Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிக்கு அம்மாவாக சமந்தா கலக்கும்...

''யாராச்சும் என்கிட்ட 'நல்லா இருக்கீங்களா’னு கேட்டா,   'நல்லா இருக்கேன்’னு சொல்ல மாட்டேனே..! அப்புறம் 'எதிர் நீச்சல்’ல மதன் பாப்பை நான் கலாய்ச்ச மாதிரி என்னைக் கலாய்ச்சுருவாங்கள்ல... அதனால, இப்பல்லாம் யாராவது, 'நல்லாருக்கீங்களா?’னு கேட்டா, 'நீங்க நல்லாருக்கீங்களா?’னு பதிலுக்குக் கேட்டு பல்பு வாங்காம தப்பிச்சுட்டு இருக்கேன். ஆனா, உங்ககிட்ட மாட்டிக்கிட்டேன்ல... தப்பிச்ச மாதிரிதான்!''

செம ஜாலியாக பேட்டிக்குத் தயாரானார் 'எதிர்நீச்சல்’ சதீஷ்.

''நீங்கதான் சந்தானத்துக்குப் போட்டினு ஒரு பேச்சு ஓடிட்டு இருக்கே... உண்மையா?''

''சந்தானம் வேற லெவெல்ல இருக்காருங்க. அவர் நூறு பேர் லிஸ்ட்ல முதல் இடத்துல இருக்கார்னா, அவருக்கு அடுத்து இருக்கிற 50 இடத்துக்கு ஆளே இல்லை. ஒரு கவுண்டமணி, ஒரு வடிவேலு மாதிரி, ஒரு சந்தானம்தான்!''

''எந்தப் படத்துலயுமே உங்களுக்கு ஜோடி கொடுக்க மாட்டேங்கிறாங்களே... ஏன்?''

''ஜோடி கேட்டு, வர்ற ஒண்ணு ரெண்டு வாய்ப்பையும் கெடுத்துக்க விரும்பலை பாஸ். சந்தானத்துக்கே இப்பதான் 'காதல்’ சந்தியா கிடைச்சிருக்காங்க. நமக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வரும். 'காதல்’ சந்தியா இல்லைனாலும், 'காதல்’ சரண்யா கிடைச்சாக்கூட போதும்!''

''டாஸ்மாக்ல சரக்கு வாங்கி, அம்மா குடிநீர்ல மிக்ஸிங் பண்ணி காலி பண்ணிட்டு, அம்மா மெஸ்ல சாப்பிட்டிருக்கீங்களா?''

''யாரும் நம்ப மாட்டீங்க, நானும் சிவகார்த்திகேயனும் ரொம்ம்ம்...ப நல்ல பசங்க. சரக்கு வாடையே எங்க மேல பட்டது கிடையாது. 'எதிர்நீச்சல்’ல ஒரு சிப் பீர் உள்ளே போனதுக்கே ரெண்டு பேரும் வாந்தி எடுத்துட்டு இருந்தோம். 'கேமரா ஆஃப் பண்ண பிறகும் உயிரைக் கொடுத்து நடிக்கிறாங்க பாருடா’னு கமென்ட் அடிச்சாங்க. சினிமால தம், தண்ணி பழக்கம் இல்லாத ரெண்டு பேருன்னா, அது நானும் சிவாவும்தான்!''

'' 'ரஜினிக்கு அம்மாவா நடிக்க ரெடி’னு மீனா சொல்லி இருக்காங்களே... இதைப் பத்தி சீரியஸா கருத்து சொல்லுங்களேன்!''

''சீரியஸா கருத்துச் சொல்ல இது என்ன காவிரி பிரச்னையா? மீனா என்ன, நாளைக்கே சமந்தாகூட அவருக்கு அம்மாவா நடிக்கலாம். ஏன்னா, அவர் சூப்பர் ஸ்டார்!''

''அனிருத்தும் ஆண்ட்ரியாவும் திரும்ப ஒண்ணு சேர்றதுதானே காதலுக்கு மரியாதை செய்ற மாதிரி இருக்கும்?''

