Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நள்ளிரவு 11.45 முதல் அதிகாலை 3 மணி வரை… கமல் வீட்டில் தீ பிடித்தபோது நடந்தது என்ன?

ஈ.சி.ஆரில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த கமல்ஹாசன், விபத்தில் இருந்து பத்திரமாக வெளியேறியிருக்கிறார். விபத்தின் தன்மை குறித்தும், காரணம் குறித்தும் அவரது உதவியாளர் மூர்த்தி என்பவரிடம் பேசினேன். நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நேற்று நள்ளிரவு நடந்தது இதுதான். 

கமல்ஹாசன்

நள்ளிரவு 11.45 மணி :

சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் இருக்கிறது கமல்ஹாசனின் வீடு. விபத்து நடந்த இடமும் இதுதான். தோராயமாக, நள்ளிரவு 11.30 மணிக்கு கமல்ஹாசனின் வீட்டில் மின்கசிவு அல்லது உயர்மின் அழுத்தம் காரணமாக அவரது வீட்டில் இருந்த ஃபிரிட்ஜ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருக்கிறது. சிறிய அளவில் எரியத் துவங்கிய தீ என்பதால், உடனடியாக பாதுகாவலர்களின் கவனத்துக்கு வரவில்லை.

நள்ளிரவு 12.10 மணி :

கொஞ்சம் கொஞ்சமாக தீ பரவியிருக்கிறது. அப்போது வீட்டிற்குள் பயங்கர சத்தத்துடன் ஏதோ ஒன்று வெடிக்கவே, கமல்ஹாசனின் உதவிக்காக எப்போதும் வாசலில் இருக்கும் செக்யூரிட்டிகளில் ஒருவர் பதறிப்போய் மெயின் கேட்டில் இருக்கும் மற்றொரு செக்யூரிட்டியிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். இருவரும் இணைந்து, ஜன்னல் கண்ணாடி வழியாகப் பார்த்திருக்கிறார்கள். தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவே, உடனடியாகக் கதவைத் திறந்து உள்ளே சென்றிருக்கிறார்கள்.

நள்ளிரவு 12.15 மணி :

வீட்டின் தரைத் தளத்தில் இருந்த ஃபிரிட்ஜ் வெடித்து, வீடு முழுக்கப் புகை பரவியிருக்கிறது. உடனடியாக, நடிகர் கமல்ஹாசன் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்று விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். கீழே கிளம்பிய புகை அத்தனை அறைகளுக்கும் பரவி இருந்திருக்கிறது. எனவே, தரைத்தளம் வழியாக வெளியேற வேண்டாம் எனவும், மேல்மாடிக்குச் செல்லுமாறும், நடிகர் கமல்ஹாசனிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள். உடனே அவர் புகை மூட்டத்திற்குள்ளேயே நடந்து, மூன்றாவது மாடியை அடைந்திருக்கிறார்.

கமல்

நள்ளிரவு 12.20 மணி :

மூன்றாவது மாடிக்குச் சென்ற கமல்ஹாசன், அங்கிருந்து ஏணி உதவியுடன் கீழே இறங்கி இருக்கிறார். மூன்று தளங்களும் புகையால் சூழ்ந்திருந்த காரணத்தினால், புகையைச் சுவாசித்துச் சிரமப்பட்டிருக்கிறார் கமல். பிறகு விபத்தின் தன்மையை தனது உதவியாளர்களிடம் கேட்டறிந்த கமல், சிறிது நேர ஓய்விற்குப் பிறகு தனது காரில் கிளம்பி, ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு வந்தடைந்திருக்கிறார்.

நள்ளிரவு 1 மணி :

தீயணைக்கும் படையின் வண்டி, நடிகர் கமல்ஹாசனின் ஈ.சி.ஆர் வீட்டிற்கு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் கமல்ஹாசனின் உடற்பயிற்சிக்கூடம் இருக்கிறது. அறையின் ஃபிரிட்ஜ், ஏ.சி,  அரிய புத்தகங்கள் அடங்கிய நூலகம், எனப் பல இடங்களுக்கும் பரவியிருந்த தீயை தீ அணைப்புத் துறையினர் அணைக்கிறார்கள். நிலைமை சீராகிறது.

அதிகாலை 3 மணி :

இந்த விபத்தின் தன்மை குறித்து, ‘என் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளேன். நுரையீரல் முழுக்க புகையுடன் மூன்றாவது மாடியில் இருந்து இறங்கினேன். இப்போது நலமாக இருக்கிறேன். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனக்கு உதவிய என் உதவியாளர்களுக்கும், அக்கறையுடன் விசாரித்தவர்களின் அன்புக்கும் நன்றி!’ என டிவிட்டரில் பதிவு செய்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

- கே.ஜி.மணிகண்டன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close