Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு நிமிட டிரெய்லரில், அமெரிக்கரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட ஆப்பிரிக்க சினிமா

சினிமாவால் கண்டங்கள் தாண்டிய நட்புக்கு சாத்தியமுண்டு  என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம்தான்  ஆலனும் இசாக்கும். யார் இவர்கள்?

ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் உகாண்டா நாட்டில் கிடைத்த பொருட்களை வைத்து மிக எளிமையாக குறும்படங்களின் தரத்தில் சினிமாக்கள் எடுப்பவர்தான் இசாக் நப்வானா. இணையத்தில் இவரின் உகாண்டா சினிமாக்களை 'வகாலிவுட்' சினிமாக்கள் என்று அழைக்கிறார்கள். காரணம் அவர் வசிக்கும் இடத்துக்குப் பெயர் வகாலிகா. மிக மிக சொற்பச் செலவில் இவர் எடுக்கும் படங்கள் இப்போது இணையத்தில் அதிகம் ஷேர் ஆகின்றன.

இசாக்கின்  வீட்டையே 'ராமோன் ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ்' என்ற பெயரில் ஸ்டுடியோவாக்கி, கிடைத்த பழைய கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை வைத்து எடிட்டிங் டெஸ்க் உருவாக்கி, கேமராக்களை வாடகைக்கு எடுத்து தன் சேரிக்குழந்தைகளையும் தன் நண்பர்களையுமே படங்களில் நடிக்க வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையில் படங்களை அந்த நாட்டில் ரிலீஸ் செய்கிறார். பைசா பிரயோஜனம் இல்லாத இந்த வேலையை அவர் செய்ய ஆரம்பித்தபோது 'இவனுக்கு கிறுக்குப் பிடிச்சிருக்கு' என எல்லோரும் கிண்டலடித்திருக்கிறார்கள். ஆனால், இணையத்தில் ஒருமுறை வெளியானால்தான் எங்கோ யாரோ ஒருவரை வெகுவாக பாதிக்குமே...! இவருடைய படங்களைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி ஃப்ளைட் பிடித்த அமெரிக்க இளைஞர் ஒருவர் இப்போது இசாக்கின்  படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டும் ஒளிப்பதிவு  செய்துகொண்டும் இருக்கிறார். 

நியூயார்க்கைச் சேர்ந்த ஆலன் ஹோஃப்மானிஸ் என்பவர்தான் அவர். மிக செல்வாக்கான பிசினஸ் குடும்பத்தில் பிறந்த ஆலன் சொல்வதைக் கேளுங்கள்...
    
''நான் மோசமான காதல் தோல்வியில் இருந்தபோது சரக்கடிக்க என்னை பார் ஒன்றுக்கு அழைத்துச் சென்றான் என் நண்பன். அவன் என்னைக் குஷிப்படுத்த யூ டியூப் வீடியோ ஒன்றைக் காட்டினான். அது 'ஹூ கில்டு கேப்டன் அலெக்ஸ்' என்ற உகாண்டா படத்தின் ட்ரெய்லர். ஒரு நிமிடத்தில் துப்பாக்கி சண்டை, சீனாவின் குங்பூ, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் ஹெலிகாப்டர்கள் என பார்க்கவே காமெடியாகவும் வினோதமாகவும்  இருந்தது. 40 செகண்ட்களுக்குள்ளேயே ராம்போவின் 'எம்60' பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் என்பதை ஞாபகப்படுத்தின.

ஹைபிட்ச்சில் ஒலித்த டைரக்டரின் குரல் 'இது ரமோன் புரொடக்‌ஷன்ஸ்' எனச் சொல்லி தொடர்பு எண்ணையும் சொன்னது. இந்த ஒரு நிமிட டிரெய்லர் என்னைப் புரட்டிப்போட்டுவிட்டது. அடுத்த நொடியே முடிவெடுத்தேன். 'நான் உகாண்டாவுக்குப் போய் இந்த இசாக்கைப் பார்த்தே ஆக வேண்டும்' என்று. ஏனென்றால் எனக்கு சினிமாதான் எல்லாம். ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டும் என்பது என் பெருங்கனவு!

