Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பல்கேரியா டூ பல்லடம் - அஜித் பட ஒளிப்பதிவாளரின் அசல் முகம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ச.ஜெயந்தி தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் ஆர்வத்துடன் கிளம்பி வந்திருந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியரோ உடுமலையில் நடைபெற்ற வேறு ஒரு நிகழ்வுக்கு சென்றுவிட்டார். விவசாயிகளை வரச் சொல்லிவிட்டு வேறு ஒரு நிகழ்வுக்கு ஆட்சியர் சென்றுவிட்டதால், விரக்தியடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் துவங்கிவிட்டனர். அப்போது பச்சைத் துண்டு அணிந்துகொண்டு கூட்டத்தில் ஒருவராய் மும்முரமாக முழங்கிக்கொண்டு இருந்தார். அவர் திரைப்பட ஒளிப்பதிவாளர் வெற்றி.

அஜித் பட ஒளிப்பதிவாளர்

வேங்கை, வீரம்,வேதாளம் என பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கும், தெலுங்கு படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். அஜித் - சிவா கூட்டணியில் அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் "விவேகம்" திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே.

பல்கேரியா உட்பட ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற "விவேகம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், தன் சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் நாதகவுண்டன்பாளையம் கிராமத்துக்கு வந்து, விவசாய வேலைகளிலும், விவசாயம் சம்பந்தப்பட்ட போராட்டங்களிலும் சத்தமில்லாமல் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறார். ‘ஏர்முனை இளைஞர் அணி’ என்ற விவசாய அமைப்பை உருவாக்கி, விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல்கொடுத்து வரும் இவர், 
கொங்கு வட்டார விவசாயிகளுக்கு மிக முக்கிய தலைவராக திகழ்ந்த என்.எஸ்.பழனிச்சாமி ஐயாவின் மகன் என்பது குறிப்பிடத் தக்கது.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தை முடித்துவிட்டு, நம்மிடம் பேச அமர்ந்தார் வெற்றி.
"நம்ம ஏரியாவே விவசாயம் தானுங்க பாஸ். சினிமா எல்லாம் அதுக்கு அப்புறம்தான்... நான் சிறுவனாக இருக்கும்போது, கோயம்புத்தூரில் கல்லூரி ஒன்றில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வந்த என் தந்தை பழனிச்சாமி, விவசாயிகளின் காவலர் என போற்றப்படும் நாராயணசாமி நாயுடு ஐயாவின் மீது இருந்த ஈடுபாட்டால், கல்லூரி வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு, விவசாயத்தில் முழு கவனத்தையும் செலுத்தினார். தொடர்ந்து விவசாயத்தையும், விவசாயப் போராட்டங்களையும் முன்னெடுத்து நடத்தி வந்தவர், வயது முதிர்ச்சியடைந்தபோதும் விவசாயப் போராட்டங்களிலிருந்து விலகியிருக்கவில்லை.

என்னுடைய குடும்பத் தொழில் விவசாயமாக  இருந்தாலும், திரைப்படங்களின்மீது ஏற்பட்ட தாக்கத்தால் பள்ளிப் படிப்பை முடித்தகையோடு சென்னைக்கு வந்துவிட்டேன். திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு எந்த ஒரு மாற்று சிந்தனையும் இல்லாமல் தமிழ், தெலுங்கு என தொடர்ந்து  திரைப்படங்களில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, கடந்த வருடம் நிகழ்ந்த என் தந்தையின் மரணம் என்னைத் தூக்கிவாரிப்போட்டது. அதுவரையிலும் விவசாயத்தின்மீது பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்த நான், அதன் பிறகு தான் விவசாயத்தின் தேவையை முழுமையாக உணரத் தொடங்கினேன். நமக்கு வேறு தொழில் இருக்கிறதே என்று நினைக்காமல் என் குடும்பத்தில் அடுத்த தலைமுறையாக நானும் விவசாயத்தைத் தொடர வேண்டும் என்று அப்போதுதான் தீர்மானித்தேன்.”

