இருந்தா ஓகேப்பா. இத்தனை படம்னுல்லாம் ஏதும் கணக்கு இல்ல. ’கொம்பன்’ படம் முடிஞ்சுடுச்சு. ’யட்சன்’, ’தனி ஒருவன்’, ‘புலி’ இப்படி இன்னும் சில படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன். நல்லா போகுதுப்பா.

’கொம்பன்’ படத்துல உங்க கேரக்டர் என்ன?  

ராஜ்கிரண் மாமனார், கார்த்தி மருமகன், கோவை சரளா கார்த்திக்கு அம்மா, அவங்களுக்கு நான் தம்பி. கொம்பன் கொம்பன்னு பயந்துகிட்டு இருந்த என்ன, இந்த படத்துல கொம்பனோடயே சுத்த வெச்சுட்டாங்க. ’கொம்பன்’ (கார்த்தி) பக்கத்துல இருந்தா நான் புலி, தனியா இருந்தா எலி. படம் முழுக்க மாப்பிள்ளைய நம்பி இருக்கற காமெடி மாமன் கேரக்டரு.

எஸ்.ஜே.சூர்யா எப்படி?

அவரு மாதிரி ஒரு கேரக்டர பாக்கவே முடியாதுப்பா. அவரு ஒரு இயக்குநர், நடிகன்ங்கிறத தாண்டி, நல்ல ரசிகன். ஒவ்வொரு சீனையும் ஒரு ரசிகனாத்தான் பாப்பாரு. ஒரு ஷாட் முடிச்ச உடனேயே  கட்டி பிடிச்சுதான் நம்மள புகழுவாரு. தானாவே எனர்ஜி வந்துடும். கொடைக்கானல்ல இதுவரைக்கும் சினிமாவுல காட்டாத பகுதியில, ஒரு சர்ச் செட்டெல்லாம் அமைச்சு நடுங்குற குளிர்ல படம் எடுத்தோம். இருந்தாலும் என்கிட்ட, 'அவ்ளோ மேல ஓகேவா?'ன்னுல்லாம் கேட்டு, அனுமதியெல்லாம் வாங்கி ஷூட் பண்ணாரு, என் கிட்ட கேக்கணும்னு அவசியமே இல்ல... ஆனாலும் கேட்டாரு.

இந்த வருஷம் எப்படி போகப்போகுது?


போன வருஷத்தவிட இந்த வருஷம் நடிகர்களோட என்னோட பயணம் இருக்கப் போகுது. அதிகமா புதுமுக நடிகர்களோட நடிச்சுட்டு இருந்தேன். இப்போ, விஜய்யோட ‘புலி’, ஜெயம் ரவியோட ‘தனி ஒருவன்’, ஆர்யா கூட ‘யட்சன்’, கார்த்தியோட ‘கொம்பன்’... இப்படி பெரிய நடிகர்களோட என்னோட இந்த வருஷம் இருக்கும்.

’சாட்டை’ படத்துல கல்விக்கு வில்லன், ‘வஜ்ரம்’ படத்துல கல்விக்கு நண்பனா?

’சாட்டை’ பட வில்லன் ரோல் உண்மையாவே எனக்குப் பிடிச்ச ரோல். கிட்டத்தட்ட படத்தோட ஹீரோ மேல சிம்பதி வரணும். அதுக்கு ஒரே வழி நான்தான். எவ்ளோ கோவத்த காட்றனோ, அவ்ளோ நல்ல எண்ணம் சமுத்திரகனி மேல மக்களுக்கு வரும். எனக்கும் பிடிச்ச ரோல் வில்லன் ரோல்தான். காமெடி, குணச்சித்திரமான ரோல் எல்லாம் நம்ம வாழ்க்கையோட வர்ற விஷயங்கள்பா. ஆனா ஒரு நடிகனா, வில்லன் ரோல்தான் ரொம்ப கஷ்டம். அதுதான் சவாலான விஷயம். ’வஜ்ரம்’ படமும் கல்விக்கான மெஸேஜ் படம்தான். பெரிய பெரிய நடிகர்களோட நடிச்சுட்டேன். இந்த பசங்ககூட நடிக்கணும்னு ஒரு ஆசை. அதுவும் நிறைவேறிடுச்சு. கல்வி எவ்வளவு முக்கியம்னு சொல்லக்கூடிய படம்.

சமூக வலைதளத்துல இப்பல்லாம் ஒரு படம் வந்த உடனேயே ரிசல்ட் வந்துடுதே... ஒரு இயக்குநரா எப்படி பாக்கறீங்க?

