Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமர் அக்பர் அந்தோணி - திரை அலசல்

மிடில் க்ளாஸ் குடும்பத்தில் பிறந்து, ஒரே ஏரியாவில் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக சுற்றித்திரியும் மூன்று நண்பர்களின் காதல், கலாட்டா, கிண்டல், சோகம் கலந்த கதை தான் “அமர் அக்பர் அந்தோணி”.

பேங்காக்கிலிருந்து 147 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தாய்லாந்தின் ஒரு பகுதியே பட்டாயா. இளைஞர்கள் சுற்றுலா செல்லத் திட்டமிடும் போது முதலில் அடிபடும் பெயர் இது தான். இரவு வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகக் கழிப்பதற்காகவே உலகச் சுற்றுப்பயணம் செய்யும் இளைஞர்களின் மனதில் இடம்பிடிக்கும் பெயர் பட்டாயா. இங்கு செல்வதற்காக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்கும் மூவரே அமர் (ப்ரித்விராஜ்), அக்பர் (ஜெயசூர்யா), அந்தோணி(இந்திரஜித்).

அமருக்கு மாலில் வேலை, அந்தோணி பிட்சா டெலிவரி செய்கிறவராகவும், அக்பர் லிப்ட் ஆபரேட்டராகவும் வேலைசெய்கிறார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் ஒரே லட்சியம் பட்டாயா செல்வது மட்டுமே.

பணமும் தயாராகி தாய்லாந்து டிக்கெட் வாங்கச் செல்லும் சமயம் ப்ரித்விராஜின் தந்தைக்கு விபத்து நேர்ந்துவிடுகிறது. சேர்த்து வைத்த பணமெல்லாம் மருந்துக்கு செலவாகி மீண்டும் பணம் தயார் செய்யும் வேலையில் இறங்குகிறார்கள். இதற்கு நடுவே ப்ரித்வியின் தங்கையின் மகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு இறந்துவிடுகிறாள். அதைச் செய்தது யாரென்று கண்டுபிடித்தார்களா, அவனுக்குத் தண்டனை கிடைத்ததா என்பதே பட முடிவு.

போலியோ பாதிப்பால், நொண்டி நடக்கும் ஜெயசூர்யா, பெண்களைக் கண்டாலே கண்களை வெளியே தள்ளும் ப்ரித்விராஜ், இந்திரஜித் ஆகிய மூவருமே காமெடியில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

நாயகியாக வரும் நமீதா மீது காதல் கொள்கிறார் ப்ரித்விராஜ், ஆனால் ஜெயசூர்யாவுக்கு ஓகே சொல்கிறார் நமீதா. படமே இந்த மூவரைச் சுற்றித்தான்.

ஜெயசூர்யாவை பக்கத்து ஏரியாக்காரன் அடித்துவிட கோபத்துடன் அடிக்க  ப்ரித்விராஜும், இந்திரஜித்தும் கிளம்புகிறார்கள்.  ஆனால் பைக் ஸ்டார்ட் ஆகாமல் போக இன்னொரு நாள் போய் சண்டை போட்டுக்கலாம் என்று கூறும் காட்சிகள்,  ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வரும் சடாயு சாபுவின் காட்சிகள் என்று சிரிப்பில் அப்லாஸ் அடித்திருக்கிறது படம்.

இந்தக் காலத்து இளைஞர்களுக்கு அவர்களின் சந்தோஷம் மட்டுமே முக்கியம், குடிக்கும், ஃபேஸ்புக்கிற்கும் அடிமையாகும் சமுதாய இளைஞர்களின் சுயநலவாத குணங்களை, இந்த மூவரின் வாயிலாக அழகாகப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர்.

எல்லாம் சரி, படத்தின் நடுவே குழந்தைகள் கடத்தப்படுவது போன்று காட்டுவது, இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதைக் கடைசியில் விளக்குவதெல்லாம் அதே பழைய மசாலா. இருப்பினும் சிறு குழந்தைகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுவதைப் பற்றியான சமுக பிரச்னையை கையாண்டிருந்தாலும் அதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது.

கடைசியாக படத்தில் என்ன சொல்ல வந்திருக்கிறார்கள் என்பதைச் சரியாக கணிக்கமுடியாதது நம்முடைய கெட்ட நேரம். ஆனால் லிட்டில் எண்டர்டெயின்மெண்ட் மட்டும் உறுதி.

இப்படத்தின் இயக்குநரான நாதிர்ஷா தான், இசையமைத்திருக்கிறார். படத்திற்கு ஏற்ற பின்னணி இசை, பக்குவமான ஜான் குட்டியின் எடிட்டிங் என்று படம் ஓகே ரகம்.

பி.எஸ்.முத்து

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close