விவசாய போராட்டங்களில் எப்படி ஆர்வம் வந்தது?

“நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தானே. எங்கள் பகுதிகளில் விவசாயம்தான் பிரதான தொழில். என் தந்தை உள்பட இங்கு விவசாயம் செய்தவர்களும், விவசாயத்தின்மீது அக்கறைகொண்டவர்களும் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் விவசாயத்துக்காக தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் வழி வந்தவன், என்னுடைய விவசாயத்தை நான் தொலைத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றால், நானும் போராடித்தான் ஆக வேண்டும். இந்த நாட்டில் விவசாயிகள் எப்போதுமே போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும்போது, எனக்கு மட்டும் என்ன விதிவிலக்கு?”

ஏர்முனை இளைஞர் அணி பற்றி...

அஜித் பட ஒளிப்பதிவாளர்“‘இன்றைய காலகட்டத்தில் தினம் ஒரு பிரச்னை விவசாயிகளின் தலையில்தான் வந்து விழுகிறது. இன்றைக்கு இருக்கக்கூடிய பெரும்பாலான விவசாய சங்கங்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் இருக்கின்றனர். விவசாய குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் நாங்கள் வெவ்வேறு தொழில்களுக்கும், வெளிநாடுகளில் வேறு வேலைகளுக்கும் சென்றுவிட்டோம். இப்போது விவசாயிகளுக்குப் பிரச்னையென்றால் போராடுவதற்கு இளைஞர்கள் இங்கு யாரும் இல்லை. இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு. விவசாயத்தில் கவனம் செலுத்தவும், விவசாயப் பிரச்னைகளுக்குப் போராடவும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் ‘ஏர்முனை இளைஞர் அணி’யை உருவாக்கினோம்.

இதில் உள்ளவர்கள் அனைவரும் விவசாயத்தின்மீது அக்கறை கொண்டவர்கள். தொழில் நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தாலும், விவசாய பிரச்னைகளுக்காக ஒன்றுகூடுவது என்று முடிவெடுத்து செயல்பட்டு வருகிறோம். என்னைப்போன்று ஆளுக்கொரு மூலையில் இருக்கும் இளைஞர்களை ஒருங்கிணைக்க முதலில் "வாட்ஸ் -அப்” குரூப்களை உருவாக்கினோம். அதன்மூலம் முன்பின் அறிமுகமில்லாத விவசாயத்தின்மீது பற்றுள்ள இளைஞர்கள் பலரும் இந்த அமைப்பில் இணைந்தனர். சாதி, மத, அரசியல் சார்பற்ற அமைப்பாகத்தான் இதை உருவாக்கியிருக்கிறோம். அதில் தெளிவாகவும் இருக்கிறோம்.”

இளைஞர்களை இணைத்து இதுவரை என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?

“விவசாயிகளின் வளர்ச்சிக்கு உழவர் சந்தை மிக முக்கியக் காரணியாக இருக்கிறது. அதிகாலை 3 மணிக்குள் உழவர் சந்தையை அடைந்தால்தான் விவசாயிகள் தாங்கள் கொண்டு செல்லும் காய்கறிகளை அங்கு விற்றுத் தீர்க்க முடியும். ஆனால் எங்கள் சுற்றுவட்டார விவசாய கிராமங்களுக்கு அதிகாலை பேருந்து போக்குவரத்து என்பது நீண்ட நாள்களாக இல்லாமல் இருந்தது. இதனால் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சிறு விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை உழவர் சந்தைக்கு எடுத்துச் செல்லமுடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். எனவே, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாங்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் பயனாய் எங்கள் பகுதிகளுக்கு மீண்டும் அதிகாலை பேருந்து போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உழவர் சந்தைக்கு செல்வதற்கே இப்படி சிக்கல் இருக்கும்பட்சத்தில், உழவர் சந்தைக்குள் நடக்கும் செயல்பாடுகள் மேலும் விவசாயிகளை வாட்டிவதைக்கிறது.