அடுத்த இரண்டாவது வாரத்தில் கம்பாலாவில் இருந்தார் ஆலன். நியூயார்க்கில் இருந்தபோது லேக் பிலேசிட் திரைப்பட விழாவின் புரொக்ராம் டைரக்டராய் இருந்ததால் இசாக்கின் படங்களை அங்கு திரையிடலாம் என்ற முடிவும் அப்போது அவருக்கு இருந்தது.

''போன்கால்கூட பண்ணாமல் கம்பாலாவில் போய் நான் இறங்கி நிற்பதற்குக் காரணமே சினிமா குறித்த என் தாகம்தான். பிஸியான ஒரு வாரச்சந்தைதான் ஏர்ப்போர்ட்டுக்கு வெளியே என்னை வரவேற்றது. 'ரமோன் புரொடக்‌ஷன்ஸ்' என அச்சிட்ட டீஷர்ட்  அணிந்த ஒருவரைப் பார்த்து அவரிடம் இசாக் பற்றிப் பேசச்சென்றேன். அந்த நபர் என்னைப்பார்த்து பயந்து ஓட ஆரம்பித்தார். அவரை விரட்டிப்பிடித்து, 'உங்கள் ஊர் டைரக்டரின் விசிறி நான்' என விளக்கியதும்தான் என்னை வகாலிகாவில் இருக்கும் அவர் வீட்டுக்கு தன் பைக்கில் அழைத்துச் சென்றார்.

எங்கு பார்த்தாலும் ஆடுகள் கோழிகள், திரண்டு ஓடும் சாக்கடை என அவர் வீடு இருந்த சூழலே வித்தியாசமாய் இருந்தது. இந்தச் சாக்கடையும், இந்த தூசும், சகதியும், அழுக்கு அப்பிய உடல்களோடு வளையவரும் குழந்தைகளும்தான் அவர் இயக்கிய படங்களுக்கு உயிர் கொடுக்கிறார்கள். என்னைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்துக்கு சென்ற இசாக், 'ஏன் முன்பே கால் பண்ணாமல் வந்தீர்கள்?' எனக் கேட்டார். 'நான் உங்களை ஒரு நண்பனாக சந்திக்க வந்திருக்கிறேன்' என்றேன். டீ கொடுத்து உபசரித்தார். 5 மணி நேரம் சினிமா குறித்து தீவிரமாக பேசினோம். நீண்டநாள் கழித்து பிரிந்த ஒரு நண்பனைப் பார்த்த உணர்வு அது. என்னைப் பார்ப்பதுபோல இருந்தது.

அதன்பிறகு அவர்கூடவே தங்கி அவர் படங்களை உருவாக்கிய விதத்தைப் பார்த்தேன். 40 படங்களை இயக்கி இருக்கிறார். ஒவ்வொன்றும் 200 டாலர் பட்ஜெட். நடித்தவர்கள் எல்லோரும் அந்த ஏரியா மக்கள். படப்பிடிப்புக்கு அவர் பயன்படுத்தி இருக்கும் கிரேன்கள் டிராக்டர் ஒன்றின் உதிரி பாகங்களையும் வீணான இரும்புக் கம்பிகளிலிருந்தும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

துப்பாக்கிகளை அழகாக மரத் துண்டுகளில் செய்திருக்கிறார். தோட்டாக்களுக்கு குட்டிப் பென்சில்களை பயன்படுத்தி இருக்கிறார். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உருவாக்க லோக்கல் மார்க்கெட்டில் பச்சைத்துணி படுதாக்களை வாங்கி அழகாக தைத்திருக்கிறார். பார்க்கவே ஷாக்காக இருந்தது.

அதேபோல டீம் ஒர்க்கில் அசத்துகிறார்கள். டவ்டா பிஸாஸோ என்ற நடிகரே வெல்டராக  ஆர்ட் டிப்பார்ட்மென்ட்டை அழகாக இசாக்கோடு சேர்ந்து கவனித்துக்கொள்கிறார். வெல்டிங் டார்ச்சை வைத்து நினைத்த பொருட்களை கிடைத்த மெட்டீரியல்களை வைத்து உருவாக்கும் புத்திக்கூர்மை அசாத்தியமானது.

