Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சேட் ஜி' பாடலுக்கு எதிர்ப்பு! - யூ டியூபிலிருந்து நீக்கினார் ஹிப்ஹாப் ஆதி

இசையமைப்பாளர்கள் ஹீரோவாக அறிமுகம் ஆகும் தற்போதைய நடப்பு வழக்கத்தில் இருந்து ஒரு படி மேலே போய் ஹீரோ கம் இயக்குநராக அறிமுகமாகிறார் இசையமைப்பாளர் ஆதி. இவர் இயக்கி,இசையமைத்து வெளிவர இருக்கும் "மீசைய முறுக்கு" படத்தின் பாடலான "சேட் ஜீ"யை யூடியூபில் வெளியிட்டிருந்தார். இந்த சிங்கிள் பாடல் வெளியான நாள் முதல் மாஸ் ஹிட் அடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்றது. இதில் யூடியூப் பிரபலங்களான 'டெம்பிள் மங்கீஸ்' ஷாரா, 'ஆர்ஜே'விக்னேஷ் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர். அந்த பாடலுக்கு வட இந்தியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு கருத்தை தெரிவித்ததால் தனது யூடியூப்  பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் ஹிப்ஹாப் ஆதி. 

ஆதி

ஹிப்ஹாப்  ஆதி ஏற்கனவே தமிழகத்தின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டுக்கு ஆதரவாக கடந்த ஜூன் மாதம்  வெளியிட்ட 'டக்கரு டக்கரு' என்கிற பாடல் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. கறவை மாடுகளுக்கான செயற்கை கருவூட்டல் முறையின் பேடன்ட் உரிமையை வெளிநாட்டு நிறுவனங்கள் வைத்துள்ளன. அவர்களின் தூண்டுதல் காரணமாகவே 'ஜல்லிகட்டு'க்கு எதிரான கருத்துக்களும் தடைகளும் உருவாகின்றன என அந்த பாடலில் துணிச்சலாக அரசியல் பேசியிருந்தார். கல்லூரி இளைஞராக இருந்து ஹிப்-ஹாப் இசை மூலம் தமிழர்களின் கவனத்தை பெற்ற ஆதி 'கேரியர்' குறித்தெல்லாம் பெரிதாக யோசிக்காமல் "தமிழ் பண்பாடு, மொழி என துணிச்சலாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பண்பாட்டை இழப்பது சொந்த நாட்டிலேயே அகதி ஆகும் நிலையை உருவாக்கும்" என தன் கருத்தை அந்த பாடலில் தெரிவித்து இருந்தது அந்தசமயத்தில் ஆச்சர்யத்தை அளித்தது . யூடியூபில் வெளியிட்ட கொஞ்ச நாட்களிலே பெரும் வைரல் மெட்டீரியலாக ஆகியது அந்த பாடல். 

ஆதி

அதனைத் தொடர்ந்து தான் இயக்கி, நடித்து வெளியிட இருக்கும் 'மீசையை முறுக்கு' படத்தின் பாடல்  ஒன்றை இரு வாரங்களுக்கு முன் வெளியிட்டார். 'சேட் ஜீ' என்று தொடங்கு அந்தப்பாடலும் அவரது ரசிகர்ளால் வெகுவாக கொண்டாடப்பட்டது. முழுக்க முழுக்க நகைச்சுவை இழையோடும் அந்த பாடலை தமிழ் மக்கள் ரசித்த போதிலும் வடநாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்பான கமென்ட்டுகள் எழுதி வந்தனர். இந்நிலையில் இந்த பாடலை நேற்று தனது யூடியப் தளத்திலிருந்து அப்புறபடுத்தியிருந்தார் ஆதி. இது குறித்து மேலும் விபரம் தெரிந்து கொள்ள அவரது எண்ணுக்கு அழைத்த போது "அவர் முதுகலை தேர்வு எழுத சென்று இருப்பதாகவும் இரண்டு நாட்களில் இது தொடர்பாக கருத்து தெரிவிப்பார்" என்று தெரிவிக்கப்பட்டது. 

மேற்படி பாடலை ஆதி நீக்கிவிட்டாலும் இந்த பாடல் இணையத்தில் வைரலாக பரவிவிட்டது. யூடியூப் இணையத்தளத்தில் நிறைய ரசிகர்கள் தாங்களே இந்த பாடலை ஒலிக்க வைத்து வீடியோ ஏற்றி வந்தனர். தற்போது ஒரிஜினல் பாடல் அதை வெளியிட்ட இசையமைப்பாளரினால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என்பதால்  'ஃபேன் மேட்'  'சேட் ஜீ' வீடியோக்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. 

இந்த பாடல் வெளியிடப்பட்ட சிலமணிநேரங்களில் 'எந்திரன்2.0' படப்பிடிப்பில் இருக்கும் இயக்குநர் ஷங்கர் "படப்பிடிப்பு கொடுக்கும் ப்ரஷரில் இருந்து மீண்டு வர இந்த பாடல் உதவியது" என ஆதிக்கு வாழ்த்து சொல்லி ட்விட் எழுதியது குறிப்பிடத்தக்கது.  

                                                                                                                                                                                                                             

-வரவனை செந்தில் 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close