வெற்றி, வாழ்த்து வந்தா மட்டும் ஓகேன்னு ஏத்துக்கறோம். அப்போ விமர்சனத்த மட்டும் ஏத்துக்கலைன்னா எப்படி? அரசியலோ, சினிமாவோ, புகழ், அரியாசனம் வர்றப்ப சந்தோஷமா அனுபவிக்கறோம், விமர்சனம் வரும்போது மட்டும் நாங்களும் மக்கள்தானன்னு ஒளிஞ்சுகிட்டா தப்பு. மக்கள் பணத்துல, மக்கள் ஆதரவுலதான் நம்ம வாழ்க்கைங்கறப்ப இத ஏத்துகிட்டுத்தான் ஆகணும். 100 சதவீதம் இத ஆரோக்கியமாத்தான் பாக்கறேன்பா. க்ரிடிக் இருக்கறதும் தப்பில்ல, அது அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோகும். கருத்து யார் வேணும்னாலும் சொல்லலாம். ஆனா, விமர்சனம் பண்றதுக்கு சினிமா அறிவு கொஞ்சம் வேணும். அப்படிப்பட்ட விமர்சனம்தான் காலம் தாண்டி நிக்கும்.

’குறும்படம் எடுக்குற குரங்கு பசங்களா’... இது உண்மையான டயலாக்கா?

பாத்தியா கோத்து விடற! அது படத்துக்காக சொன்னது. உண்மையிலேயே இது ஆரோக்கியமான விஷயம். இன்னிக்கு சினிமா ஷார்ட் & ஸ்வீட்டா மாறினதுக்கு காரணமும் இதுதான். இளைஞர்கள் குறும்படம்ங்கற விஷயத்தால பொறுப்பா மாறிட்டாங்க. முன்னல்லாம் காலேஜ் ஸ்டூடண்டுக போராட்டம், பஸ் எரிப்புன்னு சமூக சீர்கேட்ல முதல் ஆளா இருப்பாங்க. ஆனா, இந்த குறும்பட கான்செப்ட் அவங்கள சின்ன வயசுலயே சிந்திக்கவும், வெற்றி, தோல்விய ஏத்துக்கவும் பக்குவப்படுத்துது. இப்படி பக்குவப்படற பசங்கள்கிட்ட நல்ல பக்குவப்பட்ட படங்களும் கிடைக்கும். வேற மாதிரி பசங்க முன்னேறிட்டாங்கப்பா. எனக்கே பொறாமையா இருக்கு. 

நீங்க ஒரு சீன்லயாவது வந்தா மட்டும் போதும். இப்படி யாராவது சொல்லியிருக்காங்களா?


இப்படி பல பேர் சொல்லியிருக்காங்க. இப்பகூட சமீபத்துல ‘யட்சன்’ டப்பிங்ல என்ன பாத்துட்டு, ஆர்யா போன் பண்ணி, 'சார் சான்சே இல்ல'ன்னார். 'என்ன தம்பி'னு கேட்டேன். திரும்பத் திரும்ப 'சான்சே இல்ல'னு சொல்லிகிட்டே இருந்தாரு. 'என்ன சார் இப்படி நடிச்சுருக்கீங்க. சூப்பர் சார்'னு வாய் நிறைய பாராட்டினாரு. அவ்ளோ பெரிய ஹீரோ பாராட்டணும்னு அவசியமே இல்ல. ஆனா பாராட்டினாரு. 

’யட்சன்’ பட கேரக்டர் பத்தி சொல்லுங்களேன்? 

அய்யய்யோ நானா மாட்டிக்கிட்டேனா? சொல்றேன்... சிரிக்கக் கூடாது, இந்த படத்துல நான் ஒயிட் காலர் கிரிமினல்ப்பா. கிரிமினலான காமெடியன். ஆயுதமே இல்லாம அறிவை வெச்சு குசும்பு பண்ற கேரக்டர். இதுக்கு மேல சொன்னா விஷ்ணுவர்தன் என்ன ஆள் வெச்சு தூக்கிருவாரு.

’மனுநீதி’, ’இந்திரலோகத்தில் நா அழகப்பன்’... இப்படி ரெண்டு படங்கள இயக்கியிருக்கீங்க. இப்போ டைரக்‌ஷனை விட்டுட்டீங்களே...  அடுத்து எப்போ டைரக்‌ஷன்?

கதையெல்லாம் ரெடியா இருக்கு, அதேபோல படம் பண்றதுக்கு வழிகளும் இருக்கு, ஆனா, கமிட்மென்ட் நெறையா இருக்கு. ஒண்ணு ரெண்டு வருஷத்துல திரும்ப டைரக்‌ஷன்ல இறங்குவேன். 

எப்போ ஹீரோவா நடிக்கப் போறீங்க?

(கேப்பே இல்லாமல் சிரித்தார்) நான் நடிக்கிற படத்துல, என்னோட கேரக்டர்ல நான்தான் ஹீரோ. நடிகையைக் கட்டிபிடிச்சு டூயட் பாடினாதான் ஹீரோவா என்ன? 

