Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைதியா சைலன்ட்டா இருங்க!

''வாழ்க்கை முழுக்க காதல், காமெடி, சமூகச் சிக்கல்னு நாம எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்னைகளும் ஒரு வார ட்ரிப்ல ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்ல கிடைக்கும். அப்படி ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்தான் இந்தப் படத்தின் தீம். அந்த ஸ்பாட்... மூணாறு.
 
காதல், குடும்பம், நட்புனு எல்லாப் பிரச்னைகளுக்கும் முக்கியமான காரணம்... கம்யூனிகேஷன் கேப்! ஒண்ணு சரியாப் பேசாம இருக்கிறது, இல்லைனா சரியாக் கேக்காம இருக்கிறது. அப்படி இந்தப் படத்தில் ஒரு வியாதிதான் வில்லன். அந்த வில்லன் என்ட்ரி கொடுத்தா, பாதிக்கப்பட்டவங்களுக்குக் குரல் போயிரும். அதனால உண்டாகும் தகவல் தொடர்பு சிக்கல்தான் படம். கேட்க வித்தியாசமா இருக்குல்ல... பார்க்கவும் புதுசா இருக்கும்!'' - நம்பிக்கையாகச் சிரிக்கிறார் பாலாஜி மோகன்.

அறிமுகப் படத்தில் 'காதலில் சொதப்புவது எப்படி?’ என்று கிளாஸ் எடுத்தவர், இப்போது தமிழ், மலையாளத்தில் 'வாயை மூடிப் பேசவும்’ என்று பேனர் பிடித்து வருகிறார். கேரள சினிமாவில் ஹிட் பிரபலங்களான மம்மூட்டி மகன் துல்கர் சல்மானையும் நஸ்ரியாவையும் தன் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

''பொதுவா முதல் பட இயக்குநர்கள் எப்பவும் ரெண்டு மூணு ஸ்கிரிப்ட் தயாரா வெச்சிருப்பாங்க. ஆனா, நான் பண்ணது 'காதலில் சொதப்புவது எப்படி?’னு ஒரே ஒரு ஸ்கிரிப்ட்தான். அடுத்து எந்த மாதிரிப் படம் பண்ணலாம்னு எக்கச்சக்கமா யோசிச்சப்ப சிக்கினதுதான் இந்த லைன்.

மலையும் மலை சார்ந்த ஏரியாவுமான மூணாறை மனசுல வெச்சு கதை எழுதிட்டேன். யோசிச்சுப் பார்த்தா, இது மலையாளத்துக்கும் 100 சதவிகிதம் பொருந்தும்னு தோணுச்சு. அப்படித்தான் இது ரெண்டு மொழிக்குமான சினிமாவா மாறுச்சு.

ஹீரோ, மலையாளத்தில் தெரிஞ்ச முகமா இருந்தா நல்லா இருக்கும்னு பேசிட்டு இருந்தப்போ, துல்கர் செட் ஆவார்னு தோணுச்சு. அப்புறம் நஸ்ரியா வந்தாங்க. படத்தில் நஸ்ரியா ஒரு டாக்டர். துல்கர் ஒரு சேல்ஸ் ரெப். நஸ்ரியா ரொம்ப அமைதி. துல்கர் கலகலனு பேசுற ஆளு. ரெண்டு பேருக்குமான எனிமி எனர்ஜி அட்டகாசமா வந்திருக்கு!''

''துல்கர் நடிப்பது சம்பந்தமா மம்மூட்டி எதுவும் உங்ககிட்ட விசாரிச்சாரா?''

''மம்மூட்டி போன்லகூட இது சம்பந்தமா ஒரு வார்த்தை கேட்கலை. 'உன் கதையை மட்டுமல்ல... லைஃபையும் நீயே முடிவு பண்ணிக்கோ’னு துல்கருக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்கார். ஆனா, துல்கர் கதை சொன்னப்போ கேட்டுட்டு, 'நல்லா இருக்கு. பெர்ஃபெக்ட்டாப் பண்ணு’னு சொன்னாராம்.

'என்னை ஒரு தமிழ் பையனா ரசிகர்கள் ஏத்துப்பாங்களா?’னு துல்கருக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. அவர் படிச்சு வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். அதனால் மலையாளக் கலப்பே இல்லாம சுத்தமா தமிழ் பேசுறார். 'பார்க்கவும் தமிழ் பையனாத்தான் தெரியிறீங்க. நிச்சயம் ரசிகர்கள் ஏத்துப்பாங்க’னு தைரியம் கொடுத்தேன். உற்சாகமா நடிச்சிருக்கார்!''

''ஒரே படத்தை ரெண்டு மொழியில் மாத்தி மாத்தி எடுக்கிறது எப்படி இருக்கு?''

''ரொம்பக் கஷ்டம். ஒரே ஷாட்டை வேற வேற மொழியில் அதே எனர்ஜியோட எடுக்கணும். என் அடுத்த படம் கண்டிப்பா பைலிங்குவல் கிடையாது. தனுஷ் - காஜல் அகர்வால் காம்பினேஷன்ல ஒரு படம் பேசிட்டு இருக்கோம். கதையின் ஒன்-லைன் தனுஷ§க்குப் பிடிச்சிருந்தது. காதல் கதை கிடையாது. வேற மாதிரி இருக்கும். 'வாயை மூடிப் பேசவும்’ ரிலீஸ் பண்ணிட்டு அந்த ஸ்கிரிப்ட் முடிக்கணும்!''

- ம.கா.செந்தில்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close