Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எப்படி இருந்த சென்ஸார் போர்டு இப்போ இப்படி ஆயிடுச்சே!

டிபிகல் சினிமாவிலிருந்து டிஜிட்டலுக்கு மாறிய வளர்ச்சியில் திரைப்பட தணிக்கைக் குழு என்னும் சென்ஸாருக்கும் முக்கியப் பங்குண்டு. ஆனால் காலம் மாற மாற சென்ஸார் கத்தரியும் தன்னை மாற்றிக்கொண்ட வரலாற்றை சினிமாப் பாடல்கள் வழி பார்ப்போமா...

'சுமைதாங்கி' என்ற காலத்தால் மறக்க முடியாத காவியத்தில் ஒரு பாடல். ஆடியோவில் கேட்கும்போது 'எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா?' என்பவர் திரையில் தோன்றும்போது..' எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி?' என்று மாற்றிக் கேட்பார். மாற்றியது சென்ஸார்.  பருவம் என்ற சொல்லே கெட்ட வார்த்தையாய் உலவிய காலம் அது. # எப்பிடி இருந்த நாம... 

சினிமா உலகில் எம்.ஜி.ஆர் என்றால் மரியாதை மட்டுமல்ல. கொஞ்சம் பயமும்கூட. பின்னாளில் வந்த பாடல்களில் சென்ஸார் அவருக்கு ஏகப்பட்ட சுதந்திரம் தந்தாலும், ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கே அதாவது... அவரின் படங்களில் இடம்பெறும் பாடல் வரிகளுக்கு... துணிந்து கத்தரி போட்டது. 'பணம் படைத்தவன்' படத்தில் இடம்பெற்ற அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையைப் புடிச்சான்' என்ற பாடலின் சரணத்தில் எம். ஜி.ஆர் பாடுவதாக வரும் ' அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம்' படத்தில் 'அம்மம்மா என்ன சொல்ல அத்தனையும் கண்டதல்ல' என்று மாற்றப்பட்டிருந்தது. #ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்...   

கறுப்பு வெள்ளை, கலராய் மாறியபின் முதல் மரியாதைக்கு வரலாம். இன்றும் உங்கள் உதடுகளில் உட்கார்ந்திருக்கும் ' அந்த நிலாவத்தான் நான் கைல புடிச்சேன்' பாட்டுல ஒரு வரி. நாயகன் கேட்பார்...' ஓடி வா ஓடப்பக்கம் ஒதுங்கலாம் மெதுவாக' நியாயமா நாயகன் கேட்டதுக்கு நாயகி திரையில் சொல்ற பதில் ' அதுக்குள்ள வேணாமுங்க... ஆளுக வருவாக'. ஆனால் ஆடியோவில்...' மாசத்துல மூணு நாளு பொறுக்கணும் பொதுவாக' என்பார் சைலன்ட்டாக. பெண்களின் மாதவிலக்கு பிரச்னையை சென்ஸார் மைண்டில் வைத்து தூக்கிவிட்டது. #பெண்மையைப் போற்றுவோம்.

வைரமுத்து மறைமுகமா சொன்னதையே மறுக்காம தூக்கின சென்ஸார் பின்னாளில் வாலி சார் பகிரங்கமா கேட்ட ' எப்படி எப்படி சமைஞ்சது எப்படி' க்கு மட்டும் பெர்மிசன் கொடுத்தது. ஆனால் இந்தக் கேள்விக்கான பதில் உடனே கிடைக்கவில்லை. ரொம்பநாள் கழித்து வைரமுத்துவே அதற்கு பதில் சொன்னார். 'ஜேஜே' படத்தில் ஒற்றைப் பாடலுக்கு ரீமாசென் இடுப்பை வளைத்து சொன்ன பதில் இதுதான்.' மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே'. #ரொம்ப  நன்றிங்க மேடம்.

கத்தரி துருப்பிடித்துப் போனது தெரிந்ததும் கவிஞர்கள் துணிவு வந்துவிட்டது. 'மஜா' படத்தின் 'அய்யாரெட்டு நாத்துக்கட்டு' பாட்டின் சரணத்தில் வரும் ' மாசத்துல மூணு நாளு எங்க போயி படுப்பே' என்ற வரியும், 'வாகை சூட வா' படத்தின் 'போறானே' பாடலில் ' உன்னை நானும் பாக்கையிலே ரெண்டாம் முறையா குத்தவெச்சேன்' எனப் பகிரங்க அறிவிப்பாகவே ஆனது. என்னதான் ஆச்சு இந்த சென்ஸாருக்கு என யாரும் கேட்க முடியாமல் நாமும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டபடி இருக்கிறோம்.
 
ஆக... பருவம் என்ற வார்த்தையையே பலி கொடுத்து சின்சியர் காட்டின சென்ஸார் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் தணிக்கைக் கத்தரியின் கூர்மையினை குறைத்துக்கொண்டது காலத்தின் கட்டாயமன்றி வேறென்ன?

- கணேசகுமாரன் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

மீன்களில் எது ருசியானது... தெரிஞ்சுக்கலாமா?
[X] Close