Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“நான் சல்மான் கான் மாதிரி!” - ஆர்யா அதிரடி

'' 'நான் கடவுள்’ படத்துக்குப் பிறகு, நான் என்னோட கேரியர்ல நான் கவனம் செலுத்திருக்கணும். ஆனா, எல்லாத்தையுமே ஜாலியா எடுத்துக்கிட்டு ஜாலியான படங்கள் மட்டும் பண்ணினேன். என்னோட பசியைத் தீர்க்கிற இரை மாதிரி கிடைச்சது  'இரண்டாம் உலகம்’. இன்னொரு பக்கம் ஜாலியான ரூட்ல 'ராஜா ராணி’. அடுத்தது தலகூட 'ஆரம்பம்’. மூணுமே மூணு ஸ்டைல் படங்கள். சந்தோஷமா இருக்கேன் பிரதர்!'' - மயக்கும் அதே பார்வையோடும் அழகான சிரிப்போடும் பேசுகிறார் ஆர்யா.

''என்னதான் சொல்லுங்க... எட்டு வருஷ கேரியர்ல என்னதான் ஹிட் கொடுத்தாலும், நடிச்சாலும் பிளேபாய்னுதானே பேர் வாங்கியிருக்கீங்க?''

''அந்த வருத்தம் எனக்கும் இருக்கு பிரதர். அந்தப் பேருக்கு நான் பண்ணின கேரக்டர்களும் ஒரு காரணம். பிளேபாய்னு பேர் வாங்கணும்னு எவனாவது ஆசைப்படுவானா? 'நம்மளை எப்படிக் கூப்பிட்டா என்ன? என் படம் ஓடுதா? நான் நடிச்ச படத்துக்கு நல்ல பேர் கிடைச்சாப் போதாதா?னு தோணும். ரொம்ப நல்லவன்னு பேர் வாங்கினா மட்டும் என் படம் எக்ஸ்ட்ரா ஓடப் போகுதா என்ன? நான் எதையுமே ஜாலியா எடுத்துப்பேன். இதையும் ஜாலியாவே எடுத்துக்கிறேன். என்னுடன் நடிக்கிற எல்லா ஹீரோயின்ஸ்கூடவும் என்னை சேர்த்துவைச்சு எழுதிட்டாங்க. 'உள்ளம் கேட்குமே’ பூஜாவில் ஆரம்பிச்சது இப்ப நயன், அனுஷ்கா வரைக்கும் எழுதிட்டாங்க. நஸ்ரியாவை மட்டும் இன்னும் ஏன் விட்டுவெச்சிருக்காங்கன்னு தெரியலை. ஒருவேளை நயன்தாராவும் இருக்கிறதால குழப்பம் ஆகிடும்னு யோசிக்கிறாங்கபோல. இதுக்காகவே இனிமே டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டா பண்ணலாம்னு இருக்கேன். சில கிசுகிசுக்களை நானே கிளப்பிவிடுறேன்னும் எழுதுறாங்க. அதெல்லாம் படிக்கும்போது காமெடியா இருக்கும். எந்த நியூஸும் என் பெர்சனல் வாழ்க்கையைப் பாதிச்சது இல்லை. என்னைப் பத்தி என் குடும்பத்துக்கு நல்லாவே தெரியும். அவங்க எதையும் கண்டுக்க மாட்டாங்க. அதனால பிரச்னை இல்லை பிரதர்!'' .

''மீடியா மேல செம கோபத்துல இருக்கீங்களோ?''

''நான் தெளிவா இருக்கேன் பிரதர். எனக்கு மீடியா தேவை. மீடியாவுக்கும் நான் தேவை. நல்லா எழுதும்போது போன் போட்டுப் பாராட்டுற பழக்கம் எனக்கு இல்லை. அப்போ காலி பண்ணி எழுதும்போது எப்படிக் கோபப்பட முடியும்? பல பெரிய ஸ்டார்ஸ் இருக்கிறப்ப நம்மளைப் பத்தியும் நாலு வரி எழுதுறாங்களேனு சந்தோஷப்பட வேண்டியதுதான்!''

''ஏன் ஒரு கல்யாணத்தை பண்ணி எல்லாத்துக்கும் ஃபுல்ஸ்டாப் வைக்க வேண்டியதுதானே?''

''கல்யாணமா? ஏன் பிரதர் இந்த கொலைவெறி? எனக்கு என்ன வயசாயிடுச்சுன்னு நினைக்கிறீங்க? சல்மான்கானைப் பாருங்க... இன்னும் கல்யாணம் பண்ணிக்காம ஜாலியா இருக்கார். நான் சல்மான்கான் மாதிரிதான் இருக்கப்போறேன். எங்க வீட்ல என்கிட்ட பேசிப் பார்த்து பேசிப் பார்த்து ஓய்ஞ்சு போய்ட்டாங்க. இப்பவே செம ஜாலியாத்தான் இருக்கேன். இனிமேல் ஒரு கமிட்மென்ட்டுக்குள்ள போய் ஏன் சிக்கி சின்னாபின்னம் ஆகணும் பிரதர்? இன்னும் சில வருஷங்கள் போகட்டும். ஆனா, லவ் மேரேஜ்தான். அதுல உறுதியா இருக்கேன். நமக்கு செட்டாகிற, நம்ம அலைவரிசைல வர்ற பொண்ணு இருந்தா, ஓ.கே.தான். அப்படி யாரையும் தோணுச்சுன்னா எந்தத் தயக்கமும் இல்லாம புரபோஸ் பண்ணிடுவேன். காலேஜ் படிச்சப்ப டெய்லி ஒரு லவ் வந்துச்சு. அப்போ அதைபெருசா எடுத்துக்கிட்டது இல்லை. இப்போ லவ் பண்ண ரெடியா இருக்கேன். ஒண்ணுமே சிக்க மாட்டேங்குது!''  