வீட்ல உங்க ராஜ்ஜியமா? இல்ல, அம்மா ராஜ்ஜியமா?

இப்ப சொன்னா உள்ள பிடிச்சு போட்ருவாங்க. அவங்கள 17 வயசுல கல்யாணம் பண்ணேன், இப்ப வரைக்கும் மூணு ரூபா சம்பாதிச்சாலும் அவங்ககிட்ட குடுத்துடுவேன். முழு சப்போர்ட் குடுப்பாங்க. என்னொட எல்லா விஷயத்துலயும் என்கூடவே இருந்துருக்காங்க. திருவோட்டோட நீங்க இருந்தாலும் தெருவோட நான் வரேன்னு சொல்லுவாங்க. என் வாழ்க்கையில பிறக்கறதுக்கு முன்னாடியே அமைஞ்ச நல்ல விஷயம், என்னோட அம்மா, பிறந்ததுக்கு அப்பறம் அமைஞ்சது என் பொண்டாட்டி. அவங்க இல்லாம நான் இல்ல. 

நீங்க சின்ன வயசுல லவ் லெட்டர் எழுதி குடுத்து காசு சம்பாதிச்சீங்கன்னு ஒரு கிசுகிசு இருக்கே?

அடப்பாவிகளா... இதெல்லாம் இந்த புள்ளகிட்ட யாருய்யா சொன்னது? (சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்) இல்லப்பா... அப்பல்லாம் நாங்க பள்ளிக்கூடத்துல படிச்சப்ப, கிராமத்து பசங்கள பார்த்து நகரத்து பசங்க ரொம்ப பயப்படுவாங்க. நமக்கு கட்ஸ் ஜாஸ்தி. அதுவும் உறவுகளோட பின்னணியில வந்தவங்க. அதனால காதல் உணர்வுகூட கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும், அப்ப எல்லாம் காதல் கெட்ட வார்த்தை. ஒரு புள்ளகிட்ட பேசவே பயப்படுவானுங்க. என் அப்பா எழுத்தாளர். சொல்லவா வேணும்? சும்மா ஒரு நாலு வரி, அஞ்சு வரில அந்தப் பசங்களுக்கு அப்படி ஒரு கவிதைய எழுதி போடுவேன். அப்பல்லாம் சாதாரண ஐஸ் 5 பைசா, சேமியா ஐஸ் 10 பைசா. அந்த ஐஸ் வாங்கி திங்கறதுக்காக லவ் லெட்டர்லாம் எழுதி குடுத்தேன்பா. இப்பவும் நெறைய காதலை சேர்த்து வெச்சுருக்கேன். அதெல்லாம் என்னோட அனுபவமா புத்தகம் வெளியாகும். அதுல படிச்சு பாருங்க... சுவாரஸ்யமா இருக்கும்.

கட்டக் கடைசியா ஒரு கேள்வி... ‘புலி’? 

’ஜில்லா’ படத்துல நான் ஏமாந்துட்டேன். நான் எதிர்பார்த்த ரோல் இல்ல. அந்த டைம்ல தலையோட நடிச்சுட்டேன்னுதான் எனக்கு பேரு வந்துச்சு. அப்டி ஒரு ரோல் ‘வீரம்’ படத்துல. ஆனா, தளபதியோட நடிச்ச பேரு நிக்கல. அந்த பேரு ‘புலி’ படத்துல நிக்கும். என் கேரக்டரை சிம்புதேவன் செதுக்கியிருக்காரு. ஒவ்வொரு சீனையும் ரசிச்சு, ரசிச்சு எடுத்துகிட்டு இருக்காரு. என் கேரக்டரே அப்படின்னா, அப்போ தம்பி விஜய் கேரக்டரை யோசிச்சு பாருங்க. இதை அரசர் கால கதைன்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனா, இது வேற மாதிரி கத. ரெண்டு போர்ஷன்லயும் நான் இருக்கேன், சண்ட, பாட்டு தவிர படம் முழுக்க என் கேரக்டர் இருக்கு. விஜய் தம்பிய இதுவரைக்கும் நீங்க அப்பிடி ஒரு கேரக்டர்ல பாத்துருக்கவே முடியாது. எனக்கே 70 நாள் கால்ஷீட்னா பாத்துக்கப்பா. இதுக்கு மேல படத்த பத்தி பேசினா எனக்கு விஜய் தம்பிகிட்டயும், சிம்புதேவன் கிட்டயும் அடி விழும் கண்ணு. அப்பறம் நீதான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லி குடுத்துடுவேன். எல்லா நல்லதும் கிடச்சு நீங்க நல்லா இருக்கணும். காட் ப்ளஸ் யூடா தங்கம் - என்றபடி விடைபெற்றார் நம்ம ஹெட்மாஸ்டர்.
 
- ஷாலினி நியூட்டன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close