ப்ரூஸ் யூ என்ற லோக்கல் நடிகர்தான் இசாக்கின் ஆக்‌ஷன் படங்களுக்கு சண்டைப் பயிற்சியாளர். வகாலிகா ஏரியாவின் அறிவிக்கப்படாத தாதா. காரணம் சின்ன வயதிலிருந்து இவரும் இசாக்கும் சக் நோரீஸ் படங்களுக்கு விசிறிகள். அதைப் பார்த்தே கராத்தே கற்றுக்கொண்டவர்தான் ப்ரூஸ் யூவும் இசாக்கும். இன்று வகாலிகா குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கராத்தே இலவசமாக கற்றுக் கொடுக்கிறார்கள் இருவரும்.

காண்டம் பாக்கெட்டின் மாட்டு ரத்தத்தை அடைத்து வைத்து அதை வெடிக்கச் செய்து தத்ரூபமாக கன் ஃபைட் எஃபெக்ட்டைக் கொடுக்கிறார்கள்' என்று சொல்லும் ஆலன் இசாக்கின் படங்களில் நடித்தது பற்றி பெருமிதம் பொங்க இப்படிச் சொல்கிறார்...

''சாக்கடையில் உருண்டு புரண்டு  சண்டைபோட்டு நான் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு அவர்களில் ஒருவராக என்னைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் இம்மக்கள். என்னை அன்போடு சாலி என பட்டப்பெயரிட்டு அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிறகு டிசம்பர் 2011 வரை 6 முறை இசாக்கைப் பார்க்க அமெரிக்காவிலிருந்து அடிக்கடி உகாண்டா வந்தேன்.

ஆனால் ஏனோ என் மனம் வகாலிகாவையும், இசாக்கையும் சுற்றியே இருந்தது. நட்புக்கு மரியாதை கொடுத்து என் அமெரிக்கச் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு 2014 மார்ச் மாதம் வகாலிகாவுக்கே வந்து செட்டில் ஆகி விட்டேன். இனி வாழ்வோ சாவோ வகாலிவுட் சினிமாவை உருவாக்கும் என் நண்பன் இசாக்கின் கனவுகளுக்கு உருவம் கொடுக்கும் வேலையில் தற்போது இருக்கிறேன்!' என்று சொல்லும் ஹோஃப்மானிஸ்க்கு 45 வயது. இசாக்கின் பக்கத்து வீட்டில் அந்த குடிசைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளோடு வந்து செட்டில் ஆகிவிட்டார்.

''இப்போது ஹோஃப் என் குடும்ப உறுப்பினர். என் படத்தில் ஆர்வத்தோடு லைட்மேனாக, சவுண்ட் இன்ஜினீயராக எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து வருகிறார். சண்டைக் காட்சிகளில் உயிரைக் கொடுத்து பிரமாதமாக நடிக்கிறார்." என்கிறார்.

நண்பர்கள் இருவரும் இணைந்து ஸ்டுடியோ ஒன்றை வகாலிகாவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இணையத்தில் 160 அமெரிக்க டாலர்கள் 'ஃபண்ட் ரைஸிங்' கோரிக்கையாக விடுத்திருந்தார்கள். வகாலிவுட் படங்களைப் பார்த்த ரசிகர்களின் ஆன்லைன் உதவியாலேயே இதுவரை 13 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கிடைத்துள்ளது.
இப்போது இசாக்-ஆலன் டீமின் 'வகாலிவுட் சினிமா' ஆறு படங்களை இயக்கி முடித்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் மும்முரமாகப் போய்க்கொண்டு இருக்கிறது. அடுத்து 'பேட் ப்ளாக்' என்ற குட்டிப்பையன்களை வைத்து ஆக்‌ஷன் படம் இவர்கள் கூட்டணியில் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.

-ஆர்.சரண்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close