Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கதையில ஒரு முக்கியமான ட்ரீட்மென்ட் இருக்கு!

மிழ் சினிமாக்களில் எப்படியெல்லாம் விதவிதமான வியாதிகள் வந்திருக்கின்றன என்பதை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரை. படித்து முடித்ததும் நீங்களே ஒரு பேஷன்ட் போல ஃபீல் பண்ணினால், கம்பெனி பொறுப்பல்ல.

'ரத்தக்கண்ணீர்’ படத்தில் தொழுநோய், 'பாலும் பழமும்’ படத்தில் காசநோய் எனப்படும் டி.பி. என அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தமிழ் சினிமாவில் நோய்கள் இருந்தன. ஆனால், எப்படித்தான் இந்த கேன்சர், தமிழ் சினிமாக்காரர்கள் கையில் சிக்கியதோ தெரியவில்லை, கேன்சர் வந்தால் செல்கள் ஒன்று, பத்து, நூறாக, பல்கிப் பெருகுவதைப்போல, கேன்சர் படங்களும் கூட்டம் கூட்டமாக வந்தன.

'நெஞ்சில் ஓர் ஆலயம்,’ 'வாழ்வே மாயம்’, 'பயணங்கள் முடிவதில்லை,’ 'ஒருதலை ராகம்’, 'நினைத்தாலே இனிக்கும்’ என கொள்ளைப் படங்களுக்கு கேன்சர்தான் மெயின் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட். இவை ஹீரோக்கள் ரத்தம் கக்கிச் சாவதைப்போல மோடிமஸ்தான் வித்தையைக் காட்டிய பெருமைகொண்ட அக்மார்க் கேன்சர் படங்கள். அதன் பிறகு சோன்பப்டி தாடி வளர்த்து சோக ராகம் பாடி பல வருடங்கள் இம்சித்தார்கள். 'ஏன் லேடீஸுக்கு மட்டும் கேன்சர் வராதா?’னு ஒரு கூட்டம் போர்க் கொடி தூக்க... ஒரு சேஞ்சுக்கு 'பாலைவனச்சோலைகள்’ படத்தில் சுஹாசினி கண்கள் இடுக்கி 'ஹிஹிஹி’ என சிரித்தபடியே வந்தார். அப்படி வந்தால் செகண்ட் ஆஃப்பில் நோய் வந்துவிடும் என்பது எழுதப்படாத சினிமா விதி. அதன் பிறகு அந்த 'ஹிஹிஹி’ குறும்புக் குற்றால ஹீரோயின் அப்பாவி ஹீரோவை ஃபீல் பண்ணவைத்து செத்துப்போவது செம ஹிட் ஃபார்முலாவானது. இதில் உச்சம் தொட்டது, மணிரத்னத்தின் 'இதயத்தைத் திருடாதே.’

ஒரு கட்டத்தில் கேன்சர் அலுத்துப்போக, புதிதாய் ஒரு நோயைக் கண்டுபிடிக்க வேண்டிய காலகட்டமும் வந்தது. அப்போது நம் இயக்குநர்களின் மூளையில் உதித்ததுதான் 'ப்ரெய்ன் ட்யூமர்’. அதாகப்பட்டது மூளையில் கட்டி. அப்புறம் என்ன ஹீரோயின்களில் பலர் இந்த ப்ரெய்ன் ட்யூமரில் டோமரானார்கள். 'நினைவே ஒரு சங்கீதம்’ ராதா, 'பூவே பூச்சூடவா’ நதியா, 'கேளடி கண்மணி’ அஞ்சு என ஹிட் ஹிஸ்டரி நீ...ண்...ட...து. மூளைன்னு ஒண்ணு இருந்தா மனசுன்னு ஒண்ணு இருக்காதா, யெஸ், வரிசையாக மனநோய் சினிமாக்கள் வர ஆரம்பித்தன.

