Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லோக்கல் சேனலில் `பாகுபலி - 2' ... தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

`திரைக்கு வந்து சில வாரங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம், உங்கள் தொலைக்காட்சியில்...’ என எந்த விளம்பரமும் இல்லாமல் புதிய படங்கள் உள்ளூர் சேனல்களில் ஒளிபரப்பப்படுவது, படத் தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் திரைக்கு வந்த `பாகுபலி -2’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் வசூலில் தேசிய அளவிலான சாதனை படைத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க... இன்னொரு பக்கம், அந்தத் திடைப்படத்துக்கான நெருக்கடிகளும் கூடிக்கொண்டே வருகின்றன. `பாகுபலி-2’ வெளியான அன்றே இணையதளத்தில் தியேட்டர் பிரின்ட் வெளியானது. இருப்பினும் தியேட்டரில் கூட்டம் குறையவில்லை. ஆகையால், `பாகுபலி-2’ தயாரிப்புக்குழு இதுகுறித்துக் கவலைப்படவில்லை.

கடந்த 7-ம் தேதி, `பாகுபலி-2’ ஹெச்.டி பிரின்ட் டோரென்ட் தளத்தில் வெளிவந்தது. இந்த ஹெச்.டி பிரின்ட் படத்தை, ஹோம் தியேட்டர் புரஜெக்டர் மூலம் தியேட்டர் எஃபெக்ட்டுடன் பார்க்கலாம் என்பதால், படத் தயாரிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால்தான் `பாகுபலி’ படக்குழு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் முறையிட்டது. அதன் பிறகுதான், நடிகர் விஷால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

புகார் கொடுத்த அன்று இரவு, திருச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் கிங் டிவி எனும் உள்ளூர் தொலைக்காட்சியில் `பாகுபலி-2’ ஒளிபரப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து கோவை சூழூரைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர், `புதிய திரைப்படங்களை கேபிள் டிவி-யில் ஒளிபரப்பும் உரிமையை தான் பெற்றுள்ளதாகவும், ஆனால் ,தன் அனுமதிபெறாமல் `தர்மதுரை’ உள்ளிட்ட திரைப்படங்களை லோக்கல் சேனல்களில் வெளியிடப்படுவதாகவும்’ சென்னை திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், திருச்சி மேலப்புதூரில் உள்ள கிங் டிவி அலுவலகத்தில் திருச்சி திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தரசு, எஸ்.ஐ. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார் சோதனை நடத்தினர்.

பாகுபலி

சோதனையில், பதிப்புரிமை வாங்காமல் `பாகுபலி’, `தர்மதுரை’, `மனிதன்’ போன்ற புதிய படங்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்திருப்பது  தெரியவந்தது. இதையடுத்து, கிங் உள்ளூர் தொலைக்காட்சியின் ஆபரேட்டர் அருண்குமாரைக் கைதுசெய்ததோடு, அங்கு இருந்த கம்ப்யூட்டர் மற்றும் சேனல் ஒளிபரப்புச் சாதனங்களை போலீஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட அருண்குமார் மற்றும் கிங் டிவி உரிமையாளரான தஞ்சாவூரைச் சேர்ந்த வாசிம்ராஜா உள்ளிட்டோர் மீது, கேபிள் தொலைக்காட்சி பதிவுச்சட்டம் 1995, பதிப்புரிமைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். சேனல் உரிமையாளர் வாசிம்ராஜா, தற்போது தலைமறைவாக உள்ளதால் போலீஸார் அவரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

“இரண்டு தினங்களுக்கு முன், அந்தத் தொலைக்காட்சியில் `பாகுபலி-2’ திரைப்படம் ஒளிபரப்பான தகவல் கிடைத்ததும், சென்னையில் புகார் கொடுத்தோம். அதற்குப் பிறகுதான் திருச்சி போலீஸார் அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள். `பாகுபாலி' திரைப்படம் வெளியானதை, போலீஸார் மறைக்கிறார்கள். `தர்மதுரை’ திரைப்படத்தைப் பலமுறை லோக்கல் சேனல்களில் ஒளிபரப்பியுள்ளன. ஆனால், போலீஸார் இப்போதுதான் நடவடிக்கை எடுக்கிறார்கள். அதிலும் இரண்டு நாள் முடக்கப்பட்ட அந்தச் சேனல், தன் ஒளிபரப்பை மீண்டும் தொடங்கிவிட்டது. இதன் பின்னணி என்ன?

கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்ய வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, `லோக்கல் சேனல்களில் செய்திகள் வெளியிடக் கூடாது’ என உத்தரவிட்டார். ஆனால், இப்போது நிலைமையே வேறு. உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்திகள், வேறு வடிவில் ஒளிபரப்பப்படுகிறது. லோக்கல் சேனல்கள், இணையதளத்தில் படம் வெளியான உடனேயே வெளியிடுகிறார்கள். ஏற்கெனவே திருட்டு விசிடியால் சினிமா தொழில் நலிவடைந்த நிலையில் உள்ளது. இப்போது, இணையதளங்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இப்போது உள்ளூர் சேனல்களும் இணைந்திருப்பதுதான் திரையுலகின் எதிர்காலத்தையே இருட்டடிப்பு செய்துவிட்டது. இவற்றைக் கண்காணிக்கும் அதிகாரிகள், நேர்மையாகயும் தைரியமாகவும் செயல்படாதவரை, இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது” என்றனர் சினிமா தயாரிப்பாளர்கள்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close