Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொங்கல் படங்கள்... ஒரு சிறப்பு பார்வை!

பொங்கல் என்றாலே இனிப்பான பொங்கல், மஞ்சள், கடிக்க கரும்பு, பின் புதுப்படங்கள். இந்த முறை எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது. அஜித்தின் ‘என்னை அறிந்தால்' மற்றும் ‘ஐ’ இவ்விரு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு இறங்குமென நினைத்தோம். திடீரென ‘என்னை அறிந்தால்’ இறுதிக்கட்ட பணிகள் முடியவில்லை என ஒதுங்கி கொண்டது. இப்போது ரேசில் ‘ஐ’, ‘ஆம்பள’ மற்றும் எதிர்பாராத வரவாக ‘டார்லிங்’ இணைந்துள்ளது.இதில் இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கும் படம் ‘ஐ’. விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ளது. பொங்கல் சிறப்பாக திரைக்கு வரவிருப்பதாக இருந்து இடைக்கால தடை என சில காரணங்களால் படம் வெளியாவதில் சற்றே சந்தேகம் தலைதூக்கி, ஒரு வழியாக இப்போது பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படத்திற்காக விக்ரம் தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். ஷங்கரின் பிரமாண்ட காட்சி அமைப்பும், மெனக்கெடலும் டீஸர் மற்றும் டிரெய்லரிலேயே இரு வருடங்களுக்கும் மேலான உழைப்பை எடுத்துக்காட்டும் அளவிற்கு பிரமிப்பை கொடுத்துள்ளது.  

தீபாவளி அன்றே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையாத காரணத்தால் படம் தள்ளிப்போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. படத்தை பார்த்த சென்சார் தரப்பு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். விரைவில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது ’ஐ’, சுமார் 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் 650க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் 3 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகி உள்ளதாம். இதற்கு முன்பு வெளியான ‘கத்தி’, 'லிங்கா’ படங்களும் இதே பாணியில் 3 மணி நேரம் இருந்து, பிறகு நீளம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் படம் என்பதால் படத்தின் கதைக்களமும் , பிரமாண்டமும் 3 மணி நேரத்தை சமாளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் 3 மணி நேரம் 8 நிமிடங்கள் என்பது கண்டிப்பாக மிக நீளபடம் என்பதால் முதல் இரு தினங்களில் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்குத்தான் முழுமையான படத்தை பார்க்கும் வாய்ப்பு இருக்கும். ஒருவேளை நீளம் கருதி ஓரிரு நாட்களில் படத்தை குறைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இப்போதெல்லாம் எப்பேற்பட்ட படமாயினும் 2.30 மணிநேர படங்களையே நீளம் என மக்கள் கருதத் துவங்கியுள்ளதும் இதற்கு ஒரு காரணம். படத்தின் கதை, இதுவாக இருக்கும், அதுவாக இருக்கும் என பலரும் பலவாறு தெரிவித்தாலும், ஷங்கர் என்றால் மிகச் சாதரண கருப்பு பணம் என்ற கதையையே வித்யாச, வித்யாசமான காட்சியமைப்பு, பிரமாண்டம் என மக்களை சீட்டில் கட்டி போடும் அளவிற்கு கை தேர்ந்தவர். எனவே, இந்த படத்திற்கும் இப்போது வரை இதுதான் கதை என கணிக்க முடியாததாகவே இருக்கிறது. ஒரு படத்திற்காக ரசிகர்கள் இரண்டு வருடங்களுக்கும் மேல் காத்திருந்தது மிகச் சில படங்களுக்காகவே இருக்கும். அதில் ‘ஐ’ நிச்சயம் இப்போது முதல் இடம் தான்.

ஆம்பள

பொங்கல் ரேசில் அடுத்து ‘ஆம்பள’. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், வைபவ், சந்தானம், சதீஷ், கிரண், ஐஸ்வர்யா என ஒரு நடிகர்கள் பட்டாளமே கலக்கியுள்ளனர். சுருக்கமாக சொன்னால் பொங்கலுக்கு ஏத்த படம் என்றும் சொல்லலாம். ஏனென்றால் சுந்தர்.சி என்றாலே காமெடிக்கும், கலகலப்புக்கும் பஞ்சம் இருக்காது. ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு படவேலைகளை ஆரம்பிக்கும் விஷால், இந்த படத்தையும் மூன்று மாதங்களில் விரட்டி முடித்துள்ளார். போலீஸ் விஷால், அவருக்கு தம்பிகளாக வைபவ், சதீஷ். அப்பாவாக பிரபு. கட்டினால் அத்தை பெண்களைத்தான் கட்ட வேண்டும் என கட்டளை போடுகிறார். பிறகு என்ன நிகழ்கிறது என்பதே கதை.