மனச்சிதைவு, மனப்பிறழ்வு நோய் போன்றவை எல்லாம் 'அக்னி சாட்சி’ சரிதாவில் ஆரம்பிக்கப்பட்டதாய் நினைச்சீங்கன்னா ரொம்பத் தப்பு யுவர் ஆனர்... ரொம்பத் தப்பு. இதெல்லாம் பல சிவாஜி படங்களில் இன்ன நோய் எனத் தெரியாமல் அவரே நடித்து இருப்பார். சந்தேகம் என்றால் 'கைவீசம்மா கைவீசு...’ 'பாசமலர்’ பாட்டை ஒருவாட்டி ரீவைண்ட் பண்ணி ஓட்டுங்க. 'புதிய பறவை’ சிவாஜியின் 'இதெல்லாம் நடிப்பா?’ என்பதை மனசுக்குள் பத்து வாட்டி சொல்லிப் பாருங்க.

தலையில் அடிபட்டதும் நினைவு தப்பிப்போவதும் திருப்பி அடிபட்டதும் நினைவு திரும்புவதுமாய் வினோத மெடிக்கல் மிராக்கிள்களும் தமிழ்ப் படங்களில் உண்டு. சுந்தர்.சி-யின் காமெடி படங்களில் உருட்டைக்கட்டையால் யாரோ யாரையோ அடித்து நினைவு தப்பவைத்து யாரையாவது கடத்துவது வழக்கம். உண்மையில் உருட்டுக்கட்டையால் ஒரு போடு போட்டால் பரலோகத்தில் இருக்கும் பிதாவை அல்லவா பார்க்கப்போய் இருப்பார்கள்?

இப்போது கேன்சர், ப்ரெய்ன் டியூமர், இருமிக்கொண்டே பாட்டுப் பாடும் ஹீரோவுக்கு எல்லாம் குட்பை சொல்லிவிட்டார்கள். ஸ்கீஸோபெர்னியா, ஷார்ட் டைம் மெமரி லாஸ், செலக்டிவ் அம்னீசியா, பைபோலார் டிஸ்ஆர்டர், மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர், மெடுலா ஆப்லேங்கேட்டா என தமிழ் சினிமா பரிணாம வளர்ச்சியடைந்து நோயின் பெயர்களையும் இன்ன பிற வஸ்துக்களின் பெயர்களையும் அடிக்கடி உச்சரிக்கிறது.

அம்பி, ரெமோ அந்நியன் என கலங்கடித்திருப்பார் 'அந்நியன்’ விக்ரம். 'கண்ணுக்குள் நிலவு’ படத்தில் செலக்டிவ் அம்னீசியாவை ட்விஸ்ட்டாக வைத்து கதையைக் கந்தலாக்கி இருப்பார்கள். நடிப்பா நிஜமா என வகைப் பிரித்தறிய முடியாமல் பைபோலார் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவராகவே தன் அண்ணன் படங்களில் வாழ்ந்து வருகிறார் தனுஷ். 'எல்லாஞ் சரி... இந்த நோய் நெசமாவே இப்படித்தான் இருக்குமா பாஸ்?’ என நீங்கள் கேட்பது எனக்கும் கேட்குது.

குடிக்கும் முன் அம்பியாக இருக்கும் நீங்கள் குடித்த பிறகு தத்துவக் குத்தாகக் குத்தி எடுக்க மாட்டீர்களா? இதுவும்கூட மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்தான். கடன் கொடுத்த நண்பன் திரும்பக் கேட்கும்போது, 'எப்படா கொடுத்தே...?’ எனக் கேட்பதும் செலக்டிவ் அம்னீசியாவேதான்.

ஹலோ... கோபப்படாதீங்க. இந்தக் கட்டுரையை எழுதிவிட்டு அடுத்த கட்டுரையை எழுதப்போகும் எனக்கும் மல்ட்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ்ஸார்டர்தான் பாஸ்!

-ஆர்.சரண்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close