'' 'நீங்க முட்டாளுங்கிறது உங்களுக்குத் தெரியுமா... தெரியாதா?’னு கேக்குற மாதிரி இருக்கு இந்தக் கேள்வி. அனிருத்கூட இருக்கும் நட்புக்கு மரியாதை செலுத்தி, இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாம விட்டுர்றேன்!''  

''நமீதா, அரசியல்ல சேர பொருத்தமான கட்சி எது?''

''என்கிட்ட கேட்டா... நமீதா, கட்சியில சேர்றதைவிட முதல்ல நல்ல ஜிம்ல சேர்ந்து உடம்பைக் குறைச்சா, நாட்டுக்கே நல்லது. 'ஏய்’, 'எங்கள் அண்ணா’-வுல இருந்த கட்டழகு நமீதாவை நாங்க திரும்பப் பார்க்கணும். வரணும்... நமீதா 'பழைய பன்னீர்செல்வமா’ வரணும்!''

''விஜயகாந்த் மேல இதுவரைக்கும் எத்தனை அவதூறு வழக்குகள் பதிவாகிருக்கு?''

''அடிக்கடி நிறையப் பதிவாகுது. பேப்பர் செய்திகள்ல எண்ணிப் பார்த்துச் சொல்லலாம். ஆனா, பேட்டி வர்றதுக்குள்ள இன்னும் இரண்டு சேர்ந்துட்டா என்ன பண்றது?''

''அதென்ன சினிமா புள்ளிகளுக்கு ஏதாவது பிரச்னைனா, நேரா கமிஷனர் ஆபீஸ்லயே போய் புகார் கொடுக்குறீங்க?''

'' 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ங்கிற மாதிரி கேக்கிறீங்க... புரியுது. இதுக்கு நான் என்ன பதில் சொன்னாலும் மாட்டுவேன். ஆங்... கமிஷனர் ஆபீஸ்லதாங்க கார் பார்க்கிங் பெரிய இடமா இருக்கும். அதனாலதான்!''

''சரி, உண்மை சொல்லுங்க... சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டதே நீங்கதானே?''

(கையெடுத்துக் கும்பிடுகிறார்) ''ரூட்டு நல்லா போய்ட்டு இருக்கு. தயவுசெஞ்சு கெடுத்துடாதீங்க. சிவாவை கரெக்ட் பண்றதுல எனக்கும் சூரிக்கும் பயங்கர போட்டி. அவர் நடிக்கிற கதை, சிட்டியா, வில்லேஜானு எதிர்பார்த்து காத்திருந்து சீட்டு பிடிக்கிறோம். வில்லேஜ் சப்ஜெக்ட்னு தெரிஞ்சா, டைரக்டர் கதை சொல்றதுக்கு முன்னாடியே ஒரு லுங்கியைக் கட்டிக்கிட்டு கிளம்பி வந்துடுறாரு சூரி!''

''சரி... அப்போ சிவகார்த்திகேயன் பத்தி யாருக்கும் தெரியாத ரகசியம் ஒண்ணு சொல்லுங்க..!''

''சிவா அஞ்சு கோடி சம்பளம் வாங்குறார்னு கௌப்பிவிடுறதெல்லாம் பொய். அவர் யார்கிட்டயும் சம்பளம்னு எதையும் ஃபிக்ஸ் பண்ணிக் கேக்குறதில்லை. வர்றவங்க தர்றதை வாங்கிக்கிறாரு. இன்னொண்ணு, அவர் சீக்கிரமே ஒரு படம் டைரக்ட் பண்ணுவாரு. அப்படி பண்ணும்போது என்னையே ஹீரோவா நடிக்கவைக்கிறதா எனக்கு சத்தியம் பண்ணியிருக்காரு. இதை நீங்க வேற யார்கிட்டயும் சொல்லிடாதீங்க!''

- க.ராஜீவ்காந்தி, படங்கள்: சோ.கேசவசுதன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close