கிராமத்திற்கு செல்லும் விஷால், அங்கே போலீஸாக என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வியையும் சற்றே கிளப்புகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டில் விஷால் பேசியபோது  ''முதலில் தலைப்பு பற்றி ஒரு பயம் வந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கும் போது எனக்கு இன்னொரு பயம் இருந்தது. ஏற்கனவே சுந்தர்.சியுடன் இணைந்து நடித்த 'மத கஜ ராஜா' படம் இன்னமும் வெளிவரவில்லை. சினிமாவில் செண்டிமெண்ட் அதிகம். அதனால் பலரும், 'ஏற்கெனவே இப்படி இருக்கும் போது மறுபடியும் சுந்தர்.சியுடன் படம் பண்ணப்போறே?' எனக் கேட்டனர். இருந்தாலும் நான் தெளிவான முடிவில் இருந்தேன். இந்த 'ஆம்பள' லைன் முன்பே சொல்லப்பட்டதுதான்.

சுந்தர்.சிக்கும், எனக்குமான உறவு நன்றாக இருக்கிறது. அது ஒரு சொத்து போன்றது. செப்டம்பர் 20ல் தொடங்கிய படம் டிசம்பர் 26ல் தயாராகி விட்டது. மூன்றே மாதத்தில் முழுப்படமும் முடித்தோம். எல்லாரையும் விரட்டி, விரட்டி வேலை வாங்கினோம். பலரும் எனக்காக கஷ்டப்பட்டு உழைத்தார்கள். நெருக்கடியில் பதற்றத்துடனும், டென்ஷனுடனும் உழைத்திருக்கிறார்கள். இப்படி சிரமப்படுத்தி கஷ்டப்படுத்துவது இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இனியும் ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டு இப்படிச் செய்வது நல்லதல்ல. ஆனாலும் சுந்தர்.சி சார் சீக்கிரம் முடித்தாலும், தரமாகவும் முடித்திருக்கிறார்.

படம் முடிந்துதான் விடுமுறைப் பயணம் போவார்கள். இந்தப் படமே ஜாலியான ஹாலிடே அனுபவமாக இருந்தது. டைரக்டர் அந்த அளவுக்கு டென்ஷன் இல்லாமல் எடுத்தார். இந்தப் படத்துக்கு இசையமைக்க மெட்டுப்போட 2500 ரூபாய்தான் செலவு. ஆர்.ஏ.புரத்தில் தங்கி இதை ஹிப் ஹாப் தமிழா செய்தார். பாங்காக், ஸ்பெயின் எல்லாம் போகவில்லை. பஜ்ஜி, டீ செலவுதான் பெரிய செலவு. இதை வெளியிடும் 'வி' மியூசிக்கில் இதன் 6 பாடல்களும் பெரிய அளவில் வெற்றிபெறும்'' என தனது கருத்துகளை பதிவு செய்தார்.

மேலும், 'என்ன மச்சான் பெரிய படங்கள் வருகிறதே' என தான் கேட்டதற்கு, ‘எவனா இருந்தாலும் வெட்டுவேன்’ என விஷால் பதிலளித்ததாக ஆர்யா கூறியுள்ளார். விஷால் இந்த பொங்கலில் வசூல் கரும்பை வெட்டுவாரா என்பது இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்.

டார்லிங்

‘டார்லிங்’. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்ரம்’ படத்தின் ரீமேக். பொங்கல் ரேசில் திடீரென குதித்த படம். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ் பேசும்போது ''என் தாடியை பார்த்துதான் இப்பட வாய்ப்பு வந்தது என கூறியுள்ளார். அவர் பேசுகையில், 'பென்சில்' படம் 3 மாதங்களாக படப்பிடிப்பு இல்லாததால் சலித்து தாடி விட்டிருந்தேன். என் தாடியைப் பார்த்து இப்பட வாய்ப்பு வந்தது' என பதிவு செய்தார்.

நிக்கி கல்ராணி, ஸ்ருஷ்டி நடிக்கும் இப்படத்தில் நிக்கி பேயாக மிரட்ட இருக்கிறார். ‘டார்லிங்' ட்ரெய்லரை பார்த்து வாழ்த்தி ஏ.ஆர்.ரகுமான் ட்வீட் செய்ததில் இந்திய அளவில் ட்ரண்டில் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தில் ராஜேந்திரனிடம் பேய் ‘ஐயம் கம்மிங் ஃபார் யூ’ என கூற ‘ஐயம் வெயிட்டிங்’ என ‘துப்பாக்கி’ விஜய் டயலாக்குடன் பதில் சொல்ல என இப்போதே டி.வி.க்களில் ’ஐ’, ‘ஆம்பள’  பட ப்ரமோஷன்களை காட்டிலும் பட்டையை கிளப்பி வருகிறது.

சாம் ஆண்டன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படம் வசூலிலும் மை ‘டார்லிங்’ என சொல்ல வைக்குமா என பொருத்திருந்து பார்ப்போம்.

இந்த பொங்கலுக்கு ஆறேழு படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து, மூன்று படங்களாக குறைந்துள்ளது. இந்த மூன்றில் பொங்கல் விருந்து படைக்கப் போவது எந்த படம் என்பது இதோ இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்.

-ஷாலினி நியூட்டன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

[X] Close