Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

``அரசு மானியம், தயாரிப்பாளரின் சமாதிக்குச் சுண்ணாம்பு அடிக்கக்கூட உதவாது!'' - கொதிக்கும் சங்ககிரி ராச்குமார் #TNFilmawards

சிறு பட்ஜெட் படங்களை ஊக்கப்படுத்தும் வகையில், திரைப்பட மானியங்களை வழங்கிவருகிறது தமிழக அரசு. 'குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும், நல்ல கருத்துகளைச் சொல்லும்விதமாக இருக்க வேண்டும், குறைந்த திரையரங்குகளில் திரையிடப்பட்டிருக்கவேண்டும்' என ஏராளமான நிபந்தனைகளுடன் வழங்கப்படும் இந்த மானியத்தின் மதிப்பு, ஏழு லட்சம் ரூபாய். சிறு பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்குப் பெருமகிழ்வைத் தரும் இந்த மானிய அறிவிப்புகள், திரைப்பட விருதுகளோடு மிக மிகத் தாமதமாகவே அறிவிக்கப்பட்டது. இதில் என்ன பிரச்னை என்கிறீர்களா?

`ஆடுகளம்', `அவள் பெயர் தமிழரசி', `தென்மேற்குப் பருவக்காற்று', `அழகர்சாமியின் குதிரை' எனப் பல நல்ல படங்கள் தமிழக அரசு வழங்கிய திரைப்பட விருதுகள் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டிருந்தன. குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்கு மானியம் வழங்குவதிலும் அதே பாரபட்சம், அரசியல், ஒரு சார்பு நிலை... எல்லாம் எதிரொலித்திருக்கின்றன.

மிக மிகக் குறைந்த பட்ஜெட்டில் வெளியான படம் `வெங்காயம்'. நரபலிக்கு எதிராக, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளைத் துணிச்சலாகப் பதிவு செய்த படம். தவிர, ஒட்டுமொத்தத் திரை உலகமே இந்தப் படத்தைப் பார்த்துப் பாராட்டிப் பேசிய நிகழ்வு, இயக்குநர் சேரனின் முயற்சியில் நடந்தது. அனைத்து மக்களுக்கும் இந்தப் படம் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தில் `ரீ-ரிலீஸ்' செய்தார் இயக்குநர் சேரன். `குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, அதிக திரையரங்குகளில் வெளியாகாத, நல்ல கருத்துக்களைச் சொல்லக்கூடிய...' என மானியம் பெறுவதற்கு அரசு பாடும் அத்தனை ராகங்களும் இந்தப் படத்தில் இருக்கின்றன. ஆனால், மானியம் பெறுவதற்கான பட்டியலில் இந்தப் படம் இல்லை. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல நல்ல படங்களும் இல்லை!

தன் படத்துக்கு மானியம் கிடைக்காத ஆதங்கத்தை முகநூலில் பதிவுசெய்துள்ள `வெங்காயம்' படத்தின் இயக்குநர் சங்ககிரி ராச்குமாரிடம் பேசினேன். 

சங்ககிரி ராஜ்குமார் அரசு மானியம் குறித்து

``விருதுகளுக்காக எந்த இயக்குநரும் படம் எடுக்கிறது கிடையாது. ஒரு படைப்பாளி, தன் படங்களுக்கு விருதுகளை எதிர்பார்த்துக்கிட்டும் இருக்க முடியாது. ஏன்னா, இங்கே விருதுகளில் அரசியல் இருக்கு. `வெங்காயம்' படத்துக்கு நிச்சயம் மானியம் கிடைக்கும்னு நம்பினேன். விருதுகள் கொடுத்ததுல இல்லாத நேர்மை, மானியம் வழங்குவதில் இருக்கும்னு நினைச்சேன். இல்லை. `வெங்காயம்' எடுக்கும்போதே மனரீதியாகவும் பணரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். இது, அதைவிடப் பெரிய பாதிப்பா இருக்கு. உலகில் யாரும் பண்ணாத முயற்சியா, ஒரு திரைப்படத்தின் ஒட்டுமொத்தப் பணிகளையும் நான் மட்டுமே பண்ணி, `ஒன்' என்கிற ஒரு படத்தை உருவாக்கியிருக்கேன். பல மலைக்கிராமங்களுக்குப் பயணப்பட்டு, பழங்குடி மக்களின் வாழ்க்கையைப் பதிவுபண்ணி `நெடுப்பா' என்ற மற்றொரு படத்தையும் இயக்கியிருக்கேன். ரெண்டு படங்களும் பொருளாதாரப் பிரச்னையால நிற்குது. என் `வெங்காயம்' படத்துக்குக் கிடைக்கும் மானியத்தை வெச்சு, இந்த ரெண்டு படங்களையும் வெளியிடும் முயற்சிகளை எடுக்கலாம்னு இருந்தேன். முடியலை'' என்றவரிடம் சில கேள்விகள்.

``ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் பாராட்டிய படம், குறைந்த பட்ஜெட், குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் வெளியான படம்... என மானியம் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் இருந்தும் ஏன் மானியம் வழங்கலைனு கேட்டீங்களா?"

``கேட்கிறதுக்கு என்ன இருக்கு?  நான் போய்க் கேட்டா, `புள்ளி வெக்கலை, கமா இல்லை'னு வழக்கமான காரணத்தைத்தான் சொல்லப்போறாங்க. அரசு தர்ற மானியம் சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களின் சமாதிக்குச் சுண்ணாம்பு அடிக்கக்கூட உதவாது. அதனால, கொடுக்காமப்போறது பிரச்னை இல்லை. என் படம் புறக்கணிக்கப்பட்டிருக்கு. அதுதான் மிகுந்த வலியையும் மன உளைச்சலையும் கொடுக்குது.''

சங்ககிரி ராஜ்குமார்

``தகுதியான படங்களைப் பரிந்துரை செய்வது, மானியம் பெறுவதற்கான வழிகளைக் கற்றுத்தருவது மாதிரியான வேலைகளைத் தமிழ் சினிமா சங்கங்கள் சக நண்பர்களுக்குச் சொல்லித்தர்றாங்களா?"

``இல்லை. அதற்கான வழிகாட்டுதலும் குறைவுதான். தவிர, மானிய அறிவிப்பே தினசரிகளில் எங்கோ ஒரு மூலையில் சின்னக் கட்டத்துக்குள் விளம்பரமா வரும். நாம பார்க்க மறந்துட்டா, நண்பர்கள் மற்றும் சக திரைப்படக் கலைஞர்கள் சொன்னா மட்டும்தான் தெரியும். மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் தெரியாத காரணத்தால் பலரும் அதை விட்டுடுறாங்க. இதற்குச் சரியான வழிகாட்டுதல் நிச்சயம் தேவை.''

``மிக மிக காலதாமதமான விருதுகள் மற்றும் மானிய அறிவிப்பு, திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரி, ரிலீஸ் செய்வதில் இருக்கும் பிரச்னை... என சமீபகாலமாகத் தமிழ் சினிமாவுக்கு விழும் அடுத்தடுத்த அடிகளை எப்படி எடுத்துக்கிறீங்க?"

``தற்போதைய சினிமா, மிக மிக மோசமான சூழல்ல இருக்கு. எத்தனையோ சிறு பட்ஜெட் படங்களோட தயாரிப்பாளர்கள் வந்துட்டு காணாமப்போயிட்டாங்க. திரையரங்குகளை மட்டுமே நம்பி இனி இயங்க முடியாது. அதற்குத்தான் அண்ணன் சேரன் `சி2ஹெச்' தொடங்கினார். ஆனா, அவர் என்னமோ கோடிக்கோடியா சம்பாதிச்சு வாழ்ந்துடப்போறது மாதிரி... யாரும் அதை சீரியஸா அணுகாம விட்டுட்டாங்க. அவரோட அந்த முயற்சி, இப்போ அவசியம் ஆகிடுச்சு. `டிடிஹெச் முறையில் திரைப்படத்தை வெளியிடலாம்'னு கமல் சொன்னப்போ, எல்லோரும் உதாசீனப்படுத்தினாங்க. இப்போ அதுவும் அவசியம்னு தோணுது. சும்மா சொல்லலை, ஊர்ப்பக்கம் `காப்பித்தூள் வாங்கிட்டு வா, டீத்தூள் வாங்கிட்டு வா'னு சொல்ற மாதிரி, `புதுப்படம் ஏதாச்சும் இருந்தா பென்-டிரைவ்ல ஏத்திக்கொடு'னு சொல்றாங்க. `மொபைல்ல புதுப்படம் வெச்சிருந்தா, டிரான்ஸ்ஃபர் பண்ணிக்குடு'னு சாதாரணமா கேட்கிறாங்க. ஒரு மொபைல் அப்ளிகேஷன், படத்துக்கு பத்து ரூபாய்னு விலையை நிர்ணயிச்சாலே... சிறு பட்ஜெட் படங்கள் எளிமையா மக்களைச் சென்றடையும். அதற்கான வழிகளை நோக்கி தமிழ் சினிமா போகணும். இல்லைன்னா, புது வழியை உருவாக்கணும்!''

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close