'' 'இரண்டாம் உலகம்’ பத்தி பேசலாமா?''

''டபுள் ஆக்ட் ரோல் பிரதர். ரெண்டுமே ரெண்டு வித்தியாச கேரக்டர்கள். செல்வராகவன் கதை சொல்லும்போதே, வித்தியாசமா, ஆச்சர்யமா இருந்தது. உள்ளுக்குள்ளே 'டேய் இதுதான்டா நீ தேடிக்கிட்டு இருந்த படம். விட்டுடாதே’னு தோணுச்சு. நீங்க படம் பார்க்கும்போது ரொம்ப வித்தியாசமா ஃபீல் பண்ணுவீங்க. இது என்னோட கேரியர்ல மறக்க முடியாத வருஷம். ஒரே நேரத்துல 'சேட்டை’, 'ராஜா ராணி’, 'இரண்டாம் உலகம்’, 'ஆரம்பம்’னு நான்கு படங்கள் பண்ணினேன். என் கேரியர்லயே ஒரே நேரத்துல இத்தனை படங்கள் நடிச்சது இப்பத்தான்!''

''அடுத்தது ஜனநாதன் படத்துல டபுள் ஹீரோவா நடிக்கிறீங்க...''

''ஜனநாதன்கூட எப்பவோ படம் பண்ணிருக்க வேண்டியது. ரொம்ப மிஸ் பண்ணிட்டேன். என் செட் ஹீரோக்களுக்கு லைஃப் கொடுத்தவர் அவர். இந்தப் படத்தில் எனக்கும் விஜய் சேதுபதிக்கும் செம டஃப் கேரக்டர். டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ல நடிக்கிறது ஒரு விளையாட்டு மாதிரி. அனுபவிச்சு ஆடலாம்!''

''நடிகர் சங்க விவகாரம் என்ன ஆச்சு?''

''இப்ப ஒண்ணும் வேணாம் பிரதர். இந்த நூற்றாண்டு விழா முடியற வரைக்கும் பேச வேணாம்னு சொல்லியிருக்காங்க. பெரியவங்க சொல்றதை கேட்டுக்குவோம்!''

''உங்க ஜாலி கேரக்டருக்கு பாலா, செல்வராகவன்லாம் எப்படி செட் ஆகிறாங்க?''

''இப்படித்தாங்க வெளில கிளப்பிவிடறாங்க. பாலா, செல்வராகவன்லாம் வெளிலதாங்க சீரியஸ்னு பேரு. அவங்களும் செம ஜாலி டைப்தான். நாமதான் அவங்களுக்கு ஒரு சீரியஸ் முகமூடியைப் போட்டுப் பார்க்குறோம். அதுக்காக நானும் சீரியஸான நேரத்துல காமெடி பண்றது கிடையாது. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்குல்ல. வேலைனு வந்துட்டா நான்லாம் வெள்¬ளைக்காரன் மாதிரி!''

''உங்க மேல மலையாளினு வைக்கப்படுற விமர்சனங்கள்...''

''எம்.ஜி.ஆரே மலையாளிதானே... முதலமைச்சர் ஆகி இன்னமும் தமிழ்நாட்டு மக்களோட மனசுல வாழலையா? ரஜினியை கூடத்தான் கன்னடர்னு சொன்னாங்க. எங்கே பொறந்தோம், எங்கே வளர்ந்தோங்கிறது முக்கியம் இல்லை. நான் பிறந்தது கேரளாவா இருந்தாலும், வளர்ந்தது படிச்சது எல்லாமே சென்னைதான். நானும் இந்தியாக்காரன்தாங்க!''

''ஜாலியாப் பேசறீங்களே தவிர, எந்த விஷயத்துக்கும் கருத்துச் சொல்ல மாட்டேங்கறீங்களே... பயமா?''

''ஐயையோ ஆளை விடுங்க... நமக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்துல வாயை விட்டு ஏன் மாட்டிக்கணும்? கேரளாவில் ஒருமுறை கேரளக் கலைஞர்களைப் பாராட்டிப் பேசப்போய், அதை அப்படியே மாத்திவிட்டு 'தமிழ் நடிகர்களை மட்டமாப் பேசிட்டேன்’னு கிளப்பிவிட்டுட்டாங்க. ஒண்ணுமே பேசாதப்பவே இப்படிக் கிளப்பிவிடுறாங்க? ஏதாவது கருத்து சொன்னா... என்ன ஆகும்? ஹீரோன்னா எல்லாத்துக்கும் கருத்து சொல்லணுமா என்ன?''

- க.ராஜீவ் காந்தி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close