அஜித் பட ஒளிப்பதிவாளர் வெற்றி போராட்டம்

அரசு விதிகளின்படி உழவர் சந்தை அமைந்துள்ள இடத்திலிருந்து 300 மீட்டருக்கு மற்ற காய்கறி வியாபாரிகளின் கடைகள் இருக்கக்கூடாது. ஆனால் திருப்பூரில் அமைந்துள்ள வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தைகளில் உழவர்களைவிட வியாபாரிகளின் ஆதிக்கமே அதிகளவில் இருந்து வந்தது. மேலும், தங்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் கமிஷன் தொகையை நிர்ணயிக்கும் ஏஜெண்டுகளால் உழவர்கள் தாங்கள் கொண்டுவரும் காய்கறிகளை முழுமையாக விற்க முடியாத நிலையும் நீடித்தது. எங்களின் முயற்சியால் பல ஆண்டுகளாக இருந்துவந்த இந்த பிரச்னை தற்போது முடிவை எட்டியிருக்கிறது.  இளைஞர்கள் நாங்கள் ஒன்றிணைந்த மிகக் குறுகிய காலத்திலேயே இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறோம். ஆனால் தீர்வு காணப்பட வேண்டிய விவசாயப் பிரச்னைகள் இன்னும் நிறைய இருக்கின்றன.

வாழவழியின்றி தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கும், தண்ணீரின்றி நிலத்தில் கருகிப்போன பயிர்களுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வழியுறுத்தி ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். நாங்கள் வசிக்கும் பல்லடம், காங்கேயம், உடுமலை, பொள்ளாச்சி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை விவசாயம்தான் அதிகளவில் நடைபெறுகிறது. ஆனால் தேங்காயின் விலையோ தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. காங்கேயம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் ஒரு சில எண்ணெய் நிறுவனங்கள் அதிகளவில் பாமாயில் கலப்படத்தை செய்து வருவது இதற்கு மிகமுக்கியக் காரணம். அதற்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி, மாடுகளுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்க கெமிக்கல் மருந்துகளைப் பயன்படுத்தாமல், ஐயா நம்மாழ்வாரின் அறிவுரைகளின்படி, நம் தோட்டத்தில் விளையும் செடிகளைக் கொண்டே, விவசாய கால்நடைகளின் நோய்களைத் தீர்க்கும்  இயற்கை மருத்துவம் தொடர்பான கருத்தரங்கை நடத்த இருக்கிறோம். இளைஞர்களைத் திரட்டி வேலிகாத்தான் மரங்களை அகற்றுவது, அரசின் திட்டங்களைப் பற்றி தெரிந்திருக்காத விவசாயிகளுக்கு அத்திட்டத்தின் பயனைக் கொண்டுபோய் சேர்ப்பது, விவசாயக் கடனை முன்னின்று பெற்றுத்தருவது, பாரம்பர்ய கால்நடைகள் வளர்ப்பு பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்துவது என தொடர்ந்து நிறைய செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.

மேலும், அரசியல் நோக்கமற்ற இந்த அமைப்பை எங்கள் ஊரோடு நிறுத்திக்கொள்ளாமல், விவசாயத்தின்மீது அக்கறை இருந்தும் வேறுவழியின்றி நகரங்களில் பிழைப்பை நடத்தும் இளைஞர்களை ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு எங்கு பிரச்னை நடந்தாலும் அங்கு 50 இளைஞர்கள் விவசாயிகளுக்காக கரம்கோர்த்து நிற்கும் நிலையை நாங்கள் உருவாக்குவோம்” என்றார் தீர்க்கமாக.

விவசாயத்தின் மீதான இவரது எண்ணமும், ஈடுபாடும்கூட விவேகத்துடனே இருக்கிறது.... 

விவசாயி வெற்றிக்கு வாழ்த்துகள்!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close